11 நிமிடங்களில் ஐம்பது பாடல்கள் !

வயது என்பது எண்ணிக்கை மட்டுமே'  என்ற பழமொழிக்கு உதாரணமாக விளங்குகிறார் நான்கரை வயது சிறுமி ஜி.தன்விகா.
11 நிமிடங்களில் ஐம்பது பாடல்கள் !

"வயது என்பது எண்ணிக்கை மட்டுமே' என்ற பழமொழிக்கு உதாரணமாக விளங்குகிறார் நான்கரை வயது சிறுமி ஜி.தன்விகா. இவர் 11 நிமிடங்களில், ஐம்பது சிறுவர் பாடல்களைப் பாடி தனது அசாதாரண நினைவாற்றலை வெளிப்படுத்தியுள்ளார்.

கோவை மாவட்டத்துக்கு உள்பட்ட பட்டணத்தைச் சேர்ந்தவர் சிறுமி தன்விகா. இவரது தந்தை கோகுல் தனியார் நிறுவனத்தில் மேலாளராகவும், தாய் அனிதா மென்பொருள் நிறுவனத்திலும் பணியாற்றி வருகின்றனர்.

சிறுவயது முதலே தான் கற்றதை ஞாபகத்தில் வைத்துகொள்ளும் தன்விகா, ஏற்கெனவே 60 விலங்குகள், 23 காய்கறிகள், 20 பழங்களின் பெயர்கள் உள்பட பல சுவாரசியமான தகவல்களை மனப்பாடம் செய்து ஒப்புவித்துள்ளார்.

இவரது ஆர்வத்தை தெரிந்துகொண்ட பெற்றோர் எழுத்துகள், வண்ணங்கள், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவை குறித்து கற்றுக் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.

எதைக் கற்றுக் கொடுத்தாலும் சட்டென உள்வாங்கிக் கொண்டு தெளிவாகப் பதிலளிக்கும் தன்விகா 11 நிமிடங்களில் 50 ஆங்கில சிறுவர் பாடல்களை வாசித்து அசத்தியுள்ளார். 2023-ஆம் ஆண்டு செப். 17- ஆம் தேதி தன்விகா 11 நிமிடங்களுக்குள் இடைவேளையின்றி 50 ஆங்கில சிறுவர் பாடல்களை வாசித்து சர்வதேச சாதனை புத்தகத்தில் "ஜீனியஸ் கிட்' என்ற பட்டத்தைப் பெற்றுள்ளார். இந்தச் சாதனையை கோவை மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் பாராட்டி பரிசளித்துள்ளார்.

இதுகுறித்து, தன்விகாவின் பெற்றோர் கோகுல், அனிதா கூறியதாவது:

"கரோனா காலகட்டத்தில் தன்விகாவின் திறமை விளையாட்டில் உள்ளதா?, படிப்பில் உள்ளதா என்பதைத் தெரிந்து கொள்ள முயற்சித்தோம். நிறைய பஸில்ஸ், கார்ட்ஸ் எல்லாம் வாங்கி, அவளுக்குப் பயிற்சி அளித்தோம். அப்போது, தன்விகாவுக்கு அதீத நினைவாற்றல் இருப்பது எங்களுக்குத் தெரியவந்தது.

ஒருமுறை சொல்லிக் கொடுத்தால் போதும். அதை ஞாபகத்தில் வைத்துகொள்வாள். இதையடுத்து, பழங்கள், காய்கறிகள், வண்ணங்கள், எழுத்துகள் குறித்து கற்றுக் கொடுக்க ஆரம்பித்தோம். அப்படித்தான் ஆரம்பித்தது தன்விகாவின் இந்தப் பயணம்.

2022-ஆம் ஆண்டு தன்விகா அவளது பள்ளியில் ப்ரீ.கே.ஜி.-இல் சிறந்த மாணவிக்கான விருதை வென்றுள்ளார். ஓவியம் வரைதல், சதுரங்கம், விளையாட்டில் ஆர்வம் அதிகம். ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் சரளமாகப் பேசுவாள். தற்போது பிரெஞ்சு மொழி கற்று வருகிறாள்.

பரதநாட்டியம், யோகா, அம்பிடெக்ஸ்ட்ரஸ் ஆகியவற்றையும் கற்று வருகிறார்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com