கதை சொல்லும் குறள் - 73: அச்சம் போக்கு!

கதை சொல்லும் குறள் - 73: அச்சம் போக்கு!

சென்னையின் வருடாந்திரப் புத்தகக் கண்காட்சி அமோகமாக நடந்துக் கொண்டிருந்தது.


சென்னையின் வருடாந்திரப் புத்தகக் கண்காட்சி அமோகமாக நடந்துக் கொண்டிருந்தது. பல நூற்றுக்கணக்கானப் பதிப்பகங்கள் தங்களுடைய வெளியீடுகளைத் தங்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட இடங்களில் அழகாக அடுக்கி வைத்திருந்தனர்.

பல பிரபல எழுத்தாளர்களின் படைப்புகள் தொடங்கி, சிறு எழுத்தாளர்கள், அறிமுகமாகி இருப்பவர்கள் எழுதிய புத்தகங்கள் என்று குவிந்துக் கிடந்தன. சிறுவர்களுக்கான புத்தக ஸ்டால்களும் ஆங்காங்கே முளைத்து இருந்தன.

கடந்த சில வருடங்களாகவே புத்தகங்களை வாங்க மக்கள் புற்றீசல்களாகக் கிளம்பி புத்தகக் கண்காட்சியை முற்றுகையிடத் தொடங்கி விட்டனர். புத்தகங்களைப் படிக்கும் வழக்கம் மக்களிடையே அதிகரித்து விட்டதை இது காட்டியது.

மக்களின் கூட்டம் பெருகப் பெருக, புத்தகக்கண்காட்சியை ஏற்பாடு செய்யும் கமிட்டி, மக்களை மேலும் கவரப் பலவகையான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யத் தொடங்கியது.

பட்டிமன்றங்கள், தமிழ் நாடகங்கள், நாட்டிய நாடகங்கள், கம்பராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களில் சில தலைப்புகளைத் தேர்ந்தெடுத்து, பிரபல பேச்சாளர்களை அழைத்துப் பேச வைப்பது என்று புத்தகக் கண்காட்சி, பெருவிழாவாகக் கொண்டாடப்பட்டது.

காலை பதினொரு மணிக்குக் கண்காட்சி ஆரம்பமாகி, இரவு ஒன்பது மணி வரை நீளும். காலையில் இருந்தே கூட்டம் வரத் தொடங்கினாலும், மாலை ஆறு மணிக்கு மேல் ஜனங்கள் திரளாக வரத் தொடங்குவர். தங்களுக்கு வேண்டிய புத்தகங்களை வாங்கிக்கொண்டு திடலின் நடுவே அமைக்கப்பட்டிருக்கும் அரங்கில் இருக்கும் நாற்காலிகளில் சாய்ந்து அமர்ந்துக் கொண்டு அரங்கின் நிகழ்ச்சிகளை ரசிப்பார்கள்.

அரங்கில் நாடகம், நடனம், கூத்து போன்றவை நடக்க, சற்றுத் தள்ளி போடப்பட்டிருக்கும் மேடையில் கருத்தரங்குகளும் நடக்கும்.

அன்று மாலை நான்கு மணியிலிருந்தே புத்தகக் கண்காட்சியை நோக்கி மக்கள் திரள் திரளாகக் குவியத் தொடங்கினர். விஷயம் இதுதான். ஆன்மிக சொற்பொழிவாளர் சுப்பிரமணிய சாஸ்திரிகளின் மகன் பிந்துமாதவன் அன்று கம்பராமாயணத்தைப் பற்றிப் பேசப் போகிறார். அதைக் கேட்க வேண்டும் என்பதற்காகவே பெரும் கூட்டம் ஆவலோடு வந்திருந்தது.

பிந்துமாதவன் சாதாரணப் பேச்சாளர் இல்லை; மிக உயர்ந்த வேதங்களைப் படித்தவர். கம்பராமாயணத்தையும், மகாபாரதத்தையும் கரைத்துக் குடித்தவர். வேத ஆராய்ச்சிகளில் ஈடுபட்டவர். பத்து வயதில் கீதையின் ஸ்லோகங்களைத் தங்கு தடையில்லாமல் கூறித் தங்கப்பதக்கத்தைத் தட்டிச் சென்றவர், பதஞ்சலி பல்கலைக்கழகத்தில் படித்தவர். இப்படிப்பட்ட பல சாதனைகளைத் தன் வெற்றி மகுடத்தில் சுமப்பவர்.

அன்று பிந்துமாதவனுக்குக் கொடுக்கப்பட்டிருந்த தலைப்பு ஆரண்ய காண்டத்தில் கம்பனின் கவித்திறன் என்பதாக இருந்தது. பெரிய படிப்பாளி, கம்பராமாயணத்தில் பல ஆராய்ச்சிகளைச் செய்து பல கட்டுரைகளை எழுதியவர் என்று மிகுந்த எதிர்பார்ப்புடன் கூட்டம் கடலெனத் திரண்டு இருந்தது.

அரங்கின் திரை விலகியது. மேடையின் நடுநாயகமாக நெற்றியில் நாமத்துடன், பஞ்சக்கச்சம் சகிதமாக அறிவொளி வீசும் கண்களுடன் பிந்து மாதவன் அமர்ந்திருந்தார்.

அறிமுகம் செய்து வைக்கப்பட்ட பிறகு பிந்துமாதவன் பேச எழுந்தார். விண்ணைப் பிளக்கும் அளவிற்குக் கரகோஷம் எழுந்து அடங்கியது. பிந்துமாதவனின் சாதனைகளையும், பெற்ற விருதுகளையும் பட்டியலிட்டு அறிமுகப் பேச்சாளர் சொன்னதினால் மக்கள் மனம் மகிழ்ந்து இப்படிக் கைத்தட்டினார்கள் போலும்.

பிந்துமாதவனுக்கு பேசிப் பழக்கம் உண்டு. ஆனால் இவ்வளவு பெரிய கூட்டத்தை வாழ்நாளில் இப்பொழுதுதான் பார்க்கிறார். பயத்தினால் நாக்கு புரள மறுத்தது. கை, கால்கள் சில்லிட்டுப் போய்விட்டன. இருதயம் வெடித்து விடுமோ என்ற அளவுக்கு வேகமாகத் துடித்தது. உடம்பு லேசாக நடுங்கியது. பயத்தால் காய்ந்து போன உதடுகளை உமிழ்நீரைக் கொண்டு ஈரப்படுத்திக் கொண்டார்.

இந்த அரங்கில் பேசுவதற்காக மூன்று நாட்களாகத் தயாரித்து வைத்திருந்த குறிப்புகள் எல்லாம் அவர் நினைவில் இருந்து மறையத் தொடங்கின.

கம்பராமாயணத்தில் பல பாடல்களை நித்திரை நடுவே எழுப்பிக் கேட்டாலும் அப்படியே சொல்பவர் இன்று இந்த மேடையில் ஒரு பாடலை முழுமையாகச் சொல்ல முடியாமல் திணறினார்.

எப்படியோ பேச்சை ஆரம்பித்து அது போகும் திசை தெரியாமல் பேசிக் கொண்டிருந்தார். ஆவலோடு கேட்க அமர்ந்திருந்த கூட்டம் முதலில் திகைத்தது, பின்பு குழம்பியது, வெறுப்புற்றது, நிராசையுடன் மெதுவாகக் கலையத் தொடங்கியது.

பிந்துமாதவன் பேசத்தொடங்கி இருபது நிமிடத்தில் பாதி அரங்கம் காலி ஆகிவிட்டது.

சற்றுத் தள்ளி இருந்த நாடக அரங்கத்தில் அன்று கூத்து நடந்துக் கொண்டிருந்தது. தலைப்பு சுந்தர காண்டம். அங்கு சற்று நேரத்தில் கூட்டம் உட்கார இடம் இல்லை என்றாலும் நின்று கொண்டு கூத்தை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தது. அவ்வப்பொழுது இடி முழுக்கம் போல் கைதட்டல் எழுந்து எழுந்து அடங்கிக் கொண்டிருந்தது.

இலக்கணத் தமிழ் என்று எல்லாம் ஒன்றும் இல்லை. சாதாரண நாட்டுப்புறத் தமிழிலில் கூத்துக் கலைஞர்கள் பல பாடல்களைப் பாடி நடனம் ஆடிக் கொண்டிருந்தனர். சுந்தர காண்டத்தின் தலைவனான ஹனுமான் எப்படி ராம் என்ற ஒரு மந்திரச் சொல்லின் சக்தியின் மூலம் இலங்கையை அடைந்தார். சீதையைக் கண்டார், இராவணனுக்கு அறிவுரை கூறினார், வாலில் வைக்கப்பட்ட தீயால் இலங்கையைப் பற்றி எரிய வைத்தார் என்பதைப் பற்றியெல்லாம் பாடி, ஆடி, அபிநயத்துக் காட்டி மக்களின் மனதில் ராமாயணத்தை அருமையாகப் பதிவு செய்ய, மெத்தப் படித்த மேதாவியான பிந்துமாதவன், அச்சத்தினால் பேச்சுத் திறமையை இழந்து, வாயில் வந்ததையெல்லாம் உளறிக் கொட்டிக் கொண்டிருந்தார். இதைத்தான் வள்ளுவர் கோழைகளின் கையில் வாள் இருந்து என்ன பயன் என்றாரோ!

வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு? நூலொடென்
நுண்ணவை யஞ்சு பவர்க்கு?

( குறள் எண்: 726)

பொருள் :

கோழைகளுக்குக் கையில் வாள் இருந்தும் பயனில்லை. அவையில் பேசிட அஞ்சுவோர் பலநூல் கற்றும் பயனில்லை.

(தொடரும்)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com