பெண்களைப் புரிந்து கொள்வது எப்படி?

பெண்களைப் புரிந்துகொள்ள ஆண்களுக்கு மட்டும் இலவச கலந்துரையாடல்!
பெண்களைப் புரிந்து கொள்வது எப்படி?
Picasa
Published on
Updated on
1 min read

"பெண்களைப் புரிந்துகொள்வது, எப்படி ?' எனும் தலைப்பில், சென்னை அசோக் நகரில் ஜூன் 9, 16, 23, 30-ஆம் தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமைகள்தான்) மாலையில் இரண்டு மணி நேரம் வித்தியாசமான கலந்துரையாடல் நடக்கிறது. இதில், ஆண்களுக்கு மட்டுமே இலவச அனுமதி. சிறப்பு அழைப்பாளர்களும் ஆண்கள்தான்!

இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கும் "ஹெர் ஸ்டோரீஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் நிவேதிதா லூயிஸிடம் பேசியபோது:

""ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஒருவருக்கொருவர் சரியான புரிதல் இல்லை. இதனால் குடும்பத்தில், சமூகத்தில் பிரச்னைகள் தலைகாட்டுகின்றன. சமூகக் கட்டுப்பாட்டால், பெண்கள் வெளிப்படையாகப் பேசாமல் ஆண்டாண்டு காலமாக இருந்துவிட்டனர். இதுவே ஆண்களுக்குப் பெண்களைப் பற்றிய புரிதல் இல்லாமல் போக காரணமாக அமைந்துவிட்டது.

பெண்ணியம் குறித்து பெண்கள் பேசத் தொடங்கினால், "தங்கள் உரிமை, அதிகாரம், சுதந்திரம் பறி போய்விடுமோ?' என்று ஆண்கள் பயப்படுகின்றனர். இதை மாற்றவே கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருக்கிறோம். பெண்களை மதிக்க, சக தோழியாகப் பழக, ஆரோக்கியமான நட்பைப் பாராட்ட விருப்பம் உள்ள ஆண்களை வரவேற்கிறோம்.

கடந்த தலைமுறை ஆண்களைவிட இந்தத் தலைமுறை ஆண்களுக்கு பெண்கள் குறித்த புரிதல் இருக்கிறது. ஆனால் போதுமானதாக இல்லை. அந்தப் புரிதலைப் பூரணப்படுத்த பெண்கள் நல விரும்பிகளாக இயங்கும் இளங்கோவன், சந்தியன், தமிழ்ச்செல்வன், முனைவர் சுரேஷ் பால் உள்ளிட்டோர் நிகழ்ச்சிகளில் பங்கேற்று தங்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள உள்ளனர்.

பெண்களைப் புரிந்துகொள்ள பெரிய திறமையோ, உழைப்போ, பயிற்சியோ வேண்டாம். "பக்குவம்" இருந்தால் போதும். பெண்களை ஆண்கள் புரிந்துகொள்ளுதலையும், ஆண்கள் பெண்ணியக் கூட்டாளிகள் ஆவதை விரைவுபடுத்துவதும்தான் இந்தக் கலந்துரையாடலின் குறிக்கோள். பங்கேற்க கட்டணம் எதுவும் இல்லை.

ஆரோக்கியமான சமூகக் கட்டமைப்பு உருவாக ஆண்கள் பெண்களைப் பற்றி புரிந்து கொள்ள வேண்டும் என்ற சிந்தனை இப்போதுதான் தொடங்கியிருக்கிறது.

ஆண்கள் அலுவலகத்தில், பொது இடங்களில், நிகழ்ச்சிகளில் சந்திக்கும் பெண்களைப் புரிந்துகொண்டால் குறைந்தபட்சம் வீட்டில் மனைவியைப் புரிந்து கொள்வார்கள். ஏனென்றால் திருமணமாகி அறுபது வயதாகியும் ஒருவரையொருவர் புரிந்து கொள்ளாத தம்பதிகளும் சமூகத்தில் இருக்கிறார்கள்.

இதேபோன்று "ஆண்களைப் பெண்கள் புரிந்து கொள்வது எப்படி' என்று பெண்கள் தரப்பிலிருந்தும் கோரிக்கை வந்தால் அதுகுறித்த கலந்துரையாடலையும் ஏற்பாடு செய்யத் தயாராக உள்ளோம். தொடர்புக்கு- 96003 98660'' என்கிறார் நிவேதிதா லூயிஸ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com