

சூரிய வெளிச்சம் நிறைந்த ஒரு பசும் காட்டில் முயல் கூட்டம் ஒன்று வாழ்ந்து வந்தது. அந்தக் கூட்டத்தில் நிறைய முயல் குட்டிகள் இருந்தன. சில வெள்ளை நிறத்தில் இருந்தன. சில பழுப்பு நிறத்தில் இருந்தன. சிலவற்றின் உடல்களில் புள்ளிகள் அமைந்திருந்தன. எல்லா முயல் குட்டிகளுக்கும் சிறிய, இளஞ் சிவப்பான மூக்கு இருந்தது. மென்மையான வால், காதுகள் இரண்டும் மேல் நோக்கி நேராக நின்றிருந்தன.
÷ஆனால், "புஸýபுஸý' என்ற முயலைத் தவிர மற்றவை எல்லாம் ஒன்றுபோலவே இருந்தன. புஸýபுஸýவிற்கு வித்தியாசமான காதுகள் அமைந்திருந்தன. அதன் காதுகள் நேராக மேல் நோக்கி இல்லாமல் தரையைத் தொடும்படி கீழ் நோக்கித் தொங்கிக்கொண்டிருந்தன. அதைப் பற்றி புஸýபுஸý ஒன்றும் கவலைப்படவில்லை. அது மற்ற முயல்களைப்போல் சாதாரணமாக இருந்தது. தன் காது இப்படி இருக்கிறதே என்று அது வருந்தியதே இல்லை.
÷முயல்கள் நாளுக்கு நாள் வளர்ந்து வந்தன. மற்ற முயல்கள் அனைத்தும் புஸýபுஸýவை கவனிக்கத் தொடங்கின. மற்ற முயல்களிடமிருந்து புஸýபுஸý வேறுபட்டிருந்தது. பார்ப்பதற்கு வேடிக்கையாகத் தோன்றியது அது. அது நடந்து செல்லும்போதெல்லாம்,மற்ற முயல்கள் பார்த்து "ஆகா ஓகோ' என்று விழுந்து விழுந்து சிரித்தன. ""ஒரு முயல் தன் காதுகளை மண்ணில் புரளவிட்டபடி நடந்து செல்கிறது பாருங்கள்!'' என்று உரக்கக் கத்தின.
÷புஸýபுஸýவிற்குக் குழப்பமாக இருந்தது. தான், மற்றவர்கள் பார்த்துச் சிரிக்கும்படியான தோற்றத்தில் இல்லையே என்று நினைத்தது அது.
மற்ற முயல்களைப்போல அதன் உடலும் புஸýபுஸýவென்று ரோமம் நிறைந்ததாகத்தான் இருந்தது. வாலும், ஒரு முயலுக்கு இருக்க வேண்டிய இயல்புப்படிதான் இருந்தது. "இந்த முயல்கள் ஏன் என்னைப் பார்த்து இப்படி விழுந்து விழுந்து சிரிக்கின்றன?' என்று சிந்தித்த புஸýபுஸý, கடைசியில் அந்த முயல்களிடமே கேட்டது:
÷""நீங்கள் ஏன் எப்போதும் என்னைப் பார்த்து சிரிக்கிறீர்கள்?''
÷சற்று நேரமாவது அமைதியாக இருக்கவேண்டும் என்றுதான் மற்ற முயல்கள் நினைத்தன. ஆனால், அவற்றால் சிரிப்பை அடக்க முடியவில்லை. எல்லா முயல்களும் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தன. ஒரு முயல் வெடுக்கென்று கூறியது:
÷""நாங்கள் சிரிப்பதற்கு உன் காதுகள்தான் காரணம். அவை தரையில் புரளும்படி தொங்கிக்கொண்டிருக்கின்றன. நீ எங்களைப்போல் அழகாக இல்லை.''
÷புஸýபுஸý குனிந்து கீழே பார்த்தது. ஆமாம்! உண்மையில் அதன் காதுகள், தரை மண்ணில் புரண்டுகொண்டிருந்தன.
÷மற்ற முயல்களுக்கும் புஸýபுஸýவிற்கும் இடையே பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை. ஆனால், அதன் காதுகள் மட்டும் மேல்நோக்கி இல்லாமல் கீழ் நோக்கித் தொங்கிக்கொண்டிருக்கின்றன. அவ்வளவுதான்.
÷புஸýபுஸý நினைத்தது: "நான் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் என்னுடைய காதுகளும் மற்ற முயல்களின் காதுகளைப்போல் அழகாக, நேராக நிற்கும்.'
÷பிறகு புஸýபுஸý கடுமையாக உடற்பயிற்சி செய்தது. தன் காதுகளை நேராக நிற்க வைப்பதற்காகப் பாடுபட்டது.
÷ஆனால் துரதிருஷ்டவசமாக அதன் காதுகள் நேராக ஆகவில்லை. பக்கவாட்டில் நீட்டிக்கொண்டிருந்தன. அதுவும்கூட சில நிமிடங்கள்தான். பிறகு, வழக்கம்போல தரையில் தொங்கின.
÷இதுவரை செய்த முயற்சிகள் பயன்தரவில்லை. இனி வேறொரு முறையைக் கையாள வேண்டியதுதான் என்று நினைத்தது புஸýபுஸý. அது மிகவும் கவனமாக ஒரு மரத்தில் ஏறியது. பிறகு எச்சரிக்கையுடன் தன் பின்னங்கால்களை மரக்கிளையைச் சுற்றி கொக்கிபோல மாட்டிக்கொண்டது. இப்போது புஸýபுஸý தலைகீழாகத் தொங்கியது. உண்மையில் அதன் காதுகள் கீழ் நோக்கி இருந்தன.
ஏறத்தாழ ஒரு மணி நேரம் புஸýபுஸý இதைப்போல் தலைகீழாக தொங்கிக்கொண்டிருந்தது. அப்போது ஒரு குரல் கேட்டது.
÷""என்ன செய்துகொண்டிருக்கிறாய் குட்டி முயலே?''யாரோ பேசினார்கள்.
÷புஸýபுஸý சுற்றிலும் பார்த்தது. அங்கே ஒரு மரக்கிளையில் ஒரு குருவி அமர்ந்திருந்தது. அந்தக் குருவியிடம் சொன்னது புஸýபுஸý: ""நான் தலைகீழாகத் தொங்குவதால் என் காதுகள் நேராக நிற்கக் கற்றுக் கொள்ளும். அப்போது, நானும் மற்ற முயல்களைப்போல் அழகாக முடியும்.''
÷""அழகாக' என்றால் என்ன?'' என்று கேட்டது குருவி. அது மேலும் சொன்னது,"" முன்பு நான் தரையில் உன்னைப் பார்த்தபோது உன் காதுகள் அழகாகத்தான் கீழ் நோக்கித் தொங்கிக்கொண்டிருந்தன. நீ தலைகீழாகத் தொங்கும்போதுதான் உன் காதுகள் அசிங்கமாக, நேராக இருக்கின்றன.''
÷புஸýபுஸý யோசித்துப் பார்த்தது. அது தனக்குத்தானே சொல்லிக்கொண்டது: ""எனக்கு அழகாகத்தான் காதுகள் அமைந்திருக்கின்றன. மற்ற முயல்களுக்கு, நேராக காதுகள் இருப்பதுதான் அசிங்கமானது. அவையெல்லாம் வேடிக்கையான முயல்கள்!'' - தான் கண்டுபிடித்த உண்மையை மற்ற முயல்களிடம் சொல்வதற்காக சிரித்தபடியே ஓடியது.
÷பொங்கிப் பொங்கிச் சிரித்தபடியே தன் கருத்தை மற்ற முயல்களிடம் கூறியது புஸýபுஸý: ""எனக்கு அமைந்திருக்கும் காதுகள்தான் மிகவும் அழகானவை. அந்தக் குருவிதான் இப்படிச் சொன்னது. அந்தக் குருவி மிகவும் அறிவாளி. அது சொன்னால் உண்மையாகத்தான் இருக்கும்.''
÷அது சொல்வதை நம்புவதா, வேண்டாமா என்று மற்ற முயல்களுக்குத் தெரியவில்லை. அவை ஒன்றோடொன்று கலந்து ஆலோசித்தன. பிறகு, குருவி சொன்னால் அது சரியான கருத்தாகத்தான் இருக்குமென்று முடிவிற்கு வந்தன.
÷""அய்யோ! கடைசியில் நம் காதுகள்தான் அசிங்கமாக இருந்திருக்கின்றன. இத்தனை நாள் நாம் இது தெரியாமல் இருந்திருக்கிறோம். உண்மையில் புஸýபுஸýவின் காதுகள்தான் அழகாக இருக்கின்றன. இப்போது நாம் என்ன செய்யப்போகிறோம்?''
÷எல்லா முயல்களும் தலையைப் பிய்த்துக்கொண்டு யோசனை செய்தன. கடைசியில் ஒரு முயல் கூறியது: ""எனக்கு ஒரு வழி தோன்றுகிறது!''அந்த முயல் ஓடிச் சென்று இரண்டு கற்களையும், கயிறையும் கொண்டு வந்தது. கற்களை தன் இரு காதுகளின் நுனியிலும் கட்டிக்கொண்டது. ""முனையில் கற்கள் கட்டப்பட்ட காதுகள், அந்த எடையைத் தாளாமல் கீழ் நோக்கித் தொங்கத்தானே வேண்டும்.
காதுகள் பிறகு கற்கள் கட்டப்படாமலேயே கீழ் நோக்கி அழகாகத் தொங்க ஆரம்பிக்கும்'' என்று சொன்னது அந்த முயல்.÷அதன் செயலைப் பார்த்த மற்ற முயல்களும், காதில் கட்டுவதற்கு கற்களைத் தேடி ஓடின.
÷எல்லாம் சரிதான். ஆனால் ஒரு பிரச்னை. கற்கள் கட்டப்பட்ட காதுகள் அடிக்கடி கால்களில் சிக்கின. இதனால் நடப்பதே பெரும் சிரமமாக இருந்தது. என்ன செய்வது? முயல்களெல்லாம் குழப்பத்தில் ஆழ்ந்தன. எல்லாம் ஓரிடத்தில் குப்பையைப்போல குவிந்து கிடந்து யோசித்தன.
÷""காதுகளைத் தொங்க வைப்பதற்கு நாம் வேறொரு முறையைக் கையாளவேண்டும்!'' என்ற முடிவிற்கு வந்தன அவை. பிறகு, அவையெல்லாம் ஒன்றுசேர்ந்து கவனமாக ஒரு மரத்தில் ஏறின. தங்களின் காதுகளை மரக்கிளையில் கட்டிக்கொண்டன. தங்கள் கால்களையும் மரக் கிளையில் மாட்டிக்கொண்டு தலைகீழாகத் தொங்கின. அப்போது முயல்களின் காதுகள் மேல் நோக்கி இருந்தன.
÷சிறிது நேரத்திற்குப் பிறகு ஒரு குரல் கேட்டது:
÷""குட்டி முயல்களே, என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?''
÷முயல்கள் திரும்பிப் பார்த்தன. அங்கே குருவி அமர்ந்திருந்தது.
÷""குருவியே, எங்களுக்கும் புஸýபுஸý காதுகளைப்போன்று, கீழே தொங்கும் அழகான காதுகள் வேண்டும். இதுபோன்று தொங்கினால் எங்களுடைய காதுகளும் அப்படி ஆகிவிடும்.''
÷""அழகான' என்றால் என்ன?'' குருவி கேட்டது. அது, மேலும் சொன்னது: ""முன்பு நான் தரையிலிருந்து உங்களைப் பார்த்தபோது உங்கள் காதுகள் அழகாக இருந்தன. இப்போதோ அவை மேல் நோக்கிப் பார்த்துக்கொண்டு அசிங்கமாக இருக்கின்றன.''
÷முயல்களுக்குப் புரியவில்லை. ""புஸýபுஸýவின் காதுகள் அழகாக இருக்கின்றனவா அல்லது எங்கள் காதுகள் அழகாக இருக்கின்றனவா?'' என்று கேட்டன.
÷குருவி சொன்னது: ""உங்கள் காதுகள் இயல்பாக மேல் நோக்கி நீண்டிருக்கின்றன. இதுவும் அழகுதான். புஸýபுஸýவின் காதுகள் அதன் இயல்புப்படி கீழ் நோக்கித் தாழ்ந்திருக்கின்றன. அதுவும் அழகுதான். அவ்வளவுதான் விஷயம். நாம் என்ன பெற்றிருக்கிறோமோ அதுதான் அழகு. உருவத்தால் அசிங்கமானவர்கள் என்று இந்த உலகில் எவருமே இல்லை!''
÷புஸýபுஸýவும், மற்ற முயல்களும் குருவி சொன்னதை ஏற்றுக்கொண்டன. யாரைப் பார்த்தும் யாரும் கேலி செய்யாமல் எல்லா முயல்களும் ஒற்றுமையாக அந்தக் காட்டில் வாழ்ந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.