அழகுக் குறிப்புகள்....

இயற்கை அழகு பொலிவுக்கு எளிய வீட்டு வைத்தியங்கள்
அழகுக் குறிப்புகள்....

இரண்டு கேரட்டை எடுத்து அதனை வேக வைத்து, மசித்து, முகத்துக்குத் தடவ வேண்டும். பின்னர் அதனை காய வைத்து, முகத்தில் இருந்து உரித்து எடுக்க வேண்டும். அதன் பின்னர், வெதுவெதுப்பான நீரால் முகத்துக்கு ஒத்தடம் தர வேண்டும். இவ்வாறு வாரத்துக்கு இருமுறை செய்தால், முகம் நன்கு பொன்னிறமாக மின்னும்.

கேரட்டில் சர்க்கரையைச் சேர்த்து, நன்கு நைஸாகவும், கெட்டியாகவும் அரைத்துகொள்ள வேண்டும். பின்னர் அதனை முகத்துக்குத் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால், முகத்துக்குச் சரியான ரத்த ஓட்டம் இருக்கும். இதில் இருக்கும் பொட்டாசியம், முகத்தில் இருக்கும் இறந்த செல்கள், முகப்பரு, கரும்புள்ளி, மற்ற சரும நோய்களை நீக்கி, சருமத்தை மென்மையாக அழகாக வைக்கும்.

தினமும் ஒரு டம்ளர் கேரட் ஜூஸை பருகினால், சருமத்தில் எந்த நோயும் ஏற்படாமல் இருக்கும். அதுமட்டுமல்லாமல், முகச்சுருக்கம் ஏற்படுவதைத் தடுக்கும்.

தலையில் உள்ள பொடுகை நீக்குவதற்கு எலுமிச்சை பெரிதும் உதவியாக இருக்கும். அதிலும் எலுமிச்சை சாற்றை தலையில் தேய்த்து குளித்தால், தலையில் உள்ள பொடுகு எளிதில் போய்விடும். எலுமிச்சை துண்டுகளை முகத்தில் சிறிது நேரம் தேய்த்து கழுவினால், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் நீங்கிவிடும்.

நல்லெண்ணெயை காய்ச்சி இறக்கியதும், அதில் சிறிது பச்சை கறிவேப்பிலையை போட்டு மூடி விடுங்கள். மறுநாள் இந்த எண்ணெயை மிதமாக சூடு பண்ணி, தலையில் நன்றாக தேய்த்து சீகைக்காய் போட்டு அலசினால் முடி கருமையாகும். ஒரு பிடி கறிவேப்பிலையை அரைத்து அந்தச் சாறில், சிறிது வெந்தய பவுடரை கலந்து தலைக்கு தேய்த்து, காய்ந்த பிறகு அலசுங்கள். வாரம் ஒருதடவை இப்படி செய்து வந்தால், சீக்கிரமே இளநரை நீக்கிவிடும். கறிவேப்பிலை, நெல்லிக்காய், செம்பருத்திப் பூ

ஆகிய மூன்றையும் சமஅளவு எடுத்து தண்ணீர் சேர்த்து அரைத்துகொள்ளுங்கள். அதனுடன், வடித்த கஞ்சியைக் கலந்து தலையில் நன்றாக தேய்த்து

அலசுங்கள். வாரம் ஒருமுறை இப்படி செய்தால் முடியில் உள்ள பிசுபிசுப்பு போய்விடும்.

பாதாம் பருப்பும், கசகசாவும் சம அளவில் சேர்த்து அரைத்த விழுது மற்றும் மாங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, அந்த விழுதை கழுத்துப் பகுதியில் மேலிருந்து கீழ்ப்புறமாக பூசி, காய்ந்ததும் கழுவவும். இதை ஒரு மாதம் தொடர்ந்து செய்தால், கழுத்து சுருக்கம் நீங்கும்.

தினமும் குளிப்பதற்கு முன் சிறிது வேப்பம்பூ விழுது, மாம்பழ சதை, நல்லெண்ணெய் கலந்து முகத்தில் பூசினால், பருக்கள் மறைந்து விடும். இதிலுள்ள நல்லெண்ணெய், தோலின் பளபளப்பைக் கூட்டி, கூடுதல் மிருதுவாக்கும்.

மாம்பழச் சதையுடன் அதே அளவு உலர் திராட்சையை சேர்த்து அரைத்து, அதை ஐஸ் டிரேயில் இட்டு ஃப்ரீஸரில் வைத்து விடுங்கள். உதடுகள் உலர்ந்து போகும்போதெல்லாம் இந்த ஐஸ்கட்டியை ஒரு துணியில் சுற்றி, உதட்டின் மேல் தடவுங்கள். உதடுகள், ரோஜா இதழ் போல மின்னும்.

ஆரஞ்சு, மாம்பழச் சாறை சம அளவு எடுத்து ஃப்ரீசரில் வைக்கவும். புருவங்களில் விளக்கெண்ணெய் அல்லது நல்லெண்ணெயை ஒரு துளி தடவி, இந்த ஐஸ் கட்டியை ஒரு மெல்லிய துணியில் சுற்றி, கண் மற்றும் புருவத்தில் ஒற்றி எடுங்கள். தினமும் இரவு தூங்கும் முன் இப்படி செய்து வந்தால், புருவத்திலும் இமையிலும் முடி வளரும். கண்களுக்கும் நல்லது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com