நாட்டின் முதல் பெண் பொறியாளர் சென்னையைச் சேர்ந்த அய்யால சோமயாஜுலா லலிதா.
1919 ஆகஸ்ட் 27-இல் பிறந்த இவர், தெலுங்கு பேசும் குடும்பத்தைச் சேர்ந்தவர். 1934-இல் லலிதாவுக்கு 15-ஆம் வயதில் திருமணம் செய்து வைத்தனர். மணமகனின் வயது பதினெட்டு. மூன்று ஆண்டுகள் கழித்து, 1937-இல் லலிதாவுக்கு மகள் பிறந்தார். மகள் சியாமளா பிறந்து நான்கு மாதங்களானபோது, லலிதாவின் கணவர் இறந்தார்.
இவரது அப்பா பப்பு சுப்பா ராவ் கிண்டி ஆண்கள் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்தார். இதனால் தனிமையில் இருந்த லலிதா பொறியியல் கல்லூரியில் சேர்ந்தார்.
இவருடன் பொறியியல் படிக்க திரேசியா, லீலாம்மா கோஷி சக மாணவிகளாக சேர்ந்தனர். லலிதா விடுதியில் தங்கிப் படித்தார். மகளை ஞாயிற்றுக்கிழமைகளில் சென்று பார்த்து வருவார். 1943-இல் லலிதா மின் பொறியியலில் பட்டம் பெற்று, 'நாட்டின் முதல் பெண் பொறியாளர்' என்ற பெருமையைப் பெற்றார்.
பின்னர், லலிதா மின் பொறியியல் தொடர்பான செய்முறைப் பயிற்சியை பீகார் ஜமால்பூர் ரயில்வே பணிமனையில் ஓராண்டு முடித்தார். தொடர்ந்து, சிம்லாவில் உள்ள மத்திய தரநிலை அமைப்பில் பணிபுரிந்தார். அவரது தந்தையின் கண்டுபிடிப்பான புகைபிடிக்காத அடுப்பு, ஜெலெக்ட்ரோமோனியம் (ஒரு மின் இசைக்கருவி) ஆகிய ஆய்வுக்கு உதவினார்.
மத்திய அரசின் மின்சார ஆணையர் அலுவலகத்தில் தொழில்நுட்ப உதவியாளராவதற்கு முன்பு, கிழக்கு இந்திய ரயில்வேயின் மின் துறையில் ஓராண்டு நடைமுறைப் பயிற்சியையும் லலிதா மேற்கொண்டார்.
1948-இல் லலிதா கல்கத்தாவில் உள்ள 'அசோசியேட்டட் எலக்ட்ரிக்கல் இண்டஸ்ட்ரீஸ்' என்ற இங்கிலாந்து நிறுவனத்தில் பணியில் சேர்ந்து, முப்பது ஆண்டுகள் பணிபுரிந்தார். மிகப் பெரிய அணையான பக்ரா நங்கல் அணையில் மின்சாரம் செல்லும் கம்பிகள், துணை மின்நிலைய அமைப்புகளை வடிவமைப்பதில் பணியாற்றினார்.
அன்றைய சூழ்நிலையில், 'விதவைகள் எங்கும் பயணம் செய்யக் கூடாது' என்ற சமூகக் கட்டுப்பாட்டால், களப் பணிக்காக வெளியிடங்களுக்குச் செல்லும் வாய்ப்பு லலிதாவுக்கு மறுக்கப்பட்டது. இதனால் அலுவலகத்தில் இருந்தவாறே மின்சாரப் பரிவர்த்தனையில் பல நுணுக்கங்களை வடிவமைப்புகளை உருவாக்கி, தனது திறமையைக் காட்டினார்.
பொறியாளர்கள்- விஞ்ஞானிகளின் மாநாட்டின் அமைப்புக் குழுக்களின் இந்தியப் பிரதிநிதியாக பல்வேறு நாடுகளுக்குச் சென்று வந்தார். அறிவியல் பாடங்களில் பட்டம் பெற்று கணித ஆசிரியையான தனது மகள் சியாமளாவை வளர்ப்பதற்கு உதவிய மைத்துனியுடன் தன் வாழ்நாளின் பெரும்பகுதியை லலிதா கழித்தார். 1977-இல் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். அவர் தனது அறுபதாவது வயதில் 1979-இல் காலமானார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.