

""விநாயகனே.. வினை தீர்ப்பவனே..''
-தெரு முனையில் பிள்ளையார் கோயிலில் பாடல் உரக்க ஒலித்தது. இன்று விநாயகர் சதுர்த்தி. எங்கள் வீட்டிலும் காலையில் எழுந்த உடனேயே விநாயகர் பாடல் சி.டி.யை அப்பா போட்டுவிட்டார். பூஜை முடியும் வரை அந்தப் பாடல்கள் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
களிமண் விநாயகர் சிலையை வாங்க நானும், அப்பாவும் கடைத்தெருவுக்குச் சென்றோம். பிளாட்பாரம் முழுவதும் பல்வேறு அளவுகளில் விநாயகர் சிலைகள் வீற்றிருந்தன. அதில் பல வண்ணம் பூசப்பட்ட சிலைகள் சூரிய ஒளிபட்டு மின்னிக் கொண்டிருந்தன.
முகம் களையாக உள்ள சிலையைப் பார்த்து வாங்கும்படி அம்மா சொல்லி இருந்ததால், அப்பா வெகு சிரத்தையாக ஓரடி உயரமுள்ள களிமண் சிலை ஒன்றை வாங்கினார். அச்சிலையின் அடிப்பாகத்தில் விநாயகரின் வாகனமான எலியும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருந்தது.
பிள்ளையார் கண்ணில் பொருத்துவதற்காக அப்பா இரண்டு பிள்ளையார் கண்களை (கருப்பு சிவப்பு கலரிலான குன்றிமணிகள்) வாங்கினார். நான் எலி வாகனத்தின் கண்களில் பொருத்தினால் அழகாக இருக்குமே என்று இரண்டு கண்களை கேட்டு வாங்கிக் கொண்டேன்.
வீட்டுக்கு வந்தோம். அம்மா பிள்ளையாரின் அழகையும், அவரது பாதம் அருகே அமர்ந்திருந்த எலியின் தோற்றத்தையும் பார்த்து மெச்சினாள்.
""ஏங்க... பிள்ளையாருக்கு கோல்டன் கலர் பெயின்ட் அடிச்சுடுங்க! கலர் பவுடர், பிரெஷ் எல்லாம் வீட்டில் இருக்கு,'' என்றாள்.
நான், பிள்ளையாரின் வாகனமான எலிக்கும் கோல்டு கலர் அடிக்கணும்னு அப்பா கிட்ட கண்டிப்பா சொல்லி விட்டேன்.
கொஞ்ச நேரத்தில் பிள்ளையார் பொன்னொளியில் மின்னினார். எலியும் பொன்னெலியாக மாறியிருந்தது.
அம்மா அந்த வருடம் வாங்கிய 5 சவரன் செயினை பிள்ளையாருக்கு அணிவித்து அழகு பார்த்தாள். பிள்ளையாரின் தொப்பையில் புதிதாக வெளியான 10 ரூபாய் நாணயத்தை ஒட்டினாள். கொழுக்கட்டை, வடை, பாயசம், சர்க்கரைப் பொங்கல், எள்ளுருண்டை, பழங்கள் என பிள்ளையாருக்கு விருந்து படைக்கப்பட்டது. அப்பா பிள்ளையார் அகவல் படித்துக் கொண்டிருக்க, அகவல் படித்து முடிக்கும் வரை எரியும் கற்பூரத் தட்டில் கற்பூர வில்லைகளை நான் வைத்துக் கொண்டிருந்தேன்.
கற்பூர ஜோதி முழுவதும் அணைந்து முடிந்ததும் பிள்ளையாரை விழுந்து கும்பிட்டோம். படையலுக்கு வைத்திருந்த பலகாரங்களில் கொஞ்சம், கொஞ்சம் எடுத்து காக்கைகளுக்கு வைத்துவிட்டு வந்தார் அப்பா.
அம்மா எங்களுக்கு இலை போட்டாள். பிள்ளையாருக்கு வைத்திருந்த கொழுக்கட்டை அனைத்தையும் பூஜை அலமாரியில் இருந்து எடுத்த போது நான் ஆட்சேபித்தேன்.
""அம்மா... இப்போதுதான் பிள்ளையாருக்கு படைச்சோம். அவர் சாப்பிடறதுக்குக் கூட டயம் கொடுக்காம, உடனே எடுத்து எங்களுக்கு பரிமாறுகிறீங்களே...'' என்று சற்றே கோபத்துடன் கேட்டேன்.
""குமரா ஜோக் அடிக்காம ஒழுங்கா சாப்பிடு...'' என்று அப்பா அதட்டினார்.
""அம்மா... நாம பக்தியோட படைச்சிருந்தா பிள்ளையார் நிச்சயமா நம்ம வீட்டு கொழுக்கட்டையை சாப்பிடுவாரு. அதனால நாலு கொழுக்கட்டையாவது பூஜை அலமாரியிலேயே வச்சுடும்மா. அப்பதான் நான் சாப்பிடுவேன்'' என்று அடம்பிடித்தேன்.
""ஆமாம் வாணி... போனா போவுது நாலு கொழுக்கட்டையை பூஜை அலமாரியிலேயே வச்சிடேன். என்னக் குறைஞ்சிடப்போவுது?'' என்றார் அப்பா.
""சரி... சரி... நான் அங்கேயே வச்சுத் தொலைக்கிறேன். முதல்ல நீங்க ரெண்டு பேரும் சாப்பிட்டு முடியுங்க. நான் சாப்பிடணும். காலைல 4 மணிக்கு எந்திரிச்சது. இன்னும் வேலை ஓயல..'' -அம்மா சலித்துக் கொண்டாள்.
பிள்ளையார் அருகே இருந்த கொழுக்கட்டை, எலி வாகனம் அருகே வைக்கப்பட்டிருந்த எள்ளுருண்டைகளைப் பார்த்தவாறே திருப்தியாக சாப்பிட ஆரம்பித்தேன். அத்துடன் ""பிள்ளையாரே... எங்க வீட்டுக் கொழுக்கட்டை ஒன்றையாவது நீ சாப்பிடணும்னு'' என மனசார வேண்டிக்கிட்டேன்.
மதியம் 2 மணி. உண்ட களைப்பில் அம்மாவும், அப்பாவும் ஹாலில் உறங்கிக் கொண்டிருந்தனர். நான் பூஜை அறையிலேயே பிள்ளையாரின் அழகை ரசித்தபடி படுத்திருந்தேன். சற்று நேரத்தில் உறங்கியும் போனேன். ஒரு அரை மணி நேரம் கழிந்திருக்கும். திடுமென ஏதோ சப்தம் கேட்டு எழுந்தேன்.
ஆஹா... என்ன ஆச்சர்யம்? பூஜை அலமாரியில் பிள்ளையாருக்குப் பதிலாக அவருடைய வாகனம் எலி வந்து உட்கார்ந்திருந்தது. அது தன் இரண்டு கால்களாலும் (கைகள் என்றும் சொல்லலாமே) ஒரு கொழுக்கட்டையைப் பிடித்துக்கொண்டு பரபரவென சாப்பிட்டுக் கொண்டிருந்தது.
""அம்மா... அம்மா...'' என்று பரவசத்துடன் கத்த ஆரம்பித்தேன். அம்மா என்னவோ ஏதோவென்று பதறி அடித்து எழுந்தாள். கூடவே அப்பாவும்.
""அம்மா... பிள்ளையாரு என்னோட பிரார்த்தனைய ஏத்துக்கிட்டாரு. அவரு வரலைன்னாலும், அவரோட வாகனமான எலியை அனுப்பி கொழுக்கட்டையை சாப்பிட்டுக்கிட்டிருக்காரு''என்றேன் மிகுந்த உற்சாகத்தோடு.
ஆனாலும், எலி என்ற சொல்லைக் கேட்டதும் அம்மா மிகவும் கிலி பிடித்தாற்போல் ஆகிவிட்டாள். ""என்னது எலியா?'' என்றபடியே வேக வேகமாக பூஜை அறைக்கு ஓடி வந்தாள்.
""எங்கே எலி...? எங்கே எலி...?'' என்று கத்தினாள்.
நான் பூஜை அலமாரியைக் காட்டினேன். ஆனால், அங்கே எலி இல்லை. அது மாயமாக மறைந்து விட்டிருந்தது. அம்மா போட்டக் கூச்சலில் அது பயந்து ஓடிவிட்டிருக்கும் என்று புரிந்தது.
""அதுக்குத்தான் நான் பூஜை அலமாரியில் தின்பண்டம் எதுவும் வைக்கிறதில்ல. சொன்னா கேட்டாதானே...'' என்ற அம்மா, அடுத்த கணம் அப்பாவைப் பார்த்து, ""ஏங்க... இதுநாள் வரைக்கும் நம்ம வீட்ல எலித் தொல்லை இல்லாம இருந்துச்சி. .இப்போ வந்துடுச்சு. இனி அது அடிக்கடி இங்கே வரும். துணி மணி எல்லாத்தையும் கடிச்சு பாழாக்கிடும். அத்தோட எலியின் சிறுநீரினால் லெப்டோபைரஸ் என்ற எலிக் காய்ச்சல் நோய் வேற வந்திடுமாம். நீங்க கடைத்தெருவுக்குப் போய் நாட்டு மருந்துக் கடையில் உடனே எலி விஷம் வாங்கியாந்துருங்க. இல்லேன்னா நாம நிம்மதியா இருக்க முடியாது'' என்று அரற்றினாள்.
"சரி... சரி...' என்றவாறே அப்பா மீண்டும் படுக்கப் போயிட்டார்.
அம்மா மீண்டும், ""என்னங்க... இன்னைக்கு புதன்கிழமை. மூன்றாம் நாள் வெள்ளிக்கிழமையா வருது. பிள்ளையாரேஅன்னைக்கு கொண்டுவிட முடியாது. அதனால இன்னைக்கு சாயந்தரமே பிள்ளையாரக் கொண்டு போய் கடலில் போட்டுட்டு வந்துடுங்க. அத்தோட எலி விஷமும் மறக்காம வாங்கிட்டு வந்துடுங்க. என்ன நான் சொல்றது காதுல விழுந்ததா?'' என்று வலியுறுத்தி சொல்லிக் கொண்டிருந்தாள்.
அப்பா மீண்டும் "சரி... சரி...' என்றவாறே பாக்கி தூக்கத்தைத் தொடர்ந்தார்.
நான்தான் திகைத்துப் போனேன்.
இந்தப் பெரியவங்கள நம்மாள புரிஞ்சுக்கவே முடியல்லையே. காலைல பிள்ளையாரை சாமி சாமின்னு கொண்டாடினாங்க.. இப்ப என்னடான்னா...?
பிள்ளையாரைப் பார்க்க எனக்கே பரிதாபமாக இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.