

பாபர் தனது தாய் மொழியில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய சுய சரிதையின் தமிழ் மொழிபெயர்ப்பு அண்மையில் வெளியானது. இதை மொழிபெயர்த்தவர் நஸ்ரத் ரோஸி. இதனை இரண்டு பகுதியாகச் சென்னையைச் சேர்ந்த "தமிழ் நூல் மன்றம்' வெளியிட்டுள்ளது.
அவரிடம் பேசியபோது:
""பாபர் தனது சுய சரிதையை "சகதாய்' மொழியில் எழுதினார். அந்த மொழி 16ஆம் நூற்றாண்டிலேயே வழக்கு ஒழிந்து போய்விட்டது. "பாபர் நாமா' பாரசீகம், ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருந்தது. ஆயினும், மூலத்தில் சொல்லியிருப்பது மொழிபெயர்ப்புகளில் வந்துள்ளதா என்பதை அறிய முயற்சித்தேன். "சகதாய்', பாரசீக மொழிகள் இந்தியாவில் இருப்பதற்கு வாய்ப்பு இல்லை. இணையம் வழியே பாரசீகம், அரபு, கிப்ச்சாக், உருது, சிந்தி, பஞ்சாபி, பஷ்தூண் மொழிகளின் அகராதிகள் வழி பொருள்களை அறிந்து, ஆங்கில மொழிபெயர்ப்புடன் ஒப்பிட்டு தமிழில் மொழிபெயர்ப்பை முடித்தேன்.
வெவ்வேறு காலகட்டங்களில் ஒவ்வொரு பிராந்தியத்தின் எல்லைகள் ஆட்சி செய்தவரைப் பொருத்து மாறிக் கொண்டே வந்துள்ளன. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அகண்ட இந்தியாவின் புவியியல் அமைப்பும் மாறியது.
மாசிடோனிய மாவீரன் அலெக்ஸாண்டர் முதல் மங்கோலிய மாவீரன் செங்கிஸ்கான் வரை மத்திய ஆசிய நாடுகளில் கைப்பற்றப்படாத ஒரே நாடு இந்தியாதான். அன்று இந்தியா பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டுவந்தது. அவர்கள் படையெடுத்து வந்தபோது சிந்து நதியின் எல்லையில் இருந்த அரகோஷியா ஜெúத்ராசியா எனப்படும் பழமையான பகுதிகளில் வாழ்ந்த பூர்வகுடியான ஆப்கானிகளைத் தாண்டி அவர்களால் இந்திய எல்லைக்குள் நுழையவே முடியவில்லை.
சவால்கள் நிறைந்த இந்துகுஷ் , இமாலய மலைத்தொடர்களைத் தாண்டி பாபர் எப்படி இந்தியாவுக்குள் வந்தார்? படை பலமே இல்லாத தனியொருவரான பாபருக்கு ஹிந்துஸ்தான் மீது காதல் வந்தது எதனால்? இந்தக் கேள்விக்கு இன்று வரை வரலாற்று ஆய்வாளர்களுக்கு விடை கிடைக்கவில்லை.
பாபரின் தந்தைவழி பழங்குடிகளான தைமூரியர்கள் ஹிந்துஸ்தானைக் கைப்பற்றி தில்லியில் சில ஆண்டுகள் ஆட்சி செய்தது பாபரை ஹிந்துஸ்தான் நோக்கித் திருப்பியது. பாபர் ஃபர்கானாவில் தொடங்கி சமர்கண்ட், காபூல், பெஷாவர் வழியாக பானிபட் யுத்தத்தில் வெற்றி பெற்று, தில்லியில் ஆட்சி அமைத்தார். ஹிந்துஸ்தானின் எல்லைச் சாமிகளாக இருந்த ஆப்கானியர்களைச் சரிக்கட்டி இந்துஸ்தானிய நிலப்பரப்புக்குள் நுழைந்த பாபருடைய சாதுர்யம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.
கி.மு. 327இல் அலெக்ஸாண்டர் படையெடுத்தபோது, இந்தியாவின் பெயர் "இண்டிகா' என்று அழைக்கப்பட்டது. இந்துகுஷ் மலையை அலெக்ஸாண்டர் "ககாஸஸ் இண்டிகஸ்' என்றே அழைத்தார். வெற்றி கொள்ளும் இடங்களில் தன்னுடைய பெயரால் ஒரு தலைநகரை உருவாக்குவது அலெக்ஸாண்டரின் வாடிக்கை. அந்த வகையில் இந்துகுஷ் அடிவாரப்பகுதிகளில் உருவாக்கிய நிலத்துக்கு "அரகோஷியா' என்றும், பாகிஸ்தான் பலூச் பகுதிகளை "ஜெúத்ராஸியா' என்றும் பெயரிட்டுச்சென்றார். திபெத் , நேபாளம் ஆகியன "சாக்கியா' (வெள்ளை பூமி) என்றும் இந்திய நிலப்பரப்பு "இண்டிகா' என்றும் பல்லாயிரம் ஆண்டுகளாகவே பெயர் பெற்று வந்துள்ளது.
பாபர் தான் "ஹிந்துஸ்தான்' என பதிவு செய்துள்ளார்.கைவினைஞர்களும் கட்டடத் தொழிலாளர்களையும் உஸ்பெகிஸ்தான் வரை அழைத்துச் சென்று "என் நாட்டின் கலைச் செல்வர்களின் திறமையைப் பாருங்கள்" என்று பதிவிட்டுள்ளார்'' என்கிறார் நஸ்ரத் ரோஸி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.