

சும்மா முதலைக் கண்ணீர் விடாதே!''
என்று யாரோ யாரையாவது திட்டுவதை நீங்கள் கேட்டிருக்கலாம். அல்லது கேள்விப்பட்டிருக்கலாம். முதலைக் கண்ணீர் என்றால் என்ன? துயரப்படுவதுபோல் பாசாங்கு செய்வது என்று அர்த்தம். அதாவது, பொய்யாக வருத்தப்படுவது. ஆனால் உண்மையாகவே முதலைகள் கண்ணீர் விடுவதுண்டு. அந்த முதலைக் கண்ணீர் பற்றி சுவாரஸ்யமான சில கதைகள் இருக்கின்றன. தனக்கு இரையாகப் போகும் பிராணியின் பரிதாபமான நிலையை நினைத்து முதலைகள் அழுகின்றன என்று ஒரு கதை சொல்கிறது. "இந்தப் பிராணியின் உடலை விழுங்கிவிட்டோம், ஆனால், இதன் தலையை விழுங்குவது சிரமமாக இருக்கிறதே' என்று நினைத்து முதலைகள் அழுவதாக வேறொரு கதையில் வருகிறது. குரங்கின் இதயத்தைத் தின்பதற்குப் பேராவல்கொண்ட மனைவி முதலையின் பேச்சைக் கேட்டு குரங்கைப் பிடிக்கப் புறப்பட்ட ஏமாளி முதலையின் கதையை நீங்கள் படித்திருப்பீர்கள்தானே?
÷கண்ணின் உட்புறத்தை எப்போதும் ஈரமாக வைத்திருப்பதுதான் கண்ணீரின் வேலை. ஆனால், பெரும்பாலான சமயங்களில் தண்ணீரிலேயே கிடக்கின்ற முதலைகளுக்கு கண்ணீர் சுரப்பிகளின் அவசியம் மிகவும் குறைவு. ஆனால், கரையில் ஓய்வெடுக்கும்போது முதலைகளின் கண்களில் கண்ணீர் ஏற்படுவதுண்டு. முதலைகள் உணவை விழுங்கும்போது அவற்றின் கழுத்திற்குப் பக்கத்தில் உள்ள கண்ணீர் சுரப்பிகள் நெரிபடுகின்றன. அதனாலும், அந்தக் கண்ணீர் சுரப்பிகளிலிருந்து நிறையக் கண்ணீர் வெளியேறும். இதுதான் முதலைக் கண்ணீரின் ரகசியம்.
÷ஏன் முதலைகள் இவ்வளவு சிரமப்பட்டு உணவை விழுங்குகின்றன? பெரிய பெரிய பற்கள் இருந்தாலும் முதலைகளால் இப்படித்தான் உணவை விழுங்க முடியும். முதலைகள் உணவு விஷயத்தில் மிகவும் சோம்பேறிகள். உணவு உண்ணாமல் எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் முதலைகளால் இருக்க முடியும். முற்றிலும் ஊன் உண்ணிகளான முதலைகள்,தங்கள் இரையை துரத்திப் பிடிப்பதில்லை. இரை வருவதற்காக தண்ணீரில் காத்திருக்கும். இரை பக்கத்தில் வரும்போது பாய்ந்து ஒரே பிடியாகக் கவ்விவிடும். தவளைகள், மீன்கள், பல்லிகள், பறவைகள் உட்பட- பெரிய பாலூட்டிகளையும், சமயங்களில் மனிதனையும்கூட முதலைகள் இரையாகக் கொள்ளும். பிடித்த இரையை உடனேயே தின்றுவிடும்.
÷ஏறத்தாழ இருபது கோடி வருடங்களுக்கு முன்பு தோன்றியவை முதலைகள். இந்தக் காலத்தில் தோன்றிய டைனோசர்கள் பூமியிலிருந்து மறைந்துவிட்டன. ஊர்வன பிரிவைச் சேர்ந்த பல்லிகள், பாம்புகள், ஆமைகள் ஆகியவற்றோடு முதலைகளுக்கு நெருக்கமான தொடர்பு உண்டு. உலகத்தில் எல்லா இடங்களிலும் உள்ள முதலைகள் ஒரே மாதிரி இருப்பதில்லை. முதலை இனத்தில் நான்கு பிரிவுகள் இருக்கின்றன. "அலிகேட்டர்' (அககஐஎஅபஞத), "குரோக்கடைல்' (இதஞஇஞஈஐகஉ), "காரியல்' (எஏஅதஐஅக), "கைமன்' (இஅஐஙஅச) ஆகியவைதான் அவற்றின் ஆங்கிலப் பெயர்கள். தெற்கு மத்திய அமெரிக்காவில் காணப்படுகின்ற சிறிய முதலைகள்தான் கைமன். தெற்கு - கிழக்கு அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளில் அலிகேட்டர்கள் காணப்படுகின்றன. ஆஸ்திரேலியா, ஆசியா, ஆப்பிரிக்கா, இந்தியா, தெற்கு மத்திய அமெரிக்கா ஆகிய நாடுகளில் பரவலாகக் குரோக்கடைல்கள் காணப்படுகின்றன. காரியல் வகையைச் சேர்ந்த முதலைகளின் தலையின் முன் பகுதியில் சிறிய ஒரு புடைப்பு இருக்கும்.
÷இந்தியாவில் இரண்டு வகையான முதலைகள் இருக்கின்றன. குரோக்கடைல்களும், காரியல்களும்.தான் அவை. இதில், நன்னீரில் வசிப்பதும், உப்பு நீரில் வசிப்பதுமான இரண்டு வகை குரோக்கடைல்கள் உள்ளன. காஷ்மீர், இமாச்சல் பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய இடங்களைத் தவிர இந்தியாவில் எல்லா இடங்களிலும் நதிகளில் வசிக்கின்ற முதலைகளை "மக்கர்' என்று அழைக்கிறார்கள். நம் ஊர்களில் உள்ள மிருகக் காட்சி சாலைகளில் நீங்கள் முதலைகளைப் பார்த்திருப்பீர்கள். அவையெல்லாம் மக்கர்கள்தான். ஆனால் இந்தியாவின் கிழக்கு கடல் தீரங்களிலும், அந்தமான் கடல் தீரங்களிலும் காணப்படுகின்ற உப்பு நீர் முதலைகள் பார்ப்பதற்கு முரட்டுத்தனமாக இருக்கும். குணத்திலும் அப்படித்தான். ஒரிசாவின் பித்ரகணிகா, கஹிர்மாதா வனவிலங்குக் காப்பகங்களில் இவை வசிக்கின்றன. வடக்கு இந்தியாவில் சிந்து,கங்கை,பிரம்மபுத்திரா, மகாநதிக் கரைகளில் மட்டுமே காரியல்கள் வசிக்கின்றன.
÷இந்த முதலைகளை எப்படி இனங்கண்டுகொள்வது? காரியல்களின் தோற்றத்தைப் பற்றி நீங்கள் மேற்பகுதியில் படித்தீர்கள். மற்றவைகளை அடையாளங் கண்டுகொள்வதற்கு சற்று அறிவியல் தெரிந்திருக்க வேண்டும். அலிகேட்டரும், கைமனும் அதிகமான உருவ ஒற்றுமையுடன் இருக்கும். இவற்றின் தலையின் முன்பாகம் நீளம் குறைவாகவும் அகலம் அதிகமாகவும் இருக்கும். இவை வாயை மூடியிருக்கும்போது கீழ் வரிசையில் உள்ள எல்லா பற்களும் மேல் வரிசைக் குழிகளில் சேர்வதால், பற்களைப் பார்க்க முடியாது. மேல் வரிசையில் முன்பிலிருந்து நாலாவது பல்தான் மிகவும் பெரியதாக இருக்கும். இவற்றின் பற்கள் உதிர்ந்துபோவதற்கு ஏற்றபடி வாழ்நாள் முழுதும் புதிய பற்கள் முளைத்துக்கொண்டிருக்கும்.
÷குரோக்கடைல் பிரிவைச் சேர்ந்த முதலைகள் வாயை மூடியிருக்கும்போது, கீழ் வரிசையில் உள்ள நாலாவது பல் வெளியில் தெரியும். அது மேல் வரிசையில் உள்ள பிளவில் சேர்ந்திருக்கும். இவற்றின் மேல் வரிசையில் உள்ள ஐந்தாவது பல்தான் பெரியது.
÷முதலைகளில் ஏறத்தாழ 22 இனங்கள் (நடஉஇஐஉந) உள்ளன. வெயில் காய்வதற்காகவும், முட்டையிடுவதற்காகவும்தான் முதலைகள் கரைக்கு வருகின்றன. மண்ணில் குழி பறித்து, கிடக்கும் குப்பை கூளங்களை கூட்டி வைத்து அதில்தான் இவை முட்டையிடுவது வழக்கம். பெண் முதலைகள் ஏறத்தாழ 15-லிருந்து 80 முட்டைகள்வரை இடும்.
÷சூரிய வெப்பத்தில்தான் முட்டைகள் பொரிகின்றன. வெப்பத்தின் அளவுக்கு ஏற்றபடிதான், முட்டை பொரிந்து வெளிவரும் குஞ்சுகளில் ஆண் பெண் வித்தியாசம் ஏற்படுகிறது. அதிகமான வெப்பத்திலும் குறைந்த வெப்பத்திலும் பொரிகின்ற முட்டைகளிலிருந்து வெளிவரும் குஞ்சுகள் பெண் முதலைகளாயிருக்கும். அதிகமாகவும் இல்லாத குறைவாகவும் இல்லாத இடைப்பட்ட வெப்ப நிலையில் முட்டை பொரிந்து வெளி வருகிற குஞ்சுகள் ஆண் முதலைகளாக இருக்கும். முதலைகள் மிக அதிகமான கேட்கும் திறன் கொண்டவை. சில ஓசைகளை எழுப்பி ஒன்றுக்கொன்று கருத்துப் பரிமாற்றம் நடத்தும் திறமையும் முதலைகளுக்கு உண்டு. சுவாசப்பை மூலமாக இவை சுவாசிக்கின்றன.
÷தண்ணீரில் இருக்கும்போது முதலைகளின் நாசித் துளைகள் எப்போதும் மேலே இருக்கும். முதலைகளின் உடல் தடிமனான செதில்களுடைய தோலால் மூடப்பட்டிருக்கிறது. இந்தத் தோல்தான் முதலைகளின் துயரம் என்று சொல்லலாம். ஏனென்றால், முக்கியமாக இந்தத் தோலுக்காகத்தான் மனிதர்கள் முதலைகளை வேட்டையாடுகிறார்கள். இவற்றின் முட்டைக்காகவும் மாமிசத்திற்காகவும் வேட்டையாடுபவர்களும் உண்டு. பார்ப்பதற்கு பயங்கரமான தோற்றத்துடன் இருந்தாலும் முதலைகள் தவிர்க்க முடியாத உணவுத் தேவையின் பொருட்டுத்தான் மனிதர்களைத் தாக்க முற்படுகின்றன. முதலைகள் இருக்கின்றன என்று உறுதியாகத் தெரிகிற நீர்நிலைகளில் முடிந்தவரை இறங்காமல் இருப்பதுதான் இவற்றின் தாக்குதல்களிலிருந்து தப்புவதற்கான ஒரே வழி. முதலைகள் கரையில் ஏறி மனிதர்களையோ மற்ற மிருகங்களையோ துரத்திப் பிடிப்பதில்லை. அந்தளவு சோம்பலுடையவை இவை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.