

முன்னொரு காலத்தில் வெள்ளி நிற மீன் ஒன்று இருந்தது. அது மலையிலுள்ள ஏரியில் வசித்து வந்தது. அதே ஏரியில் பெரிய வெண்ணிற அன்னப்பறவை ஒன்றும் வாழ்ந்தது. அது நீண்ட கழுத்தையும், அழகான அலகையும் கொண்டிருந்தது. ஒரு நாள் அந்த அன்னம், வெள்ளி மீன் இருக்கும் இடத்தைக் கடந்து சென்றது. அப்போது அது, ""ஏய்... வெள்ளி மீனே, நான் உன்னைத் தின்றுவிடப் போகிறேன்!'' என்றது.
÷அச்சமடைந்த மீன், அன்னத்திடம் கெஞ்சியது: ""வெண்ணிற இறகுகளும், சிவப்பு அலகுமுடைய அன்னமே, பலம் மிகுந்த சகோதரியே என்னைத் தின்றுவிடாதே!''
÷அன்னப் பறவை பதில் சொன்னது: ""சரி, நான் உன்னைக் கொல்லமாட்டேன். ஆனால் நீ, என்னுடைய தொலைந்துபோன *மூடு காலணிகளைக் கண்டுபிடித்துத் தரவேண்டும். மூடு காலணிகள் இல்லாமல் என் பாதங்கள் தண்ணீரில் நனைகின்றன. நீ அவற்றைக் கண்டுபிடித்துக் கொடுத்தால் நான் உன்னைக் கொல்லமாட்டேன். இல்லையென்றால் என்னிடமிருந்து நீ தப்பிக்க முடியாது.''
÷உடனே வெள்ளி மீன், அந்த ஏரி முழுதும் நீந்தி அன்னத்தின் மூடு காலணிகளைத் தேடியது. ஆனால் எங்குமே கிடைக்கவில்லை. வெள்ளி மீன் ஏரியின் அடிப்பகுதிக்குக் கூட சென்று தேடியது. ஏமாற்றம்தான் மிஞ்சியது.
÷கடைசியில் என்ன செய்வதென்று தெரியாமல் வெள்ளி மீன், கரையோர நாணல் அருகே நீந்தி மேலே வந்தது. வருத்தம் தாளாமல் அழத் தொடங்கியது.
÷தாவிக் குதிக்கும் தவளை ஒன்று அந்த அழுகுரலைக் கேட்டது. ""ஏன் அழுகிறாய் சின்னஞ் சிறிய வெள்ளி மீனே?'' என்று கேட்டது தவளை.
÷தனக்கு ஏற்பட்டிருக்கும் துயரத்தை தவளையிடம் சொன்னது வெள்ளி மீன். மீன் சொன்னதைக் கேட்டதும் தவளை, ""கவலைப்படாதே வெள்ளி மீனே! நான் உனக்கு உதவி செய்கிறேன், நான் வரும் வரை இங்கேயே காத்திரு'' என்று சொல்லிச் சென்றது.
தவளை கரைக்குச் சென்று கத்தத் தொடங்கியது:
""க்ரோக் - க்ரோக் - க்கோக் -''
÷அப்போது, அலரி மரத்தில் அமர்ந்திருந்த சிட்டுக் குருவி தவளையிடம் விசாரித்தது: "" என்ன நடந்தது தவளைத் தங்கச்சி?''
÷தவளை, சிட்டுக் குருவியிடம் வெள்ளி மீனின் பிரச்னையைக் கூறியது. வெள்ளி மீனுக்கு, அன்னப் பறவையின் மூடு காலணிகள் கிடைப்பதற்கு உதவி செய்யும்படிச் சொன்னது.
÷உடனே சிட்டுக் குருவி, ஒரு தோட்டத்திற்குள் சிறகடித்துப் பறந்து சென்றது. அந்தத் தோட்டத்தில் குட்டிப் பெண் ஒருத்தி விளையாடிக் கொண்டிருந்தாள். அவள் பெயர் மாஷா. வெள்ளி மீன், அன்னத்தின் மூடு காலணிகளைக் கொண்டுவராவிட்டால், அதை அன்னம் தின்றுவிடும் எனும் தகவலை அவளிடம் சொன்னது சிட்டுக் குருவி.
அதைக் கேட்டதும் மாஷா, உடனே சென்று தன்னுடைய அழகான மூடுகாலணிகளைக் கொண்டு வந்துகொடுத்தாள். ""உடனே போ சிட்டுக் குருவியே, என்னுடைய இந்த மூடு காலணிகளைக் கொடுத்து வெள்ளி மீனைக் காப்பாற்று!''
÷சிட்டுக் குருவி உடனே பறந்து சென்று, அந்தக் காலணிகளை தவளையிடம் கொடுத்தது. தவளை அந்தக் காலணிகளை வெள்ளி மீனிடம் கொடுத்தது. மிகவும் மகிழ்ச்சியடைந்த வெள்ளி மீன், அன்னப் பறவையிடம் அந்தக் காலணிகளை ஒப்படைத்தது. அதைப் பார்த்ததும் அன்னப் பறவை, பேரானந்தம் கொண்டது. ""இனி ஒருபோதும் உன்னைத் தொந்தரவு செய்யமாட்டேன் வெள்ளி மீனே!'' என்று உறுதியளித்தது.
÷வெள்ளி மீன் அந்த நல்ல செய்தியை தவளையிடம் சொன்னது. தவளை சிட்டுக் குருவிடம் சொன்னது. சிட்டுக் குருவி அதைக் குட்டிப் பெண் மாஷாவிடம் தெரிவித்தது. வெள்ளி மீன் ஆபத்திலிருந்து தப்பிவிட்டதை அறிந்து மாஷா பெரிதும் மகிழ்ச்சியடைந்தாள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.