விடைகொடு கானகமே!

நீங்கள் மூவரும் இந்தக் காட்டோரக் குடிலுக்கு வந்து நான்கு நாட்களாகின்றன. விலங்குகள் மற்றும் பறவைகளின் பழக்க வழக்கங்களை உற்று நோக்கி அறிந்துகொள்வதற்காக எங்கள் ஆசிரியருடன் இங்கே வந்தோம். இந்த நான்கு நாட்
விடைகொடு கானகமே!

நீங்கள் மூவரும் இந்தக் காட்டோரக் குடிலுக்கு வந்து நான்கு நாட்களாகின்றன. விலங்குகள் மற்றும் பறவைகளின் பழக்க வழக்கங்களை உற்று நோக்கி அறிந்துகொள்வதற்காக எங்கள் ஆசிரியருடன் இங்கே வந்தோம். இந்த நான்கு நாட்களில் எங்களுக்குக் கிடைத்த அனுபவத்தை ஒருபோதும் மறக்க முடியாது. ஒருசில மிருகங்களைத்தான் பார்க்க முடிந்தது என்றாலும், நிறைய பறவைகளைப் பற்றி நேரடியாகத்  தெரிந்துகொண்டோம். சிறு சிறு பிராணிகளைப் பார்த்து மகிழ்ந்தோம்.

காட்டின் அழகு எங்களை மிகவும் வசீகரித்தது. இரவுப் பொழுதுகளில் குடிலுக்குள் படுத்தபடி, வெளியிலிருந்து வரும் விதம் விதமான ஓசைகளைக் கேட்கும்போதுதான் சற்றுப் பயமாக இருக்கும். ஆயினும், அந்த நேரங்களில் வன விலங்குகளைக் குறித்து ஆசிரியர் சொல்லும் கதைகள் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கும். 

ஒவ்வொரு பிராணியையும் காட்டி எங்கள் ஆசிரியர் அதுகுறித்த அரிய தகவல்கள் பலவற்றைச் சொன்னார். இன்னும் கொஞ்சம் நாட்கள் இந்தக் காட்டுப் பகுதியிலேயே இருப்பதற்கு விருப்பம்தான். ஆனால், விடுமுறை முடிந்து நாளை மறுநாள் பள்ளி திறக்கிறது. நாங்கள் இன்றே புறப்படவேண்டும்.

புறப்படுவதற்காக ஆசிரியர் பொருட்களையெல்லாம் எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறார். என்னுடன் வந்த மற்றொரு மாணவன் அவருக்கு உதவி செய்துகொண்டிருக்கிறான். சற்று தூரத்திலிருந்த குடியிருப்புப் பகுதியிலிருந்து சில சிறார்கள் விறகு பொறுக்குவதற்காக காட்டிற்குள் சென்றனர். நான் குடிலுக்கு வெளியே வேடிக்கை பார்த்தபடி நின்றுகொண்டிருக்கிறேன். இளவெயிலில் நின்றிருந்தாலும் குளிரில் உடல் சிலிர்க்கிறது.

ஒரு வாலாட்டிக் குருவி வந்தது. ""நண்பர்கள் இங்கிருந்து போகப்போகிறார்களே, கடைசியாக ஒரு முறை பார்த்துவிட்டுப் போகலாமே என்று வந்தேன்'' என்று சொல்வதுபோல் அது என்னை உற்றுப் பார்த்தது.

சற்று நேரம் கழித்து நாரை வந்தது. ""சரி, நண்பர்களே போய் வாருங்கள்!'' என்பதுபோன்று குரலெழுப்பியபடியே, ஆற்றங்கரைக்கு எதிர் புறமாக இருக்கும் மஞ்சள் சதுப்பு நிலத்தில் இறங்கியது. சேற்று மேட்டின் மீது காலார நடக்கத் தொடங்கியது.

சில நிமிடங்கள் கழிந்திருக்கும். வானத்தில் வட்டமிட்டபடி பறந்து மெதுவாகக் கீழே இறங்கி வந்தது ஒரு பருந்து. ஒரு மரத்தில் அமர்ந்து,""வாழ்த்துகள்! சென்று வாருங்கள். பிறகு எப்போதாவது சந்திக்க வாய்ப்புக் கிடைக்கும் என்று நினைக்கிறேன்...''என்று கம்பீரமாகச் சொல்வதுபோன்று, அது என்னைப் பார்த்து தலையசைத்தது.

அடுத்தபடியாக வந்தது ஒரு வேட்டைப் பறவை. முன்பு எப்போதோ அது குருவி முட்டைகளைத் தின்றிருக்கும் போலிருக்கிறது. இப்போதும் அதற்குத்தான் வருகிறது என்று நினைத்த வாலாட்டிக் குருவிகள்

எல்லாம் ஒன்று சேர்ந்தன. அந்தப் பறவையை கொசுக் கூட்டம் போலச் சூழ்ந்துகொண்டு விரட்டித் துரத்தின. குருவிகளுடன் சில காக்கைகளும்  சேர்ந்துகொண்டன. ""பார்த்தாயா நண்பனே, உன்னை வழியனுப்பலாம் என்று வந்தேன். இந்தப் பறவைகள் தேவையில்லாமல் வம்பிழுக்கின்றன. சரி, பிறகு பார்ப்போம்'' என்பதாக அது பரிதாபமாகக் கத்தியபடி அங்கிருந்து தப்பித்துப் பறந்து சென்றது.

ஒரு குயில் தேவதாரு மரத்திலிருந்து இடைவிடாமல் கூவிக்கொண்டிருந்தது. ""உங்கள் வருகைக்கு நன்றி... உங்கள் வருகைக்கு நன்றி...'' என்று ராகம் பாடுகிறதுபோலும்.

உயரமான நாணல் புதற்களுக்கிடையேயிருந்து தவ்விக் குதித்து நடந்து வந்த கொக்கு, ""அடுத்த முறை வரும்போது இன்னும் நிறைய நண்பர்களை அழைத்துக்கொண்டு வாருங்கள்'' என்பதாகச் சிறகடித்தது.

மஞ்சள் நிற தவிட்டுக் குருவி என்ன சொல்லியிருக்கும் என்று நினைக்கிறீர்கள்? மெல்லிய நாணல் மேல் அமர்ந்தபடி,""எங்களையெல்லாம் மறந்துவிடமாட்டீர்கள்தானே நண்பர்களே! உங்களைப் பிரிவது எனக்குச் சற்று வருத்தமாகத்தான் இருக்கிறது...'' என்பதுபோல் "கீச்'ட்டது. அந்தக் குரலில் இருந்த அன்பு என் மனதை நெகிழச் செய்தது. நானும் சொன்னேன்: ""ஒருபோதும் மறக்க மாட்டேன் சின்னஞ்சிறு பறவையே!''

உலர்ந்த சருகுகளுக்கிடையே நகர்ந்து போனது ஒரு மூஞ்சூறு. அது அடிக்கடி மெல்லிய ஓசை எழுப்பியது. ""எங்கள் காட்டைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை இன்னும் நிறைய இருக்கின்றன. வாய்ப்புக் கிடைக்கும்போது இங்கே வாருங்கள்!'' என்பதுதான் அந்த ஓசையின் பொருள்.

கதிரவனின் கதகதப்பு மேலும் அதிகமானது. செர்ரி மரத்தின் சின்ன இலைகளைப்போல பச்சைச் சிறகுகள்கொண்ட பறவைகள் பறந்து வந்து மரக் கிளைகளில் அமர்ந்தன. கொஞ்சலாகக் குரல் கொடுத்தன. ""புறப்படப் போகிறீர்களா, நண்பர்களே! உங்களுக்குத் தருவதற்கு எங்களிடம் ஏதுமில்லை. அடுத்தமுறை நீங்கள் வரும்போது ஏதாவது சேகரித்து வைத்திருக்கிறோம்'' என்றுதான் அவை சொல்லியிருக்க வேண்டும். பிறகு எல்லாப் பறவைகளும் ஒரே சமயத்தில் விருட்டென்று பறந்துபோய்விட்டன.

ஒரு பூச்செடி பட்டுக் குஞ்சம்போல் காற்றில் ஆடியது. வெயிலில் மின்னியது. தேனீயும் ஒரு வண்டும் சுழன்று சுழன்று வந்தன. அவை,         

 ""இயற்கையின் நண்பர்களே

    இனிமையான பிள்ளைகளே

    இந்தப் பூவின் தேனெல்லாம்

    உங்கள் நெஞ்சில் நிரம்பட்டும்.

    சொல்லினிக்கச் செயல் இனிக்கச்

    சேர்ந்து நடை போடுவீர்                 

    உலகை வென்று வாழ்வீர்.''

என்று பாடியபடியே பூக்களைச் சுற்றி வந்தன. பூவில் அமர்ந்திருந்த வண்ணத்துப் பூச்சி  அந்தப் பாடலுக்கு ஏற்றபடி தன் சிறகுகளை மடக்கி மடக்கி மூடியது.

குளத்திலிருந்த வாத்து தன் நீண்ட கழுத்தை நீட்டி தண்ணீரை உறிஞ்சியது. உறிஞ்சிய தண்ணீரை நாற்புறமும் விசிறித் தெளித்து விளையாடியது. தண்ணீரிலேயே சுழன்றது அது. தன் இறகுகளைக் கொண்டு நீர்ப்பரப்பில் கோடு கிழித்தது. குளித்து முடித்ததும், ஈரமாக மின்னும் தனது வெள்ளி அலகை உயர்த்தி, ""வணக்கம் கூட்டாளி! தண்ணீர் மிகவும் குளிர்ச்சியாக இருக்கிறது. குளித்துவிட்டுப் புறப்படு. உற்சாகமாக இருக்கும்'' என்று ஆலோசனை சொல்வதுபோல் கத்தியது.

இதமான வெயிலில் பாறையில் சுருண்டு படுத்திருந்த விரியன் பாம்பு,""நீங்கள் இங்கிருந்த வரையில் எந்தப் பிராணியையும் தொந்தரவு செய்யவில்லை. உங்களைப்போன்ற நல்லவர்களைச் சந்தித்ததில் எனக்கு மகிழ்ச்சிதான். இன்னும் கொஞ்சம் நாட்கள் இங்கே தங்கினால் என்ன?'' எனும் விதமாய் பரிவுடன் பார்த்தது.

அவசரமாக வந்த  குள்ளநரி என்னைக் கண்டுகொண்டதும், கவலையோடு  சில நொடிகள் பார்த்தது. பிறகு விடை பெறுவதுபோன்று தலையசைத்தபடி திரும்பிச் சென்றது.

சாமான்களைக் கட்டி எடுத்துக்கொண்டு ஆசிரியரும், என் நண்பனும் முன்னே சென்றார்கள். அந்தப் பொதிகளில் ஒன்றிலிருந்து கொஞ்சம் தானியங்கள் தரையில் சிந்தின. எங்கிருந்தோ வந்த மஞ்சள் குருவிகள் தரையில் கிடந்த தானியங்களைக் கொத்தித் தின்றன. கொத்துவதற்கிடையே அவை அடிக்கடி தலையுயர்த்தி என்னைப் பார்த்தன. ""நன்றி, நண்பா! போய் வா!'' என்று சொல்கின்றன போலும் அவை. திரும்பித் திரும்பி அந்தக் குருவிகளைப் பார்த்துக்கொண்டே என் ஆசிரியரைப் பின் தொடர்ந்து சென்றேன் நான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com