கேரளத்தில் பள்ளி, கல்லூரிகளில் சம்ஸ்கிருத ஆசிரியர்களாக இஸ்லாமிய ஆண், பெண் ஆசிரியர்களும்; அரபி மொழியைக் கற்பிக்க ஹிந்து ஆண், பெண் ஆசிரியர்களும் இருக்கின்றனர். அதேபோல் மத நல்லிணக்கத்திற்கு ஓர் உதாரணமாகத் திகழ்கிறார் ஸாப்ரி. கதகளி நடனத்தை கேரளாவில் முதன்முதலில் அரங்கேற்றம் செய்த இஸ்லாமியப் பெண் என்ற சாதனைக்குச் சொந்தக்காரர்.
அவர் கதகளி படிக்கும் கேரளா கலாமண்டலம் அகில உலகப் புகழ் பெற்றது. பல்கலைக் கழக அந்தஸ்தையுடையது. நூற்றாண்டுகள் பழமையான கதகளி பாரம்பரியத்தில் வழக்கமான விதிமுறைகளைத் தாண்டி கேரள கலாமண்டலம் ஸாப்ரி மூலம் புரட்சியைச் செய்துள்ளது.
சமீபத்தில் ஸாப்ரியின் முதல் நிகழ்ச்சி திருச்சூரில் நடைபெற்றது.
சாதனை மங்கை ஸாப்ரி சொல்வது:
'எனக்குச் சொந்த ஊர் கொல்லம். அப்பா நிஜாம் புகழ் பெற்ற புகைப்படக்கலைஞர். கலை நிகழ்ச்சிகள், கலைஞர்களை வித்தியாசமாகப் படம் பிடிப்பதில் வல்லவர். நான் இரண்டாவது மகள். அவர் எடுக்கும் படங்களை சிறுவயதிலிருந்தே பார்த்து வருகிறேன். குறிப்பாக கதகளி படங்கள், கதகளி கலைஞர்களின் வித்தியாசமான உடை அலங்காரங்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். கதகளி நடனத்தை நேரில் காணவேண்டும் என்று அடம் பிடித்து, அப்பாவுடன் செல்வேன். பொதுவாக கதகளி நடனம் இரவு தொடங்கி அதிகாலை வரை நடக்கும்.
'நீ சின்னப் பெண். கதகளி நடக்கும் போது இரவு முழுவதும் உன்னால் கண் விழிக்க முடியாது. தூங்கி விடுவாய். தூங்கும் உன்னைக் கவனிப்பேனா? படம் பிடிப்பேனா? என் வேலை கெடும். அதனால் நீ என்னுடன் வரவேண்டாம்!'' என்று அப்பா மறுப்பார்.
'நான் தூங்க மாட்டேன். உங்களுடன் வந்தே தீருவேன்!'' என்று அழுது அப்பாவுடன் செல்லத் தொடங்கினேன். பல மணி நேர கதகளி ஒப்பனை முதல் மேடை நிகழ்ச்சி வரை உறங்காமல் பார்ப்பேன். கதகளி என்னை ஆக்கிரமித்தது. விரைவில் அதில் அறிமுகப்பயிற்சி பெற்றேன்.
நான் எட்டாவது படிக்கும் போது, கலாமண்டலம் பெண்களுக்கும் கதகளி பயிற்சி தருவதாக அறிவித்தது. அதுவரை சிறுவர்களுக்கு மட்டுமே கதகளி பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. நான் மனு செய்தேன். நேர்முகத் தேர்வில் கதகளி குறித்த எனது அறிவை, ஆர்வத்தைப் புரிந்து கொண்டார்கள். சேர்த்துக் கொண்டார்கள்.
திருச்சூர் கலாமண்டல வளாகத்தில் தங்கி எட்டாவதில் தொடங்கி இப்போது பத்தாம் வகுப்புப் படிக்கிறேன். எனக்கு 16 வயதாகிறது. அதிகாலை 5 மணிக்கு கதகளி வகுப்பு தொடங்கும். அதிகாலையில் உடல் மொழியும், முற்பகலில் கதகளியும் சொல்லிக் கொடுப்பார்கள். நடுவில் சிறிய ஓய்வு கிடைக்கும். பிற்பகல் வழக்கமான பள்ளிப் பாடங்கள் கற்றுத்தரப்படும்.
கலாமண்டலத்தில் நிகழ்ச்சி நடக்கும் போது அதைக் கண்டு விமர்சனம் எழுத வேண்டும். இது கதகளி படிப்பின் ஒரு அங்கமாகும். எல்லாச் செலவையும் கேரள அரசே ஏற்றுக்கொள்ளும். கதகளியில் முனைவர் பட்டம் பெறும் வரை இங்கு படிக்கலாம்.
இஸ்லாமியப் பெண்ணான நான் கதகளி படித்த போதும், அரங்கேற்றம் நடந்த போதும் எனது மத பெரியவர்களிடமிருந்து எந்த எதிர்ப்பும் எழவில்லை. அதுபோல், பாரம்பரிய ஹிந்து புராணங்களைச் சொல்லும் கதகளி நடனத்தை ஒரு இஸ்லாமியப் பெண் ஆடுவதா என்று ஹிந்து மத பெரியவர்களிடலிருந்தும் எதிர்ப்போ விமர்சனமோ கிளம்பவில்லை. கலைக்கு மதம் தடையில்லை!'' என்கிறார் ஸாப்ரி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.