மருத்துவம் பயிலும் மூதாட்டி

மருத்துவப் படிப்புக்கான தேவை அதிகமாக உள்ளது. மருத்துவக் கல்வியில் சேர "நீட்'  தேர்வு கட்டாயமாக்கப்பட்ட பிறகு, மாணவர்கள் பள்ளிக்கல்வியின்போதே கடும் முயற்சிகளை மேற்கொள்கின்றனர். 
மருத்துவம் பயிலும் மூதாட்டி
Published on
Updated on
1 min read

மருத்துவப் படிப்புக்கான தேவை அதிகமாக உள்ளது. மருத்துவக் கல்வியில் சேர "நீட்' தேர்வு கட்டாயமாக்கப்பட்ட பிறகு, மாணவர்கள் பள்ளிக்கல்வியின்போதே கடும் முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.

நாட்டில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரித்துகொண்டே இருந்தாலும், தன்னிறைவு என்பது கேள்விக்குறியே. பலரும் மருத்துவம் படிக்க விரும்பி, பல ஆண்டு முயற்சித்தும் வாய்ப்புக் கிடைக்காமல் போகும்போது மாற்றுக் கல்வியை தேர்ந்தெடுத்து பயணிக்கத் தொடங்கிவிடுகின்றனர். பலர் உக்ரைன் போன்ற வெளிநாடுகளில் படித்தாலும் உலக நடப்புகளின் அடிப்படையில் அதுவும் பிரச்னையாகிவிடுகிறது.

இந்த சூழலில், இளமைக்கால எண்ணப்படி 63 வயது பேரிளம் பெண் ஒருவர் எம்.பி.பி.எஸ். முதலாமாண்டை காரைக்கால் மருத்துவக் கல்லூரியில் படிக்கத் தொடங்கி, நீட் தேர்வு எழுத திட்டமிடும் இளம் மாணவ மாணவியருக்கு ஊக்கமாகத் திகழ்கிறார்.

மத்திய பிரதேசத்துக்கு உள்பட்ட அம்லா பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் வினோத் யாதவ் மனைவி சுஜாதா ஜடா (63). இவர்களது மகன் மருத்துவர். மருத்துவராக வேண்டும் என்கிற எண்ணம் சுஜாதா ஜடாவுக்கு இருந்த நிலையில், ராணுவத்தில் பணி கிடைத்துள்ளது. பணிக் காலத்துக்குப் பின் வங்கிப் பணி. அதிலிருந்து ஓய்வு பெற்றார்.

இளமை கால எண்ணத்துக்கு உயிர் கொடுத்து அதை நிறைவேற்றுவதற்கான காரணங்களைப் பல நிலைகளில் ஆராய்ந்த இவர், அதற்காக முறையாகப் பயிற்சி எடுத்து நீட் தேர்வு எழுதினார்.

2-ஆவது முறையாகத் தேர்வு எழுதி அதில் வெற்றி பெற்ற இவர், காரைக்கால் விநாயகா மிஷன் மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு எம்.பி.பி.எஸ். படிப்பை கடந்த ஜனவரியில் தொடங்கியுள்ளார்.

பிளஸ் 2 முடித்து மருத்துவப் படிப்பில் சேர்ந்திருக்கும் நிலையில், கல்லூரி பேராசிரியரைக் காட்டிலும் அதிக வயதில், வகுப்பறையின் முதல் இருக்கையில் உட்கார்ந்து பயின்று வருகிறார் சுஜாதா ஜடா.

இதுகுறித்து அவர் கூறியது:

""மருத்துவம் பயின்று மருத்துவமனை இல்லாத பகுதியில் மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்பது எனது நீண்ட கால விருப்பம். அதற்கான வாய்ப்பு தற்போதுதான் கிடைத்துள்ளது. நீட் தேர்வில் கடுமையாக முயற்சித்து வெற்றி பெற்றேன்.

மருத்துவக் கல்லூரியில் அனைவரும் இளம் பருவத்தினராக இருந்தாலும், அனைவரும் தமது சக மாணவராகவே கருதி பழகுகின்றனர். தன்னம்பிக்கை இருந்தால் யாராலும் சாதிக்க முடியும். நிச்சயமாக எனது எண்ணப்படி நல்ல முறையில் மருத்துவக் கல்வியை முடித்து மருத்துவச் சேவையை செய்வேன்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com