சாதனை படைக்கவே சோதனைகள்..! 

சாதாரணக் குடும்பத்தில் பிறந்து திருமணத்துக்குப் பின்னர் பல மொழிகளைக் கற்று ,  " மதுமிதா'  என்னும் பெயரில் பல நூல்களை எழுதியிருக்கிறார் கவிதாயினி மஞ்சுளாதேவி.
சாதனை படைக்கவே சோதனைகள்..! 

சாதாரணக் குடும்பத்தில் பிறந்து திருமணத்துக்குப் பின்னர் பல மொழிகளைக் கற்று, "மதுமிதா' என்னும் பெயரில் பல நூல்களை எழுதியிருக்கிறார் கவிதாயினி மஞ்சுளாதேவி.

ராஜபாளையத்தில் வசிக்கும் இவரிடம் பேசியபோது:

"எனது தாத்தா சுதந்திரப் போராட்டத் தியாகி காந்தி அரங்கசாமிராஜா. இதனால் சிறுவயது முதலே தேசப் பற்றும், மொழிகள் மீதான ஆர்வமும் அதிகம் வந்துவிட்டது. எனது கனவுகளுக்கு பெற்றோர் ரகுபதிராஜா - பாக்கியலட்சுமி ஆகியோர் எப்போதும் உறுதுணை.

எம்.ஏ. ஆங்கில இலக்கியம், டிப்ளமோ இன் போர்ட்போலியோ மேனேஜ்மெண்ட் படித்தேன். எனது தாய் மொழி, தெலுங்கு. ஹிந்தி, சம்ஸ்கிருதத்தில் சான்றிதழ் படிப்புகளைப் படித்துள்ளேன். எனக்கு கணவர் ரெங்கனாத ராஜா, மகன் பத்ரிநாத், மகள் அம்ருதா ப்ரீதம் ஆகியோர் பக்கபலம்தான்.

வீட்டுப் பணிகளை முடித்துவிட்டு, இரவு நேரங்களில் கண்விழித்து இலக்கியப் பணியைத் தொடர்வேன்.

எனது கணவரை புற்றுநோய் பலி கொண்டதும், பல மாதங்கள் முடங்கினேன். பின்னர், என்னை நானே மீட்டெடுத்துகொண்டு எழுத்துப் பணியைத் தொடர்ந்தேன்.

பிரபலங்களின் மொழிபெயர்ப்பு நூல்கள், 18 பத்திரிகை ஆசிரியர்களின் நேர்காணல்களின் தொகுப்பு.. என்று எனது நூல்களின் பட்டியல் நீள்கிறது. விரைவில் 5 நூல்கள் வெளிவரவுள்ளன.

"மதுமிதாவின் காற்றுவெளி' என்னும் பெயரில் வலைப்பூவும், யூ டியூப் சேனலிலும் இலக்கியப் பணியை மேற்கொண்டு வருகிறேன். நூற்றுக்கணக்கான ஆடியோ நூல்கள், வீடியோக்கள் வெளியிட்டுள்ளேன்.

அறுநூற்றுக்கும் மேற்பட்ட நேர்காணல்களைச் செய்துள்ளேன்.

தமிழ்குஷி எஃப். எம். இணைய வானொலியில், "ஆட்டோகிராப்' என்னும் நிகழ்ச்சியில் அறுபதுக்கும் மேற்பட்ட நேர்காணல்களைச் செய்துள்ளேன். பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளேன்.

மொழிபெயர்ப்புக்கான "திசைஎட்டும் விருது', மணிமேகலை மன்றத்தின் இலக்கியச் சாதனையாளர் விருது ,அப்துல் கலாம் நினைவு சாதனையாளர் விருது, பல்துறை இலக்கியச் செல்வி விருது, கவிக்கோ அப்துல் ரஹ்மான் நினைவு விருது, சாவித்திரிபாய் புலே விருது, அக்கமகாதேவி விருது, ஸ்பாரோ இலக்கிய விருது, ஸ்ரீ சக்தி விருது, ஜி. நாகராஜன் நினைவு இலக்கிய சிற்பி விருது , தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை சார்பில் ,தாரகை விருது என பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளேன்.

இந்தியா மட்டுமின்றி, இலங்கை, அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளிலும் சர்வதேசக் கவிஞர்கள் முன்னிலையில், உரைநிகழ்த்தியுள்ளேன்.

ராஜபாளையத்தில் பெண்கள்- குழந்தைகளுக்கான தனி நூலகத்தை தமிழக அரசு சார்பில் அமைக்கக் காரணமாக இருந்தேன். 1991-இல் இருந்து இந்த நூலக வாசகர் வட்டத் தலைவியாகத் தொடர்ந்து சேவைப் பணியில் இருக்கிறேன்.

ரத்த தானம் செய்தல், பார்வையற்றோருக்கு உதவுதல், குடும்பப் பிரச்னைகளில் பாதிக்கப்பட்டோருக்கு நல்லதொரு ஆலோசனைகள் என எனது சேவைப் பணிகள் தொடர்கின்றன, சாதனைகள் படைப்பதற்காகவே சோதனைகள் உருவாகின்றன'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com