பெண்களே நடத்திய நாடகங்கள்

ஆன்மிக அரங்கில் பெண் கலைஞர்கள் சாதனை
பெண்களே நடத்திய நாடகங்கள்

சென்னை மயிலாப்பூரை ஆன்மிக வெள்ளத்தில் மூழ்க வைத்தார் பாம்பே ஞானம். ஆறு ஆன்மிகப் பெரியோர்களைப் பற்றி ஆறு நாடகங்கள்- ஆறு நாள்கள். மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் கிளப்பில் நடத்தப்பட்டன. இந்த நாடகங்களில் நடித்தது முழுக்க, முழுக்கப் பெண்கள்தான்.

மகாலட்சுமி பெண்கள் நாடகக் குழு அறக்கட்டளையினர் "போதேந்திராள்', "ஆதிசங்கரர்', "அஷ்டபதியின் நாயகன் பக்த ஜெயதேவர்', "பகவான் ஸ்ரீரமணர்', "பாபா' (சீரடி சாயிபாபா அதிசயமும் அற்புதமும்), "பகவான் ஸ்ரீராமகிருஷ்ணா பரமஹம்சர்' என ஆறு நாடகங்களை நடத்தினர்.

அனுமதி இலவசம் என்பதால், ஒவ்வொரு நாளும் அரங்குகள் நிறைந்தன. நாடகத்தில் வந்த கதாபாத்திரங்கள் அனைத்தும் பெண்களே. இதனால் பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தன.

இதுகுறித்து நாடகக் குழுத் தலைவர் பாம்பே ஞானத்திடம் பேசியபோது:

""நாடகங்களுக்கு நுழைவுக்கட்டணம் வசூலித்தால் நிறைய பணம் கிடைக்கும்தான். ஆனால், கட்டணம் செலுத்திப் பார்க்க வசதியில்லாதவர்கள் ஏங்கிப் போவார்கள். அதனால்தான் அனுமதி இலவசம் என்று அறிவித்தோம். கடைசியில் நாடக முடிவில் துண்டு ஏந்தி நன்கொடையை வசூலிக்கிறோம். பலர் மனம் உவந்து தருகின்றனர்.

முதலில் அன்றாட சமூகப் பிரச்னைகளை வைத்து சமூக நாடகங்களை மட்டும் நடத்தினோம். கடந்த பத்து ஆண்டுகளாக ஆன்மிக நாடகங்களைப் போட தொடங்கினோம்.

போதேந்திரர் நாடகத்தை அரங்கேற்றும் முன் காஞ்சி ஜயேந்திரரிடம் ஆசிர்வாதம் வாங்கச் சென்றபோது, "போதேந்திராள் போன்ன்மிகப் பெரியோர்களைப் பற்றி நாடகம் போடக் கூட தமிழ்நாட்டில் ஆள்கள் முன்வருகிறார்களா?' என்று கூறி, அதிசயித்தார். "மனம் உவந்து ஆசி தருகிறேன்' என்று அவர் கூறினார்.

போதேந்திராள் நாடகமும் மகத்தான வெற்றியைப் பெற்றது. தொடர்ந்து, ஆன்மிகப் பெரியோர்களைப் பற்றி நாடகம் போட இந்த வரவேற்பு தெம்பை அளித்தது. ஒவ்வொரு நாடகமும் போடும்போது, பல நூல்களைப் படிக்கிறோம். பல ஆன்மிக ஞானிகளைப் பேட்டி கண்டு குறிப்புகளை எடுத்துகொள்கிறோம். ஆக ஒவ்வொரு நாடகமும் நீண்ட உழைப்புக்குப் பின்னரே எழுதப்படுகிறது.

சாயி பாபா நாடகத்தைக் காண வந்த டாக்டர் சிவகாட்சம், எழுத்தாளர் சாந்தகுமாரி சிவகடாட்சம் ஆகியோர் பெரிதும் பாராட்டிப் பேசினர்'' என்கிறார் பாம்பே ஞானம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com