அழகைப் பராமரிக்க டிப்ஸ்...

அழகைப் பராமரிக்க டிப்ஸ்...

இயற்கை அழகு குறிப்புகள்: பழங்களின் பலன்கள்

பழங்கள் சாப்பிட மட்டுமல்ல; அழகைப் பராமரிப்பதற்கும், உடலை பேணிக் காப்பதற்கும் பயன்படுகின்றன. அவை:

மாங்கொட்டை பருப்பு அரைத்த விழுதைத் தலைமுடிக்கு கண்டிஷனராக பயன்படுத்தலாம். தலையில் வழுக்கை இருப்போர் முற்றிய மாம்பழச் சதையுடன் வேப்பம்பூ சேர்த்து அரைத்த விழுதை சிறிது விளக்கெண்ணெயில் கலந்து தலையில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். பிறகு பயத்தமாவு, கடலை மாவு, சீயக்காய் பொடி மூன்றையும் சம அளவு கலந்து தலைக்குத் தேய்த்து குளித்தால், முடி வளர ஆரம்பிக்கும்.

மாங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய நான்கையும் சம அளவில் கலந்து வெயிலில் வைத்து எடுக்கவும். இதை தலையில் பத்து போல் போட்டு 15 நிமிடம் ஊறவிடவும். பிறகு, சம அளவில் வெந்தயம், பயத்தம்பருப்பை கலந்து ஊற வைத்து அரைத்த விழுதைத் தலைக்கு தேய்த்து குளித்தால், பொடுகுத்தொல்லை போய்விடும்.

தினமும் குளிப்பதற்கு முன்பு சிறிது வேப்பம்பூ விழுது, மாம்பழ சதை, நல்லெண்ணெய் கலந்து முகத்தில் பூசுங்கள். பருக்கள் மறைந்து விடும். இதிலுள்ள நல்லெண்ணெய், தோலின் பளபளப்பைக் கூட்டி, கூடுதல் மிருதுவாக்கும்.

கருப்புத் திராட்சை சாற்றை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் ஊறவைத்து பின்னர் நீர் கொண்டு கழுவி மென்மையான பருத்தித் துண்டால் முகத்தை அழுத்தமின்றி துடைத்து வந்தால் முகம் பளிச்சென்று மாறும். திராட்சை பழச்சாற்றை பிழிந்து அதன் சக்கையை முகம் முழுவதும் பூசி, சிறிது நேரத்துக்குப் பின்னர் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவினால், முகத்தில் கருமை நீங்கி பொலிவு பெறும். வெயில் காலத்தில் தினமும் ஒரு கிண்ணம் திராட்சை சாறு அருந்தினால் சருமச் சிக்கலை தவிர்க்கலாம். திராட்சை சாற்றை முகத்திலும், கழுத்திலும் தடவி 20 நிமிடங்களுக்கு பிறகு முகத்தை கழுவினால் சருமம் ஈரப்பதத்துடன் காணப்படும். திராட்சை பழத்தை இரண்டாக வெட்டி கண்களின் கீழே தடவி 10 நிமிடங்கள் கழித்து கழுவி, தொடர்ந்து 10 நாள்கள் செய்து வர கருவளையம் நீங்கிவிடும். சிறிதளவு திராட்சை சாறுடன், சிறிதளவு பாசிப்பயிறு மாவை சேர்த்து நன்றாகக் கலந்து, அதை முகத்தில் பூசி 15 நிமிடங்களுக்கு பிறகு முகத்தை குளிர்ந்த நீரால் கழுவவேண்டும். இவ்வாறு தொடர்ந்து வாரம் இரு முறை வீதம் 1 மாதம் செய்துவந்தால் சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் படிப்படியாக மறைந்துவிடும்.

புளிப்பு ரக மாதுளம்பழத்திலிருந்து சாறு எடுத்து, தலை முழுவதும் எண்ணெய் தடவுவது போல தடவ வேண்டும். வெந்தயம், துவரம் பருப்பு இரண்டையும் முந்தைய நாள் இரவே வெந்நீரில் ஊறவைத்து, மறுநாள் அரைத்து கொள்ள வேண்டும். இந்த விழுதைத் தேய்த்து தலையை கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து 10 நாட்கள் குளித்து வந்தால், முடி உதிர்வது நின்று வளர ஆரம்பிக்கும்.

மாதுளை சாறுடன் வெட்டிவேர் பௌடர் கலந்து முகத்தில் பூசி, காய்ந்த பிறகு கழுவி வந்தால், பருக்கள் வராது. உடல் துர்நாற்றம் வீசுவதைப் போக்க, மாதுளம்பழத்தின் தோல் பகுதியை நன்றாகக் காய வைத்து பௌடராக்க வேண்டும். இதனுடன் பயத்தம்பருப்பு பவுடரை சம அளவு கலந்து வைத்துகொள்ள வேண்டும். தினமும் குளித்த பிறகு, உடலில் இந்த பவுடரை பூசி கழுவ வேண்டும். துர்நாற்றம் நீங்குவதுடன் உடலும் குளிர்ச்சியாகி விடும்.

ஆரஞ்சு பழத்தோல்களுடன் பால் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி காயவைத்து கழுவினால் முகம் புத்துயிர் பெறும். முகத்தில் கருமையை விரட்டியடிக்க 1 கைப்பிடி வேப்பங்கொழுந்துடன், ஆரஞ்சு தோல் விழுது, கஸ்தூரி மஞ்சள் கலந்து பூசி 5 நிமிடம் கழித்து கழுவினால் குணம் பெறலாம்.

ஆரஞ்சு தோலை பௌடராக்கிக் கொள்ளுங்கள். இந்தப் பௌடர், முல்தானிமட்டி, சந்தனம் ஆகிய மூன்றும் ஒரே அளவு எடுத்து தயிருடன் கலந்து, முகத்துக்கு பேக் போட்டு 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். முகம் பளபளப்பாக இருக்கும்.

நல்லெண்ணெயை காய்ச்சி இறக்கியதும், அதில் சிறிது பச்சை கறிவேப்பிலையைப் போட்டு மூடி விடுங்கள். மறுநாள் இந்த எண்ணெயை மிதமாக சூடு பண்ணி, தலையில் நன்றாக தேய்த்து சீகைக்காய் போட்டு அலசினால் முடி கருமையாகும்.

ஒரு பிடி கறிவேப்பிலையை அரைத்து அந்த சாறில், சிறிது வெந்தய பவுடரை கலந்து தலைக்கு தேய்த்து, காய்ந்த பிறகு அலசுங்கள். வாரம் ஒருதடவை இப்படி செய்து வந்தால், சீக்கிரமே இளநரை நீங்கிவிடும்.

கறிவேப்பிலை, கொட்டை நீக்கிய நெல்லிக்காய், செம்பருத்திப் பூ மூன்றையும் சமஅளவு எடுத்து தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். அதனுடன், வடித்த கஞ்சியை கலந்து தலையில் நன்றாக தேய்த்து அலசுங்கள். வாரம் ஒரு முறை இப்படி செய்தால் முடியில் உள்ள பிசுபிசுப்பு போய்விடும்.

நெல்லிக்காயை வெட்டி, வெயிலில் உலர்த்தியவுடன் எண்ணெயில் போட்டு, சூடேற்றி, ஸ்கால்ப்பில் படும்படி நன்கு மசாஜ் செய்து வந்தால், வெள்ளை முடி மறைவதை நன்கு காணலாம்.

-ஏ.எஸ்.கோவிந்தராஜன், கோடம்பாக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com