மருத்துவச் செலவுகள் அதிகரித்துவிட உரிய சிகிச்சை பெற முடியாமல் கலங்கிக் கொண்டிருக்கும் ஏழைகளுக்கு உதவிக்கரம் நீட்டிக் கொண்டிருக்கிறது 'தணல்' என்ற தொண்டு நிறுவனம்.
கன்னியாகுமரி மாவட்டம், கேரளத்தின் தென் மாவட்டப் பகுதிகளில் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டோருக்கு டயாலிசிஸ் சிகிச்சையை இலவசமாக அளித்து வருவதுடன் ரத்தத் தானத்தையும் வழங்கி வருகிறது இந்த நிறுவனம்.
இதுகுறித்து தணல் தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் எஸ். அஸரப் கூறியதாவது:
'சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காக அதிக முக்கியத்துவம் அளித்துவருகிறோம்.
ஏழைக்கு மருத்துவச் சிகிச்சை கிடைப்பதில் எந்தத் தடையும் ஏற்படக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு, அவர்களின் சிகிச்சைக்குத் தேவையான உதவிகளை செய்து வருகிறோம். சிறுநீரக நோயாளிகளுக்கு டயாலிசிஸ் சிகிச்சை மட்டுமின்றி, பிற நோயாளிகளுக்கு ரத்தத் தானத்துக்கும் முன்னுரிமையை அளித்து வருகிறோம்,
அண்மைக்காலங்களில் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு, டயாலிசிஸ் தேவைப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஏழை பணக்காரர் என்ற பாகுபாடின்றி, பலதரப்பட்டோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு வருவதையும், தொடர் சிகிச்சைக்கு வசதியில்லாத பலரையும் நேரடியாகக் கண்டு வரும் அனுபவம்தான் மருத்துவச் சேவைக்குத் தூண்டுகோலாக அமைந்தது.
இதற்காக, களியக்காவிளை, திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் நகைக் கடையான 'ராஜகுமாரி குழுமம்' சார்பிலான 'தணல்' தொண்டு நிறுவனம் மூலம் இலவச டயாலிசிஸ் சிகிச்சை வழங்கப்படுகிறது. இதற்கான மருத்துவமனை திருவனந்தபுரம் அருகே கல்லம்பலம் பகுதியில் நான்கு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
ராஜகுமாரி குழுமத்தின் விற்பனை வருவாய் லாபத்தில் ஒரு பகுதியை ஏழைகளின் மருத்துவச் சிகிச்சைக்காக செலவிடுகிறோம். அந்த வகையில் நாள்தோறும் 10 பேருக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மாதம் ரூ. 7 லட்சம் வரை சிகிச்சை செலவுக்காக செலவிட்டு வருகிறோம். எங்கள் அமைப்பின் மூலம் மருத்துவ உதவி பெற்றவர்களில், யாரிடமும் சிகிச்சைக்காக ஒரு ரூபாய் கூட நாங்கள் நேரடியாக வாங்கியதில்லை.
மருத்துவச் சிகிச்சை தேவைப்படுவோரைத் தேர்வு செய்வதில், களியக்காவிளையைச் சேர்ந்த தன்னார்வலர் மீரான்பிள்ளை உள்ளிட்ட பலரின் பங்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது. சாதி, மதம், இனம் எதையும் பார்க்காமல் மருத்துவ சேவையை இலவசமாக அளித்து வருகிறோம்.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு அவசரத் தேவையென்றால், எங்கள் ரத்தத் தான குழுவைச் சேர்ந்தவர்கள் மூலம் ரத்தம் வழங்கி வருகிறோம்.
களியக்காவிளையில் உள்ள எங்கள் நிறுவன ஊழியர்களுக்கு தயார் செய்யப்படும் மதிய உணவில் தினமும் ஐம்பது நலிவுற்ற ஏழைகளுக்கும் உணவை வழங்கி வருகிறோம்.
ஏழைகளுக்குச் சேவை செய்வதில் கிடைக்கின்ற நிம்மதியையும், மகிழ்ச்சியையும் பார்ப்பதில் ஏற்படும் திருப்தியையும் வேறு எந்த விருதுகளாலும் தந்துவிட முடியாது' என்கிறார் அஸரப்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.