தீபாவளி பட்சணமும் தன்னம்பிக்கை பாடமும்...

எத்தனை எத்தனையோ தலைப்புகளில் தன்னம்பிக்கை பயிலரங்குகளை நடத்திக் கொண்டிருந்த மேகலாவுக்கு ஒரு வித்தியாசமான தலைப்பில் பயிலரங்கு ஒன்றை நடத்த சொல்லி ஒரு பிரபலமான பெண்கள் 
தீபாவளி பட்சணமும் தன்னம்பிக்கை பாடமும்...


எத்தனை எத்தனையோ தலைப்புகளில் தன்னம்பிக்கை பயிலரங்குகளை நடத்திக் கொண்டிருந்த மேகலாவுக்கு ஒரு வித்தியாசமான தலைப்பில் பயிலரங்கு ஒன்றை நடத்த சொல்லி ஒரு பிரபலமான பெண்கள் அமைப்பிலிருந்து அழைப்பு வந்தது. தலைப்பு இதுதான் "தீபாவளி பட்சணங்கள் நடத்தும் தன்னம்பிக்கை பாடங்கள்'. சற்றே சவாலான ஒரு தலைப்புதான் என்றாலும் அனைவருக்கும் நிச்சயம் பயன்படும் தலைப்பு அதுதான் என்று ஆசை ஆசையாக தன்னை தயார் செய்து கொண்டு போனாள் மேகலா.

பயிலரங்கு நடந்த அன்று பரஸ்பர அறிமுகத்துக்குப் பின்னர், மேகலா பேசுகையில்:

'வாழ்க்கையில் எந்த ஒரு விஷயத்தில் நாம் வெற்றி பெற வேண்டும் என்றாலும், முதல்ல "கோல் செட்டிங்' செய்ய வேண்டும். இதுதான் என் குறிக்கோள்; இதுதான் என் லட்சியம்னு முடிவே செய்யாம, வாழ்க்கை போற போக்குலேயே போய்ட்டு இருந்தோம்னா நம்ம வாழ்க்கை சலிச்சு போயிடும். இந்த "கோல் செட்டிங்' தீபாவளி பட்சணங்கள் தயார் செய்யறதுலேயும் ரொம்ப ரொம்ப முக்கியம். எல்லா வெப் சைட்ஸ்களையும் பார்த்துட்டு ஏகப்பட்ட ரெசீப்பீஸ் எல்லாம் பார்த்து வெச்சிட்டு எத செய்யறது, எது ஈஸியா வரும்னு வாட்ஸ் ஆஃப்பில எல்லார்கிட்டேயும் கேட்டுட்டு பட்சணங்கள் செய்யறதெல்லாம் சரியா வராது. இந்தத் தீபாவளிக்கு இததான் செய்ய போறேன்னு முதல்ல தீர்மானம் செஞ்சுக்கனும். ஓ. கே. வா? அப்படீங்கறது ஒரு தன்னம்பிக்கைக்கான தாரக மந்திரம். அதே மந்திரம் இதுக்கும் வொர்க் ஆகும். எப்படின்னு தான எல்லாரும் ஆச்சரியமா பார்க்கறீங்க?

மத்த விஷயங்களுக்கு சொல்லுவோம். இதுதான் நான் செய்ய போறேன்னு தீர்மானம் செய்யும்போது அங்க தனித்து வந்துடும். 25 மைசூர் பாக்கு தான் பண்ண போறேன். இல்லை அரை கிலோ மிக்சர்தான் செய்ய போறேன்னு முன் கூட்டியே ப்ளான் பண்ணிட்டீங்கனா ? கரெக்டா அதுக்கு ஏத்தா மாதிரி சாமான்கள்தான் வாங்குவீங்க.. எக்கசக்க எண்ணெய் ஏகப்பட்ட நெய் எல்லாம் வாங்கி வீண் அடிக்க மாட்டீங்க. அடுத்தது "சாதிப்பது' நாம எடுக்கற முயற்சி நிச்சயம் நல்ல பலனை கொடுத்தே தீரும். அதாவது செய்ய போற ஸ்வீட்டும் காரமும் சூப்பரா வரும். அப்படீங்கற நம்பிக்கையை முதல்ல மனசுல தேக்கி வெச்சுக்கிட்டு அப்பறம்தான் கரண்டிய தொடனும். சின்ன சின்ன முயற்சிகள் எடுத்து அதுல வெற்றி காணும்போதுதான், அது நம்மள மேல மேல இன்னும் பெரிய பெரிய முயற்சிகள் எடுக்கத் தூண்டும்.

எடுத்ததுமே 4 கிலோவுக்கு ஸ்வீட்ஸ் பண்ண போறேன்; அப்படி இப்படீன்னு எக்கசக்காமா செய்யறதுக்கு முயற்சி எடுக்காம, கொஞ்சமா செஞ்சு பார்ப்போம். அது நமக்கு நல்லபடியா வர வர தான் நமக்குள்ள ஸ்வீட்ஸ் தைரியமா செய்ய தன்னம்பிக்கை வரும்னு நினைச்சுக்கிட்டு செய்ய ஆரம்பிக்க வேண்டும்.

அடுத்தது, அளவு நம்மோட வெற்றிகள் அளவிட முடியறா மாதிரி இருக்கனும், காலையில 5 மணிக்கு எழுந்துக்க வேண்டும்னு கோல் செட் பண்ணி இருந்தீங்கன்னா, ஒரு வாரத்துல எத்தனை நாள்கள் அதை கடைபிடிக்க முடிஞ்சதுன்னு எண்ணிக்கை வெச்சுக்க ஆரம்பிங்கன்னு பொதுவாகச் சொல்வோம். தீபாவளி ஸ்வீட் தயாரிக்கறதுலேயும் அதே ஃபார்முலா தாங்க? ஒரு பத்து ஸ்வீட் நல்லா வந்திருக்கு. இதே மாதிரி தொடர்ந்து செஞ்சா இன்னும் 20 ஸ்வீட்களும் நல்லா வரும்னு தொடர்ந்து செய்ய ஆரம்பிப்போம் .

யதார்த்தம் நாம செய்யற விஷயத்தை, நம்மோட லட்சியத்தை முதல்ல நாம முழு மனசோட நம்பனும். நம்மோட திறமைய மனசுல நினைச்சுக்கிட்டு அதுக்கு தகுந்தா மாதிரி உண்மையாக ஒரு லட்சியத்தை விதைச்சுக்கனும். என் வீட்டுக்காக நான் ஸ்வீட்ஸ் தயார் பண்ண போறேன்னு கோல் செட் பண்ணிக்கிட்டோம்னா அதுல உண்மைத் தன்மை நிச்சயம் இருக்கும். எடுத்த எடுப்புலேயே இப்போலாம் நிறைய பேர் தீபாவளி ஸ்வீட்ஸ், ஸ்னாக்ஸ் எல்லாம் செஞ்சு அதையே ஒரு பிஸினஸா செய்யறாங்க?

நானும் அதே மாதிரி தான் செய்யப்போறேன்னு ஆரம்பிச்சா நம்ம மனசே சொல்லிடும். இதெல்லாம் உனக்கு சரிப்பட்டு வரவே வராதுன்னு. நம்ம மனசுக்கு ஒப்பாம பொய்யா ஒரு விஷயத்தை நான் செய்ய போறேன்னு ஆரம்பிச்சா அதோட முடிவு நமக்கு தோல்விய தானே கொடுக்கும்? கடைசியா வரது என்ன தெரியுமா? குறிப்பிட்ட நேரத்தில் அதாவது எந்த ஒரு முயற்சியை செய்வதற்கும் ஒரு காலம் நேரம் தீர்மானித்து கொள்வது. உடம்பு இளைக்கனும் அப்படீன்னு மேம்போக்கா சொல்லாம, 6 மாசத்துக்குள்ள உடம்பு இளைக்கனும் அப்படீன்னு ஒரு காலத்தை நிர்ணயம் செஞ்சுக்கிட்டு முயற்சில இறங்கும் போது தான் அங்க வெற்றி சாத்தியமாகும். அதே ஃபார்முலா தான் கிட்டதட்ட தீபாவளி பட்சண தயாரிப்புக்கும். 12-ஆம் தேதிதான் தீபாவளி. முதல் முயற்சியில சரியா வராம போச்சுன்னா மீண்டும் இந்தத் தேதிக்கு செய்யப்போறேன்னு.. தேதிய தீர்மானம் செஞ்சுட்டு ஸ்வீட்ஸ் பண்ண ஆரம்பிச்சீங்கன்னா, பாதி வெற்றி கிடைச்சாச்சுன்னு அர்த்தம்'' என்று பேசிக்கொண்டே பேசினார்.

விறுவிறுப்பாகவும், வியப்பாகவும் பயிலரங்கு போய் கொண்டிருப்பதை பார்த்து மேகலாவுக்கு உள்ளுக்குள் ஒரே சந்தோஷம். டக்கென்று ஒரு கேள்வி வந்தது கூட்டத்திலிருந்து, 'மேடம் நீங்க சொல்றதெல்லாம் கேட்க நல்லாதான் இருக்கு. ஆனா ப்ராக்டிக்கலா நிறைய விஷயங்கள் வொர்க் ஆகாதுங்க. நான் ஒவ்வொரு தடவையும் ஆசை ஆசையா நம்ம கையாலேயே ஸ்வீட்ஸ் செய்யனும்னு நினைச்சு தான் செய்வேன். அது ஓரளவு சுமாரா வரும். ஆனா வீட்ல இருக்கறவங்க எல்லாம் அதை பத்தி பாராட்டி ஒரு வார்த்தை கூட சொல்லாம, இது சரி இல்ல, ஸ்வீட்டோட ஷேப் சரியா இல்ல, மிக்சர்ல உப்பு கம்மி, கரகரப்பாவே இல்ல அப்படீன்னு குறை சொல்லும் போது இனிமே செய்யவேக் கூடாதுன்னு தோண ஆரம்பிச்சிடும். கேலி பேச்சு வேற வரும்'' என்றாள் ஒரு பெண்மணி.

'இதுக்கும் ஒரு யுக்தி இருக்கு. அதாவது நாம செய்யற விஷயங்களைப் பார்த்து நம்மள மத்தவங்க பாராட்டிக்கிட்டே இருக்க வேண்டும்னு எதிர்பார்க்காம உங்கள நீங்களே பாராட்ட கத்துக்குங்க? உங்க முயற்சி வெற்றியா வந்தாலும் சரி, தோல்வியா முடிஞ்சாலும் சரி உங்களோட உண்மையான முயற்சிகளுக்கு நீங்களே பாராட்டு மனசுக்குள்ள தெரிவிச்சுக்க பழகிக்கிட்டீங்கன்னா போதும், எல்லா நாளுமே தீபாவளி ஸ்வீட்ஸ் மாதிரி வாழ்க்கையே இனிக்க ஆரம்பிச்சிடும்'' என்று சொல்லி முடித்த மேகலாவுக்கு மேகமே இறங்கி வந்து மழை கொட்டு கொட்டென கொட்டியது போல அப்படி ஒரு கைத்தட்டல் மழை கிடைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com