வாயு தொந்தரவால் அவதிப்படுபவர்கள் சீரகம், பெருங்காயத்தைச் சம அளவு மோரில் கலந்து சிறிதளவு உப்பைச் சேர்த்து குடிக்கலாம்.
நீர்வேட்கை தணியாமல் இருப்பவர்கள் இளநீரில் எலுமிச்சம் பழச்சாற்றை பிழிந்து, குடித்து வந்தால் தாகம் தீரும்.
திடீரென வாந்தி எடுத்தால், எலுமிச்சைப் பழத்துடன் சர்க்கரையைச் சேர்த்து குடிக்க, வாந்தி நிற்கும்.
வயிற்றுப் பொருமல் இரைச்சல் இருந்தால், கொஞ்சம் ஓமத்தை நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். காப்பி டிகாஷனை போல் வடிகட்டி, அதில் கொஞ்சம் பால், சர்க்கரை கலக்கிச் சாப்பிட்டால் உடனே நிவாரணம் பெறலாம்.
சிறுநீர் கழிக்கச் சிரமப்படுபவர்கள் அடிக்கடி நிரம்பத் தண்ணீர் குடிக்க வேண்டும். எலுமிச்சம் பழச்சாறு கலந்து நீர் குடிப்பவர்களுக்கு தாராளமாக நீர் பிரியும். கர்ப்பிணிகளுக்கு இது மிகவும் உகந்தது.
கோடைக்காலங்களில் சிலநேரங்களில் உதட்டுச் சாயம் இளகிப் போய்விடும். அதுபோன்ற நேரத்தில் அதனை எடுத்து ஐஸ் பெட்டிக்குள் இரண்டு மணி நேரம் வைத்திருந்தால், அது உறைந்து உபயோகிக்கும் பதத்துக்கு வந்துவிடும்.
இரவு கட்டிலில் படுப்பவர்கள் அரை மணி நேரம் முன்னதாக, படுக்கும் அறையின் தரையைப் பெறுக்கி லேசாக நீர் தெளித்து அறையின் ஜன்னல் கதவுகளைத் திறந்துவைத்து, பேனையும் லேசாகப் பத்து நிமிடங்கள் சுழல விடவும். இதனால் அறையின் வெப்பம் சீராகும்.
வெளியே கிளம்பும்போது, அருநெல்லிக்காய் ஒன்றிரண்டை வாயில் போட்டு மென்றால், நாக்கு உலர்ந்துபோகாமல் இருக்கும்.
பயத்தமாவு, கடலை மாவு, மஞ்சள் வேப்பிலை பொடி கலந்த பொடியை தேய்த்து மாலையில் குழந்தைகளைக் குளிப்பாட்டினால் இரவில் நன்கு தூங்கும் வேனல் கட்டிகள் வராது.
வெயில் நேரத்தில் பலருக்கு நீர்க்கடுப்பு வரும். நீர்க்கடுப்பு வந்தால் ஒரு டம்ளர் மோரில் எலுமிச்சை பழத்தைப் பிழிந்து சாப்பிடுங்கள். மோரில் இளநீர் சேர்த்துச் சாப்பிட்டாலும், நீர்க்கடுப்பு குணமாகும்.
மாங்காய்களை பிரஷர் குக்கரில் போட்டு வேகவைத்து, பின்னர் சாறு பிழிந்து எடுத்து அதனுடன் தண்ணீர், உப்பு, மிளகு, பொடி சேர்த்து பருகினால், உடல் சூடு குறையும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.