காபி தூளில் சாதனை ஓவியம்!

காபி தூள் கொண்டு கலை சிறப்பு - மகாராணி உருவம் வரைந்து சாதனை!
காபி தூளில் சாதனை ஓவியம்!
Published on
Updated on
2 min read

வண்ணங்களைக் குழைத்து விரல்களால் அழகிய ஓவியங்களாக மாற்றி, அதில் சாதனைகளைப் புரிந்து வருகிறார் முப்பத்து மூன்று வயதான ஓவியர் எஸ். ஸ்ரீராஜ். கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகேயுள்ள மஞ்சாலுமூடு, சிறக்கரையைச் சேர்ந்தவர் இவர். ஓவியம் வரைவதில் கின்னஸ் சாதனை படைத்தவர்.

தற்போது காபி, தண்ணீரைச் சேர்த்து உருவாக்கிய வண்ணங்களால் வரையப்பட்ட இங்கிலாந்து நாட்டின் மகாராணி இரண்டாம் எலிசபெத் உருவப் படத்தை பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தும் நிகழ்ச்சியை அண்மையில் நடத்தினார். அவரிடம் பேசியபோது:

"எனது சிறுவயதிலேயே தந்தையை இழந்தேன். கூலித் தொழிலாளியான தாய் சுசீலாவின் அரவணைப்பில் வளர்ந்தேன். குடும்ப வறுமை காரணமாக , பிளஸ் 2 வரையே படித்தேன். பள்ளிப் பருவத்திலேயே ஓவியத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டு, இயற்கைக் காட்சிகள், நீரோடைகளை வரைய ஆரம்பித்தேன். இதற்கு எனது தாய் ஊக்கப்படுத்துவார்.

2013- ஆம் ஆண்டு 110 சாட் பேப்பர்களை இணைத்து 25 அடி உயரத்திலும் 20 அடி அகலத்திலும் அப்துல் கலாமின் உருவத்தை பென்சில் ஓவியமாக 7 மணி நேரத்தில் வரைந்தேன். இது அஸிஸ்ட் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது.

2018-ஆம் ஆண்டு ஒன்றரை லட்சம் உடைந்த கண்ணாடி துண்டுகளை கொண்டு உருவாக்கிய ராட்சத கிறிஸ்துமஸ் தாத்தா உருவம் யு.ஆர்.எஃப். உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது.

2020- ஆம் ஆண்டு பேப்பர், அட்டைகள், பசை, கம்பிகள் உள்ளிட்ட பொருள்களை பயன்படுத்தி 80 கிலோ எடையில் 13 மீட்டர் நீளத்தில் தூரிகை உருவாக்கி, தூரிகையின் ஒருபகுதி ஜே.சி.பி. இயந்திரத்தில் கட்டி வைத்தும், மறுபகுதியை எனது தோளில் தாங்கிய நிலையிலும் வரைந்த கேரளத்தின் சமூக சீர்திருத்தவாதி ஐயங்காளியின் உருவப் படத்துக்கு யு.ஆர்.எஃப். உலக சாதனை புத்தகத்தில் இடம்கிடைத்தது.

2022- ஆம் ஆண்டில் மொசைக் ஆர்ட் மூலம் 3 லட்சத்து 57 ஆயிரத்து 216 தீக்குச்சிகளைப் பயன்படுத்தி, 6 அடி நீளம், 4 அடி அகலத்தில் ஹாலிவுட் நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் படத்தை உருவாக்கி கின்னஸ் உலக சாதனையாளர் புத்தகத்தில் இடம்பிடித்தேன்.

மீண்டும் கின்னஸ் சாதனை படைக்க, இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் பெரிய அளவிலான உருவப் படத்தை தீட்ட முடிவு செய்தேன். இதற்காக மஞ்சாலுமூடு ஸ்ரீ நாராயணகுரு பொறியியல் கல்லூரி விளையாட்டரங்கில் பிப். 23-இல் 70 அடி நீளமும் 50 அடி அகலமும் கொண்ட இடம் தேர்வு செய்து அதில் காபி தூள், தண்ணீர் மூலம் இயற்கையான வண்ணங்கள் உருவாக்கி ஓவியத்தை தீட்ட ஆரம்பித்தேன், காலை 7 முதல் முற்பகல் 10 மணி வரையும், சிறிது நேர இடைவெளிக்குப் பின்னர் துவங்கி மாலை 6 மணி வரையும் என 9 நாள்களில் சுமார் 90 மணி நேரத்தில் இந்த ஓவியத்தை வரைந்து முடித்துள்ளேன். இதற்காக 8 கிலோ காபி தூள் தேவைப்பட்டது.

கருமையான வண்ணத்துக்கு குறைந்த அளவு தண்ணீரும், வெளிர் நிறத்துக்கு காபி தூளில் அதிக தண்ணீரும் சேர்க்கப்பட்டு ஓவியம் வரையப்பட்டது. கின்னஸ் விதிகளின் படி வீடியோவில் படம் பிடித்து அனுப்பி வைத்துள்ளேன். எனது சாதனை ஏற்றுகொள்ளப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. எதிர்காலத்தில் ஓவியக் கலையில் பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்பதே எனது லட்சியம்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com