'இந்தியாவில் அறிவியலில் பெண்களாலும் சாதிக்க முடியும்' என நிரூபித்த அசிமா சாட்டர்ஜி, நாட்டிலேயே வேதியியலில் முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண்மணியாவார்.
கை, கால் வலிப்புக்கும் மலேரியாவுக்கும் மருந்துகளைக் கண்டுபிடித்த இவர், 2006-ஆம் ஆண்டில் காலமானார். இவரது நூறாவது பிறந்த நாள் நினைவாக, 2017-இல் 'கூகுள் டூல்' வெளியிட்டு கெளரவித்தது.
அவருடைய தந்தை இந்திர நாராயணன் முகர்ஜிக்கு தாவரவியல் மீது இருந்த ஆழ்ந்த ஈடுபாடு, மகளிடமும் தொற்றிக் கொண்டது. 'இயற்கை அழகானது மட்டுமல்ல; ரசாயனமானதுகூட' என்பதை அசிமா முகர்ஜி உணர்ந்தார்.
தாவரங்களில் மறைந்திருக்கும் குணப்படுத்தும் ரகசியங்களை ஆய்வு செய்து முன்னோடி விஞ்ஞானியானார். இவரது கணவர் பிரபல இயற்பியலாளர் பரதானந்த சாட்டர்ஜி. இவருடைய மனப்பூர்வமான ஆதரவே அசிமாவுக்குக் கடினமான வேலைகளை எளிதாக்கியது.
1917-இல் கொல்கத்தாவில் பிறந்த அசிமா, பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, ஸ்காட்டிஷ் கல்லூரியில் படித்தார். கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவுடன் 'இந்திய வேதியியலின் தந்தை' என்று அழைக்கப்
படும் பிரபுல்லா சந்திர ராய், சத்யேந்திர நாத் ஆகியோரிடம் மாணவியாகச் சேர்ந்து 1944-இல் வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றார். இவர் நாட்டில் உள்ள பல்கலைக்கழகத்தில் அறிவியலில் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்தியப் பெண்மணியானார்.
இங்குள்ள சந்தைகளில் மருந்து பெட்டிகளை நிரப்பிய தாவரங்களால் அசிமா ஈர்க்கப்பட்டார். மருத்துவத் தாவரங்களில் காணப்படும் சிக்கலான சேர்மங்களான ஆல்கலாய்டுகள், கூமரின்கள், டெர்பெனாய்டுகள் ஆகியவற்றைப் படித்தார். இந்தப் பொருள்களை முறையாகப் பிரித்தெடுத்தால், அதில் நோய்களை எதிர்த்துப் போராடும் மகத்தான மருந்து கிடைக்கும் என்பதை உணர்ந்த அவரது ஆராய்ச்சி அறிவியல் மற்றும் கலாசாரபூர்வமானது. ஆயுர்வேத ஞானத்தை வேதியியல் பகுப்பாய்வுகளோடு இணைத்து பாரம்பரிய மருத்துவத்துக்கும் நவீன அறிவியலுக்கும் இடையிலான இடைவெளியை அவர் குறைத்தார்.
இவரது பிரபலமான பங்களிப்புகளில் தாவர மூலங்களிலிருந்து கால், கை வலிப்பு, மலேரியா எதிர்ப்பு மருந்துகளை உருவாக்கியதும் அடங்கும். இறக்குமதியான மருந்துகள் விலை உயர்ந்ததாக இருந்தபோது, 'உள்ளூர் தாவரங்கள் மருந்துகளை வழங்கும்' என்ற நம்பிக்கையில் அவரது ஆராய்ச்சி இருந்தது.
அல்ஸ்டோனியா ஸ்காலரிஸ் (பிசாசுமரம்) குறித்த அவரது மலேரியா எதிர்ப்பு ஆய்வுகள் புதிய உள்நாட்டு சிகிச்சைகளுக்கு வழிவகுத்தன. இவற்றை மருந்து நிறுவனங்கள் ஏற்றன.
இதனால் அசிமா சாட்டர்ஜிக்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைத்தது. இவருக்கு இந்திய தேசிய அகாதெமியின் ஃபெல்லோ கெüரவம் 1960-இல் வழங்கப்பட்டது. 1975-இல் 'பத்ம விபூஷண்' விருதை மத்திய அரசு வழங்கியது. 1962-68 இடையே மாநிலங்களவை உறுப்பினராகவும் பொறுப்பேற்றுச் செயல்பட்டார்.
-ராஜி ராதா, பெங்களூரு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.