

மா லையில் வானம் இருண்டு வரும்போது, அங்கே மிகப் பிரகாசமான நட்சத்திரங்கள் தோன்றுகின்றன. மெல்ல மெல்ல அதிகமான நட்சத்திரங்களைப் பார்க்க முடிகிறது. அவற்றின் எண்ணிக்கை என்ன?
வானத்திலிருக்கும் நட்சத்திரங்களை எண்ணக்கூடிய மனிதர்,""ஏறத்தாழ மூவாயிரம் நட்சத்திரங்கள் இருக்கின்றன'' என்று சொல்வார். தொலை நோக்கி உதவியுடன் வானத்தை ஆராயும் வானியல் ஆராய்ச்சியாளர்,""அவை லட்சக்கணக்கானவை!'' என்று சொல்வார். நட்சத்திர வானத்தின் புகைப்படங்களை ஆராய்ந்த விஞ்ஞானிகள்,""பல மில்லியன் நட்சத்திரங்கள் இருக்கின்றன!'' என்று கூறுவார்கள்.
மேகங்களற்ற இருண்ட இரவின்போது வானம் நட்சத்திரங்கள் நிறைந்து காணப்படுகிறது. அவை பிரகாசமான புள்ளிகள்போலக் காணப்படுகின்றன. பண்டைக் காலத்திலும்கூட வானத்தைப் பார்த்த மக்கள், அந்த நட்சத்திரப் புள்ளிகள் படங்களை உருவாக்குகின்றன என கற்பனை செய்து கொண்டார்கள். அந்த நட்சத்திரப் படங்கள் விண்மீன் கூட்டங்கள் எனப்பட்டன.
பண்டைய கிரேக்கர்களுக்கு இந்த விண்மீன் கூட்டங்களில் சில, விருப்பமான வீரர்களின் படங்களைப்போல இருந்தன. எனவே, அவர்கள் அந்த நட்சத்திரக் கூட்டங்களுக்கு அந்த வீரர்களின் பெயர்களைச் சூட்டினார்கள் - ஹெர்குலிஸ், பெர்சேயுஸ், அன்டரோமிடா ஆகியவையே அந்தப் பெயர்கள். சில விண்மீன் கூட்டங்கள் பறவைநாகம், நாய், அன்னம், யாழ்போன்ற உருவங்களையும் ஒத்திருந்தன. இப்போது நிபுணர்கள் நட்சத்திர வானம் முழுவதையும் பகுதிகளாகப் பிரித்து, அவற்றைத்தான் விண்மீன் கூட்டங்கள் என அழைக்கின்றனர்.
வானத்தில் உள்ள அகப்பை வடிவில் உள்ள நட்சத்திரக் கூட்டம், "பெரும் கரடி' என்று அழைக்கப்படுவது ஏன்? வானத்தில் ஏழு மிகப் பிரகாசமான நட்சத்திரங்களைக் கண்டுபிடிப்பது சுலபமானது. இந்த நட்சத்திரங்கள் அமைந்திருப்பது அகப்பையின் உருவம்போன்று உள்ளது. இவற்றிற்கு அருகிலேயே வேறு சில நட்சத்திரங்களும் உண்டு. ஆனால், இவை அவ்வளவு பிரகாசமானவை அல்ல. இந்த நட்சத்திரங்கள் எல்லாமே ஒன்று சேர்ந்து ஒரு விலங்கின் தலை மற்றும் பாதங்களை ஒத்திருக்கின்றன. அகப்பையின் கைப்பிடியானது அதன் நீண்ட வாலை ஒத்திருக்கிறது. இந்த விண்மீன் கூட்டம் "பெரும்கரடி' என்று அழைக்கப்படுகிறது. ஆனால், உண்மையான கரடிக்கு நீளமான வால் கிடையாது, அது முற்றிலும் குட்டையானது.
கிழக்கே உதிக்கும் நட்சத்திரங்கள் மேலே எழுந்து வானத்தின் எதிர்ப் பகுதியில்- மேற்கில்- சென்று மறைகின்றன. பூமி தனது அச்சில் சுழல்வதுதான் அதற்குக் காரணம். ஒரே ஒரு நட்சத்திரம் மட்டும் அசையாது. அதைச் சுற்றி வானம் சுழல்வதுபோல் இருக்கிறது. இதுதான் துருவ நட்சத்திரம். நாம் வட துருவத்தில் இருந்தால், அது நம் தலைக்கு மேலாக இருக்கும். சிறு கரடி எனும் விண்மீன் கூட்டத்தில், துருவ நட்சத்திரமும் ஒன்றாக இருக்கிறது. அதில், அதுதான் மிகப் பிரகாசமான நட்சத்திரம்.
எல்லா நட்சத்திரங்களிலும் மிகப் பிரகாசமானது வீனஸ் எனப்படும் வெள்ளிதான். இது நமக்கு அருகில் இருக்கிறது. வீனஸ் எனப்படும் ரோமன் அழகுத் தெய்வத்தின் பெயரால் இக்கிரகம் அழைக்கப்படுகிறது. மேற்கே மாலையிலும், கிழக்கே விடியலிலும் வெள்ளியைக் காண முடியும். இது தொலைநோக்கியில் எந்தவிதப் புள்ளிகளும் இன்றி முற்றிலும் வெள்ளையாகக் காணப்படுகிறது. அதை எப்போதும் மேகங்கள் படலங்களாகச் சூழ்ந்துகொண்டிருப்பதால்தான் இவ்வாறு வெள்ளையாகக் காணப்படுகிறது. வெள்ளியின் வளி மண்டலத்தில் நச்சுக் காற்று இருப்பதால் அங்கே சுவாசிப்பது இயலாது.
சூரியன், வெள்ளியின் ஒரு புறத்தை வெளிச்சமாக்கும்போது, வெள்ளியின் பாதிப் பக்கம் மட்டுமே நமக்குத் தெரியும். இரண்டாவதாக நமக்கு அருகிலுள்ள செவ்வாய், வானத்தில் சிவப்பு நட்சத்திரம்போலக் காணப்படும். அதற்கு "மார்ஸ்' என்று பண்டையப் போர்க் கடவுளின் பெயர் கொடுக்கப்பட்டது. இந்தக் கிரகத்தினுடைய சிவப்பு நிறத்திற்குக் காரணம், அதில் உள்ள பாலைவனங்கள் சிவப்பு நிறமாக இருப்பதுதான். இந்தப் பாலைவனங்கள் சில பாளங்களாகப் பிரிந்திருக்கின்றன. சில நிபுணர்கள் கடந்த காலத்தில் இந்தப் பாளங்களை கால்வாய்களாகவும், அவற்றின் கரைகளில் வளர்ந்த தாவர வகைகளாகவும் நினைத்தார்கள். ஆனால், செவ்வாய்க் கிரகத்தில் எந்தக் கால்வாய்களும் இல்லை என்பது இப்போது தெளிவாகத் தெரிகிறது. மேலும், செவ்வாயில் சுவாசிப்பதற்கான காற்றும் இல்லை.
வானத்தில் சூரியனும் சந்திரனும் ஒரே அளவில் இருப்பதுபோலக் காணப்படுகிறது அல்லவா? அவை இரண்டும் வெவ்வேறு தொலைவில் இருப்பதால்தான் இப்படித் தெரிகிறது. தொலைவில் பறந்து செல்லும் விமானம்கூட பக்கத்தில் இருக்கும் பறவையைப்போன்று சிறிதாகக் காணப்படுகிறதே! சூரியன், நிலவைவிட மிகத் தொலைவில் இருக்கிறது. ஆனால், அது சந்திரனைவிட மிகப் பெரியது.
ஒருவர் நடந்து பயணிக்கும் வேகத்தின்படி, நாளொன்றுக்கு 30 கிலோ மீட்டர் நடந்தால் அவர் 40 ஆண்டுகளில் சந்திரனை அடைந்துவிடலாம். காரில் செல்லும் வேகத்தின்படி ஒருவர், மணிக்கு 80- கிலோ மீட்டர் வேகத்தில் சென்றால் 6 மாத கால அளவில் சந்திரனை அடைந்துவிடலாம். மணிக்கு 900 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் ஜெட் விமானத்தில் பயணித்தால் மூன்று வாரத்தில் நிலவை அடைந்துவிடலாம்.
செயற்கைத் துணைக் கோள்கள் மணிக்கு ஏறத்தாழ 30,000 கிலோ மீட்டர் வேகத்தில் பூமியைச் சுற்றி விரைகின்றன. அந்த வேகத்தில் சந்திரனுக்குச் செல்ல ஏறத்தாழ 16 மணி நேரமாகும். விண்வெளி ராக்கெட்டுகள் மெதுவாகப் பறக்கின்றன, எனவே, அவை இரண்டு அல்லது மூன்று நாட்களில் சந்திரனைச் சென்றடையும்.
சூரியன், பூமியிலிருந்து மிக மிகத் தொலைவில் இருக்கிறது. சந்திரனுக்கு உள்ள தூரத்தைவிட 400 மடங்கு அதிகம். பூமியிலிருந்து சூரியனுக்குச் செல்ல ஒரு
நடைப் பயணி ஏறத்தாழ 15000 ஆண்டுகள் நடந்து போக வேண்டியிருக்கும். காரில் செல்லும் வேகத்தில் சென்றால் ஒருவர் 200 ஆண்டுகளில் சூரியனை அடைவார்.
ஜெட் விமானத்திற்கு ஏறத்தாழ 20 ஆண்டுகள் பிடிக்கும். செயற்கைத் துணைக் கோளின் வேகத்தில் சென்றால், ஏழு அல்லது எட்டு மாதங்களில் சூரியனை அடையலாம். சூரியனின் பிரகாசம், நட்சத்திரங்களின் பிரகாசத்தைவிட பல லட்சக்கணக்கான மடங்கு அதிகம்.
சில நேரங்களில் ஒளிமயமான புள்ளிகள் வானத்தில் விரைவாகப் பறக்கின்றன. அது நட்சத்திரம் விழுவதுபோலத் தோன்றுகிறது. ஆனால், நட்சத்திரங்கள் ஒருபோதும் விழுவதில்லை. நினைவுக்கெட்டாத காலத்திலிருந்து அவை அவற்றினுடைய இடங்களிலேயே தங்கியிருக்கின்றன.
விழுகின்ற நட்சத்திரங்கள் உண்மையில் நட்சத்திரங்கள் அல்ல. அவை பூமியின் வளி மண்டலத்தில் ஏற்படுகிற ஒளிக் கீற்றுகள் ஆகும். இந்த ஒளிக் கீற்றுகள், விண்ணில் பறக்கின்ற சிறு கல் பொடிகளாலும் கற்களாலும் ஏற்படுகின்றன. இந்தச் சிறு கற்கள் மிகுந்த வேகத்தோடு பறந்தபோது, காற்றுக்கு எதிரான உராய்வு ஏற்பட்டு வெப்பமடைகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.