

நண்பர்கள் இருவர் இருந்தனர். அவர்கள் இருவரும் ஒருமுறை பாலைவனம் வழியாக பயணம் சென்று கொண்டிருந்தனர். இருவரில் ஒருவன் முரட்டு குணம் கொண்டவன்; மற்றவன் நண்பனுக்காக உயிரையும் கொடுக்கும் இரக்க குணம் நிறைந்தவன். பாலைவனம் வழியே இருவரும் பேசிக் கொண்டே சென்றனர். நண்பர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த முரட்டு நண்பன், கோபத்தில் முன்பின் யோசிக்காமல் உடனே மற்றவனின் கன்னத்தில் அடித்துவிட்டான். அடிவாங்கிய நண்பன் அழுது கொண்டே, "இன்று எனது நண்பன் என்னை அடித்துவிட்டான்' என்று பாலைவன மணலில் எழுதி வைத்தான். மற்றபடி அடித்த நண்பனைத் திருப்பி அடிக்கவோ, திட்டவோ செய்யவில்லை.
இதைக்கண்ட அந்த முரட்டு நண்பனுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. தன்னிடம் அடிவாங்கியும் தன்னை எதுவும் செய்யவில்லையே என மனதுக்குள் நினைத்துக் கொண்டான். ஆனால் அவனிடம் வெளிப்படையாகக் கேட்கவில்லை. தொடர்ந்து எதுவும் பேசாமல் இருவரும் பயணத்தைத் தொடர்ந்தனர்.
அப்போது வழியில் ஓர் ஆறு குறுக்கிட்டது. அதைக் கண்டவுடன் இருவருக்கும் அதில் குளிக்க ஆசை எழுந்தது. இருவரும் ஆற்றில் இறங்கி குளிக்கத் தொடங்கினர். அப்போது திடீரென்று அடிவாங்கிய நண்பன், பெரிய சுழலில் மாட்டிக்கொண்டு தண்ணீரில் மூழ்கித் தத்தளித்தான். இதைப் பார்த்த முரட்டு நண்பன், உடனே அவனைக் காப்பாற்றிக் கரையில் சேர்த்தான். மயக்கம் தெளிந்த நண்பன் அருகில் இருந்த ஒரு கல்லில், "இன்று என் நண்பன் என் உயிரைக் காப்பாற்றினான்' என்று எழுதிக் கொண்டிருந்தான்.
இதைக் கண்ட முரட்டு நண்பன், ""நான் உன்னை அடித்தபோது மணலில் எழுதி வைத்தாய்; உன்னைக் காப்பாற்றியதை கல்லில் செதுக்கி வைத்துள்ளாய். ஏன் இப்படிச் செய்தாய்?'' என்று கேட்டான்.
அதற்கு அடிவாங்கிய நண்பன், ""சமயம் என்ற காற்றானது கெட்ட செயல்களை அழித்துவிடும். ஆனால் நல்லதை எவன் செய்கிறானோ, அதைக் கல்லில் செதுக்கினால் காலத்திற்கும் அது அழியாமல் நிலைத்து நிற்கும். ஆதலால், கெட்டவைகள் மறக்க வேண்டியவை; நல்லவை நினைவு கொள்ள வேண்டியவை'' என்று கூறினான்.
தன்னிடம் அடிவாங்கிய நண்பன் கூறியதைக் கேட்ட முரட்டு நண்பன் அவமானத்தால் தலைக்குனிந்தான். இனிமேல் நல்லதையே செய்ய வேண்டும் என்று மனதுக்குள் உறுதிக் கொண்டான்.
ஹிந்தியில் : மது
தமிழில் : இடைமருதூர் கி.மஞ்சுளா
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.