
அரையாண்டுத் தேர்வின் கணித விடைத்தாளை வாங்கிப் பார்த்த பாபு திடுக்கிட்டான். முதலிரண்டு பக்கங்களை மட்டுமே திருத்தியிருந்த ஆசிரியர், மற்றப் பக்கங்களை சிவப்பு மையால் கோடிட்டு அடித்து விட்டு நூற்றுக்கு ஜீரோ என மதிப்பெண் போட்டிருந்தார்.
காலாண்டுத் தேர்வில் தொண்ணூறு வாங்கியிருந்தவன், இம்முறை நூற்றுக்கு நூறு வாங்க வேண்டும் எனக் கடுமையாக உழைத்திருந்தான்.
என்ன காரணத்தினால் ஆசிரியர் தனக்கு சைபர் போட்டிருக்கிறார் என்று புரியாமல் கலங்கியவன், ஆசிரியரிடம் சென்று அதற்கான காரணத்தைக் கேட்டான்.
அவன் தாளை வாங்கிப் பார்த்தவர், ""நீதானா அது? தாள்ல நம்பர் இருந்ததினால யாருன்னு என்னால கண்டுபிடிக்க முடியல. உனக்கு மட்டுமில்ல, உன்னோடு சேர்த்து மொத்தம் மூணு பேருக்கு முட்டை போட்டிருக்கிறேன். மத்த ரெண்டு பேர் யார்? எழுந்திருங்க'' என்றார் கோபமாக.
பாபுவிற்குப் பின்னால் உட்கார்ந்திருந்த இருவர் எழுந்து நின்றனர்.
""மூணு பேரும் ஒருத்தரையொருத்தர் பார்த்து ஈயடிச்சான் காப்பி பண்ணியிருக்கீங்க. ஒருத்தன் செஞ்சிருக்கிற மடத்தனமான தப்பையே மத்த ரெண்டு பேரும் பண்ணி மாட்டிக்கிட்டீங்க. அதனால மூணு பேருக்கும் சைபர் போட்டுட்டேன். காப்பியடிச்சதுக்குத் தண்டனை கொடுத்தே தீரணும். அதனால வாங்க என்கூட'' என்று சொல்லி, அவர்கள் மூவரையும் தலைமை ஆசிரியரிடம் அழைத்துச் சென்றார் ஆசிரியர்.
""சார்! நான் கஷ்டப்பட்டு படிச்சிதான் தேர்வு எழுதினேன். யாரையும் பார்த்து நான் காப்பியடிக்கல. மத்த எல்லாப் பாடத்துலேயும் தொண்ணூறு சதவீதம் மார்க் வாங்கியிருக்கேன்'' என்று தலைமை ஆசிரியரிடம் சொல்லித் தேம்பித் தேம்பி அழுதான் பாபு.
அவன் அழுவதைப் பார்த்த மாணவர்கள் இருவரும், ""சார்! அவன் நல்லாப் படிக்கிறவன் சார். நாங்கதான் அவனைப் பார்த்து எழுதினோம். எங்களுக்குத் தண்டனை கொடுங்க சார். அவனை விட்டுடுங்க சார்'' என்றனர் ஒரே குரலில்.
எதிர்காலத்தில் கவனமாக இருக்கும்படி பாபுவை எச்சரித்து அனுப்பி விட்டு, அவர்களிருவரையும் பெற்றோரை மறுநாள் அழைத்து வருமாறு சொல்லி அனுப்பினார் தலைமை ஆசிரியர்.
""வீட்டுல அப்பா திட்டுவாரு. முழுத் தாளையும் திருத்தி மார்க்கை மாத்திப் போடுங்க சார்!'' ஆசிரியரிடம் மீண்டும் மீண்டும் கெஞ்சினான் பாபு.
""மதிப்பெண் போட்டது, போட்டதுதான். "ரேங்க் கார்டி'லயும் எழுதிட்டேன். இனிமே மாத்த முடியாது'' உறுதியாக மறுத்துவிட்டார் ஆசிரியர்.
""சார்! நான் நல்லா படிக்கிறவன். மத்தவங்களைப் பார்த்து காப்பியடிக்க மாட்டேன்னு உங்களுக்கு நல்லாத் தெரிஞ்சிருந்தும் எனக்கும் சேர்த்து இவ்வளவு பெரிய தண்டனை வழங்கியது நியாயமா சார்?'' என்றான் பாபு சோகமான குரலில்.
""நீ நல்லா படிக்கிற மாணவன். முதல் மூணு ரேங்க்குள்ள வருவே. யாரையும் பார்த்து காப்பி அடிக்க மாட்டேன்னு எனக்கு நல்லாவே தெரியும். ஆனா, எழுதின உன்னோட விடைத்தாள்களை மறைச்சி வைக்காம, பின்னாடி உட்கார்ந்திருந்தவங்க அப்படியே பார்த்து எழுதற வரைக்கும் கவனக்குறைவா இருந்திருக்கே.
லஞ்சம் வாங்குறதும் குற்றம், கொடுக்கிறதும் குற்றம் அப்படீன்னு சொல்றாங்களே, அதே மாதிரி காப்பியடிக்கிறது குற்றம். அந்தத் தப்பு நடக்கிறதுக்கு உதவி செய்றதும், உடந்தையாயிருக்கிறதும் குற்றம்தான். தண்டனையோட நோக்கமே, எதிர்காலத்துல மீண்டும் அதே தப்பைச் செய்யாம இருக்க வைக்கிறதுதான். இப்ப உனக்குக் கிடைச்ச தண்டனை, உன் மனசைப் பெரிய அளவில பாதிச்சிருக்கு. அதனால, இனிமேல் என்னைக்கும் தெரிஞ்சோ, தெரியாமலோ காப்பியடிக்கிறதுக்கு உடந்தையா இருக்க மாட்டேங்கிறது நிச்சயம்.
அடுத்து பொதுத்தேர்வு நடக்கப் போகிறது. அதுல அப்பப்ப கண்காணிப்புக் குழுவினர் வந்து சோதனை செய்வாங்க. அவங்ககிட்ட நீ மாட்டினா மூணு வருஷத்துக்குத் தேர்வே எழுத முடியாம உன்னோட எதிர்காலமே பாழாயிடும். அவங்களுக்கு நீ யார், எப்படி படிப்பேங்கிற விவரமெல்லாம் தெரியாது. அதனால, உன்னோட இந்தக் கவனக் குறைவு உன்னை எங்க கொண்டு போய்விடும், அதோட விளைவு எப்படி இருக்கும்னு உனக்குப் புரிய வைக்கணும்னுதான் நான் அவ்வளவு கடுமையா உன்கிட்ட நடந்துகிட்டேன். இனிமே அரையாண்டுத் தேர்வில் வாங்கிய மதிப்பெண்ணைப் பத்தி கவலைப்படறதை விட்டுட்டு, பொதுத்தேர்வில் நூத்துக்கு நூறு வாங்குறதுக்கு முயற்சி பண்ணு'' என்றார் ஆசிரியர்.
""நிச்சயமா நூத்துக்கு நூறு எடுத்து நம்ம பள்ளிக்கும், எங்க வீட்டுக்கும் பெருமை சேர்ப்பேன் சார்!'' என்றான் பாபு உறுதியுடன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.