ஒலிம்பிக்ஸில் பதக்கம் வெல்வேன்....

முனிச் நகரில் ஜூன் 13-இல் நடைபெற்ற பெண்கள் 10 மீ. ஏர் பிஸ்டல் இறுதிப் போட்டியில், ஸூருச்சி சிங் தனது மூன்றாவது தனிநபர் ஐ.எஸ்.எஸ்.எஃப். உலகக் கோப்பை தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
ஒலிம்பிக்ஸில் பதக்கம் வெல்வேன்....
Published on
Updated on
2 min read

முனிச் நகரில் ஜூன் 13-இல் நடைபெற்ற பெண்கள் 10 மீ. ஏர் பிஸ்டல் இறுதிப் போட்டியில், ஸூருச்சி சிங் தனது மூன்றாவது தனிநபர் ஐ.எஸ்.எஸ்.எஃப். உலகக் கோப்பை தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். துப்பாக்கியால் குறி பார்த்து சுடும் போட்டியில், 'தங்கப் பெண்' என்ற பெருமையை மனு பாக்கரிடம் இருந்து கைப்பற்றியுள்ளார் ஸூருச்சி சிங்.

தேசிய சாம்பியனான ஸூருச்சி சில மாதங்களுக்கு முன் பியூனஸ் அயர்ஸ், லிமாவில் நடைபெற்ற முதல் இரண்டு உலகக் கோப்பை போட்டியிலும் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றிருந்தார். 2024 டிசம்பரில், தேசிய போட்டியில், இரட்டை ஒலிம்பிக் பதக்கம் வென்ற மனு பாக்கரின் தேசிய சாதனையை சமன் செய்தார்.

ஸூருச்சி ஹரியானாவின் ஜஜ்ஜாரைச் சேர்ந்தவர். ஒரே ஆண்டுக்குள் ஸ்ருச்சி, இந்தியாவின் அடுத்த ஒலிம்பிக்ஸ் நம்பிக்கை நட்சத்திரமாகவும் மாறியி ருக்கிறார். அவர் கூறியது:

'கரோனா காலத்துக்குப் பிறகு, துப்பாக்கி சுடுதல் பயிற்சியை, ஹரியானாவின் குருகிராமில் உள்ள குரு துரோணாச்சார்யா துப்பாக்கிச் சூடு அகாதெமியில் பெற்றேன். மனு பாக்கர் தொடக்கத்தில் பயிற்சி பெற்றதும் இங்குதான்.

முதலில் என்னைச் சேர்த்துகொள்ள அகாதெமியினர் தயக்கம் காட்டினர். 'எனக்கு ஆறு மாதம் பயிற்சி கொடுங்கள். நீங்கள் திருப்தி அடைந்தால், பயிற்சியைத் தொடருகிறேன்' என்றதும் சேர்த்துகொண்டனர். என் கிராமத்திலிருந்து பயிற்சி நிலையம் செல்ல மூன்று மணி நேரம் பயணிக்கணும்.

பயிற்சியின் போது ஜூனியர் உலகக் கோப்பையில் வெண்கலப் பதக்கம் பெற்றேன். அதுதான் எனது முதல் பதக்கம். 2024 , 2025 ஆகிய இரு ஆண்டுகள் எனக்கு அதிர்ஷ்டமாக அமைந்தது. தில்லியில் நடைபெற்ற தேசிய விளையாட்டுப் போட்டிகளில் ஏழு தங்கப் பதக்கங்களும், இந்த ஆண்டு தொடக்கத்தில் உத்தரகண்டில் நடைபெற்ற தேசிய விளையாட்டுப் போட்டிகளில் இரண்டு தங்கப் பதக்கங்களும் கிடைத்தன.

தினமும் நீண்ட நேரம் பயிற்சி செய்கிறேன். காரணம், போட்டி சுமார் 75 நிமிடங்கள் நீடிக்கும். தொடக்கத்தில் போட்டிகளில் சொதப்பினேன். அதைச் சரி செய்ய பயிற்சியாளர் எனக்கு நீண்ட நேர பயிற்சிகளைக் கொடுத்தார். அந்தப் பயிற்சிகளில் நான் பொறுமை இழந்தேன். 'பயிற்சி என்று நேரத்தை வீணடிக்கிறீர்கள்' என்று பயிற்சியாளரிடம் கோபப்பட்டேன்.

அவர் கோபப்படாமல் சிரித்துகொண்டே, 'நீ வெற்றி பெற வேண்டும் என்றால் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தப் பழக்க வேண்டும். மன அழுத்தத்தை உதறு. பயிற்சியின்போதும் போட்டிகளின்போதும் பதற்றத்தைத் தவிர்க்க வேண்டும். சில மாதங்களுக்கு, எந்தப் போட்டியிலும் பங்கேற்காமல், பயிற்சியில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்' என்று அறிவுரை சொன்னார். பின்னர்தான் எனக்குப் புரிந்தது.

பயிற்சியாளர் திருப்தி அடையும் வரையில் பயிற்சி தொடர்ந்தது. ஒவ்வொரு போட்டி தொடங்குவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பு, நான் பயிற்சியாளரை அழைப்பேன். அவரும் உற்சாக நம்பிக்கை வார்த்தைகளைச் சொல்வார். நான் புதிய வேகத்துடன் போட்டியைச் சந்திப்பேன். நான் கலந்து கொண்ட அனைத்து இறுதிப் போட்டிகளிலும் முனிச் போட்டி மிக நெருக்கமானது, நானும் கொஞ்சம் அதிர்ஷ்டசாலி என்று நினைக்கிறேன், அடுத்த ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்காக தங்கப் பதக்கம் வெல்வதே எனது லட்சியம்'' என்கிறார் ஸூருச்சி சிங்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com