வடாம் போடப் போறீங்களா?

வடாம் போடப் போறீங்களா?

கோடை வரும், வடாம் போடும் காலம்!

கோடைக்கு வடாம் போட போறீங்களா? அதற்கு தேவையான டிப்ஸ்:

ஜவ்வரிசி வடாமுக்கு தண்ணீர் அதிகமாக ஊற்றிவிட்டால் கொஞ்சம் அவலை எடுத்து ஊறவைத்து, அதனுடன் கலந்துவிடுங்கள். மாவும் கெட்டியாகிவிடும். ஜவ்வரிசி வடாம் ருசியும் அதிகமாகவே கிடைக்கும்.

மீதமான சாதத்தில் பச்சை மிளகாய், சீரகம், பெருங்காயம் சேர்த்து கெட்டியாக அரைத்து சிறிய உருண்டைகளாகப் பிடித்து சாதம் வடாம் தயாரிக்கலாம்.

கொத்தமல்லி அதிகமாகவும், மலிவாகவும் கிடைக்கும் நேரங்களில் கொத்தமல்லி தழையை உப்பு, பச்சை மிளகாய் ஆகியவற்றோடு சேர்த்து அரைத்து வடையாகத் தட்டி வெயிலில் காயவைத்து வடகமாகச் செய்துகொள்ளுங்கள். இந்த வடகத்தை குழம்பு, ரசத்தில் போட்டால் மிகவும் வாசனையாகவும் ருசியாகவும் இருக்கும். தயிர் பச்சடி செய்தால் சுவை அருமையாக இருக்கும்.

உருளைக்கிழங்கு நன்றாக வேக வைத்து தோல் நீக்கிவிட்டு அதனுடன் சீரகம், உப்பு ஆகியவற்றை நன்றாகப் பிசைந்து ஒரு வெள்ளை துணியில் சிறிய உருண்டை உருளைக்கிழங்கு மாவை வைத்து மெல்லிய வடைகளாகத் தட்டி வெயிலில் உலர்த்தி நன்றாகவே காய்ந்தவுடன் எண்ணெயில் பொரித்தால் உளுந்து அப்பளத்தைவிட சுவையாகவும் கரகரப்பாகவும் இருக்கும்.

வடாம் மாவுகள் தயாரித்தவுடன் சாப்பிட்டு பார்த்தால் உப்பு குறைவாக இருந்தால் தான் காய்ந்தவுடன் உப்பு சரியாக இருக்கும்.

அரிசி வடாம் செய்வதற்கு அரிசியுடன் ஜவ்வரிசியைச் சேர்த்து அரைக்காமல் முதல் நாள் இரவு ஜவ்வரிசியை ஊறவைத்து மறுநாள் காலையில் தண்ணீருடன் சேர்த்து வேக வைத்து அரிசி மாவுடன் சேர்த்து செய்யும் வடாம் நன்றாக வெள்ளையாக இருக்கும்.

வடாம் கூழ் செய்யும்போது, சிறிது பாலை விட்டு கிளறினால் பொரித்தவுடன் வெண்மையாக இருக்கும்.

வடாமில் உப்பு அதிகமாகிவிட்டால் காய்ந்த வடாமை கொதிக்கும் நீரில் போட்டு சிறிது நேரம் வைத்து எடுத்து மறுபடியும் வெயிலில் உலர்த்தினால் உப்பு போய்விடும்.

பாகற்காய் நிறைய வாங்கி மெல்லிய வட்டங்களாக அரிந்து உப்பு போட்டு குலுக்கி இரண்டு அல்லது மூன்று நாள்கள் வைத்திருந்து பின்னர் வெயிலில் காயவைத்து எடுத்து வைத்துகொள்ள வேண்டும். தேவையானபோது எண்ணெயில் பொரித்து உப்பு காரம் சேர்த்து பிசறி வெறும் வாயிலேயே கூட சாப்பிடலாம். கசக்கவே கசக்காது.

வடாமைப் பிழிந்து காய வைத்திருக்கும் இடத்தில் நான்கு மூலையிலும் நான்கு நாற்காலிகளைத் தலைகீழாகப் போட்டு வடாமுக்கு குறுக்கும் நெடுக்குமாக நூலை நன்றாகச் சுற்றி விட வேண்டும். இதை பார்க்கும் காகங்கள் ஏதோ வலை என்று நினைத்து அருகிலேயே வராது.

வடாம் செய்யும் கூழில் தக்காளி சாறு, கருவேப்பிலை, கொத்தமல்லி தழைச்சாறு, கேரட், பீட்ரூட் சாறு போன்றவற்றை கலந்தால் பல்வேறு நிறங்களில் வடாம்கள் தயாரிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com