முயற்சி  செய்தால் சாதிக்கலாம்!

மைசூருவைச் சேர்ந்த ஹரி மற்றும் ஜானகிதாஸ் தம்பதியரின் ஒரே மகளான பூஜாவுக்கு, தன்னுடைய தந்தைக்கு "மார்ஷல் ஆர்ட்' எனப்படும் தற்காப்புக் கலையில் ஆர்வம் இருந்தது போலவே, இவருக்கும் எட்டு வயது முதலே மார்ஷல்
முயற்சி  செய்தால் சாதிக்கலாம்!


மைசூருவைச் சேர்ந்த ஹரி மற்றும் ஜானகிதாஸ் தம்பதியரின் ஒரே மகளான பூஜாவுக்கு, தன்னுடைய தந்தைக்கு "மார்ஷல் ஆர்ட்' எனப்படும் தற்காப்புக் கலையில் ஆர்வம் இருந்தது போலவே, இவருக்கும் எட்டு வயது முதலே மார்ஷல் ஆர்ட் கற்றுக் கொள்ள வேண்டுமென்ற ஆசை இருந்தது.

வீட்டில் தொலைக்காட்சியில் ஜாக்கிசான் படங்களை விரும்பி பார்ப்பார். பூஜாவுக்கு இருந்த ஆர்வத்தைக் கண்ட அவரது தந்தை கராத்தே பயிற்சி வகுப்பில் சேர்த்து விட்டார். காலையில் 5 மணிக்கெல்லாம் எழுந்து 8.கி.மீ தொலைவு தந்தையுடன் சேர்ந்து நடந்தே செல்வது, ஆரம்பத்தில் பூஜாவுக்கு சிரமமாக இருந்தாலும், பெற்றோர் கொடுத்த ஆதரவும் கராத்தே கற்றுக் கொள்ள வேண்டுமென்ற ஆர்வமும் இவரது முயற்சிக்குத் தடையாக இருந்ததில்லை.

இரண்டாண்டுகள் பயிற்சிக்குப் பிறகு கராத்தே போட்டிகளில் பங்கேற்கும் வகையில் திறமை பெற்றிருந்த பூஜா, முதன்முறையாக பெங்களூரில் நடந்த கராத்தே போட்டியில் கலந்து கொண்டார். ஆனால் வெற்றி பெற முடியவில்லை. இதனால், துவண்டு விடாமல் பூஜா அடுத்தடுத்து 20 ஆண்டுகளில் மாநிலத்தின் சார்பில் 60-க்கும் மேற்பட்ட போட்டிகளில் கலந்து கொண்டு 43 தங்கம், 28 வெள்ளி, 19 வெண்கலப் பதக்கங்களைப் பெற்றதோடு 14 முறை தேசிய அளவில் சாம்பியன் பட்டத்தையும் பெற்றார். அது மட்டுமல்ல தொடர்ந்து பல சாதனைகள் மூலம் முதல் பெண்மணி என்ற சிறப்பையும் பெற்றுள்ளார். தன்னுடைய அயராத முயற்சியால் மேன்மேலும் முன்னேறி வந்த பூஜாவுக்கு, தன்னுடன் பயிற்சிப் பெற்ற சக வீராங்கனைகள் கிக் பாக்ஸிங் பயிற்சி பெறுவது போல் தானும் கிக் பாக்ஸிங் பயில விரும்பினார்.

இடையில் ஆசிய வெண்கலப் பதக்கம் பெற்றவரும், அகாதெமி ஆஃப் செல்ப் டிபென்ஸ் தலைமை பயிற்சியாளருமான ஷர்ஷா என்பவர் பூஜாவை திருமணம் செய்து கொண்டார். பூஜாவின் விருப்பப்படி கிக் பாக்சிங் பயிற்சி பெற அனுமதித்தார். பயிற்சி பெற்ற சில ஆண்டுகளுக்குள் வோர்ல்ட் அசோசியேஷன் ஆஃப் கிக் பாக்சிங் ஆர்கனைசேஷன்ஸ் இந்தியா சார்பில் தேசிய அளவில் நடைபெற்ற கிக் பாக்ஸிங் போட்டியில் கர்நாடகா சார்பில் கலந்து கொண்ட முதல் வீராங்கனை என்ற சிறப்பைப் பெற்றதோடு, கே1 ஸ்டைலில் இரண்டாவது டிகிரி பிளாக் பெல்ட் விருது பெற்றார். தொடர்ந்து மைசூருவில் ஏராளமான பெண்களுக்கு கிக் பாக்ஸிங் பயிற்சி அளிக்கத் தொடங்கினார். இதனால் பூஜாவுக்கு சர்வதேச போட்டிகளில் நடுவராகும் வாய்ப்பு கிடைத்ததோடு "வேர்ல்ட் உமன் இன் ஸ்போர்ட்ஸ்' கமிட்டி உறுப்பினராகவும் தேர்வு பெற்றார். இது அவருக்கு ஆசியாவின் முதல் பிரதிநிதி என்ற அந்தஸ்தை அளித்ததோடு, இந்திய உமன்ஸ் கமிட்டி தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

""கராத்தே மற்றும் கிக் பாக்ஸிங் பயிற்சி பெறும்போது யாரும் என்னை பெண் என்று வெறுப்புணர்வை காட்டிய தில்லை. தற்காப்பு கலையை கற்றுக் கொள்ள வேண்டுமென்று 20 ஆண்டுகளாக எடுத்துக் கொண்ட முயற்சிகள் வீண் போகவில்லை. இன்று இந்த பதவியை அடைய 8 ஆண்டுகள் காத்திருந்தேன். இது என்னுடைய கனவும் கூட இதற்காக எனக்கு பயிற்சியளித்த குரு சந்தோஷ் அகர்வாலுக்கு நன்றி கூற விரும்புகிறேன் என்று கூறும் பூஜாவுக்கு தற்போது 30 வயதாகிறது.

தலைமை பொறுப்பையும் ஏற்றுள்ள முதல் பெண்மணியான பூஜா, கர்நாடகாவில் 18 மாவட்டங்களில் கிக் பாக்ஸிங் பயிற்சி நிலையங்களை அறிமுகபடுத்தியுள்ளார். தேசிய அளவில் ஆரம்ப மற்றும் நடுத்தர பள்ளிகளில் கிக் பாக்ஸிங் பயிற்சியை அறிமுகப்படுத்திய முதல் பெண்மணி என்ற சிறப்பைப் பெற்றுள்ள பூஜா, மைசூரு, பெங்களூரு நகரங்களில் மட்டும் 16 பள்ளிகளில் கிக் பாக்ஸிங்கை அறிமுகப்படுத்தியுள்ளார்.

அண்மையில் கோவாவில் நடைபெற்ற இந்திய சீனியர்ஸ் நேஷனல் கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பதற்காக கர்நாடகாவிலிருந்து 103 கிக் பாக்சர்களை அழைத்து சென்ற வகையில் 64 பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்ததால், தேசிய அளவில் 18-ஆவது இடத்தில் இருந்த கர்நாடகா மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இதன்மூலம் தேசிய அளவில் பயிற்சியாளர் தகுதியைப் பெற்ற முதல் தென்னிந்தியப் பெண் என்ற பெருமையும் பூஜாவுக்கு கிடைத்துள்ளது. தற்காப்புக் கலையான கராத்தே, கிக்பாக்ஸிங் போன்றவைகளை கற்பது பெண்களுக்கு ஏற்றதல்ல என்ற கருத்தை தகர்த்தெறிந்து பெண்களை ஊக்கப்படுத்துவது தனக்கு பிடித்திருக்கிறது. பயிற்சி பெறும் பெண்கள் ஆபத்தான நேரத்தில் தங்கள் சக்தியை வெளிப்படுத்தவும். வாழ்க்கையில் எதையும் எதிர்கொள்ளும் தைரியத்தையும் பெறுவது நல்லது'' என்கிறார் பூஜா ஷர்ஷா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com