

பள்ளிப் பருவம் என்பது அனைவருக்கும் திரும்பக் கிடைக்காதா என்று ஏங்கும் விலைமதிப்பிட முடியாத பருவம். நண்பர்களுக்குள் சிறுசிறு சண்டைகள் இருப்பினும், அடுத்த கணமே மீண்டும் இணைவது, மதிய இடைவேளையின் போது உணவுகளை பகிர்ந்து உண்பது, கணித ஆசிரியரின் கம்பிற்கு பயந்து வீட்டுப் பாடங்களை காலையில் வகுப்புக்கு வந்தவுடன் முதல் ரேங்க் எடுக்கும் மாணவியின் நோட்டினைப் பார்த்து விரைவாக முடிப்பது, வகுப்பறையிலேயே விளையாடுவது இவ்வாறு பல்வேறு சொர்க்கங்கள் நிறைந்த பருவம்.
÷பள்ளியில் எவ்வளவு சொர்க்கம் இருப்பினும், தேர்வு விடுமுறையின் போது என் சித்தி வீட்டுக்கு செல்வதே எனக்கு சொர்க்கம் ஆகும். ஒவ்வொரு தேர்வின் போதும் இறுதி நாளை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பேன். தேர்வு முடிந்ததும் முதல் வேலையாக என் சித்தி வீட்டிற்கு செல்ல துணிகளை எடுத்து அடுக்கி, அடுத்த நாள் ஊருக்கு கிளம்ப ஆயத்தமாவேன். என் அன்னையின் தங்கையாக இருப்பினும், என் சித்தியும் எனக்கு அன்னையே. தன் பிள்ளைபோல் என்னை பாவித்து, நான் விரும்பியதை வாங்கிக் கொடுத்து, என்னை எப்போதும் மகிழ்வுடன் பார்த்துக் கொள்வார் என் சித்தி.
÷அடுத்த நாள் காலை என் அம்மாவுடன் பேருந்தில் என் சித்தி வீட்டிற்குப் புறப்பட்டேன். என்னைப் பார்த்ததும் என் சித்தி ஓடிவந்து வரவேற்று அணைத்து எனக்கு முத்தமிட்டார்.
÷என் சித்தி ஒரு சாஃப்ட்வேர் நிறுவனத்தில் வேலை புரிவதால் கைநிறைய சம்பளம். வீட்டில் அனைத்து வகையான சொகுசு பொருட்களும், என் வீட்டில் உள்ளது போலவே இருக்கும். நான் வருகிறேன் எனத் தெரிந்ததும், என் சித்தி எனக்காக நிறைய பொம்மைகள் மற்றும் தின்பண்டங்கள், பழங்கள், ஆடைகள் என அனைத்தும் வாங்கி வைத்திருந்தார்.
÷என்னுடைய அம்மா, சித்தியுடன் சிறிது நேரம் பேசி விட்டு ஓய்வெடுக்கச் சென்று விட்டார். நான் சித்தியுடன் சேர்ந்து சிறிது நேரம் கேரம் விளையாடிவிட்டு, பின்னர் சாப்பிட்டு உறங்கச் சென்றேன். மாலையில் என்னை அழைத்துக் கொண்டு அருகில் உள்ள பூங்காவிற்குச் சென்றார் சித்தி.
÷என்னுடன் இருக்கும் போது, என் சித்தியும் ஒரு குழந்தைப் போல மாறுவது எனக்கு மிகவும் பிடிக்கும். சென்ற முறை நான் வந்த போது இருந்த அதே சூழல் இந்த முறையும் சிறிதும் வேறுபாடின்றி காட்சித் தந்தது. ஒன்றே ஒன்றைத் தவிர. பூங்காவிற்கு அருகே ஒரு மரத்தடியில் புதியதாக ஒரு நாடோடிக் குடும்பம் தங்கியிருந்தது.
÷அதில் என் வயதில் ஒரு சிறுமி தங்கியிருந்தாள். அவளைக் கடக்கும் போது, அவள் என்னைக் கூர்ந்து கவனிப்பதை என்னால் நன்கு உணர முடிந்தது. அன்று நான் பிங்க் நிற கவுனில் என் சித்தி எனக்கு புதியதாக வாங்கிக் கொடுத்த நகைகளில் தேவதைப் போல இருந்தேன் என்று என் பாட்டி மிகவும் புகழ்ந்தாள்.
÷அந்தச் சிறுமி என்னைப் பார்த்த பார்வையில் ஒருவித பிரமிப்பு இருந்தது. என்னை ஏதோ ஒரு வியப்பான பொருளாக அவள் பார்ப்பதாக என் மனம் உரைத்தது. அந்தச் சிறுமியின் கந்தலான ஆடையும், எண்ணெய் பார்த்திராத கூந்தலும், அஞ்சனம் அறியாத கண்களும் அவளுடைய ஏழ்மை நிலையை எனக்கு நன்றாக உணர்த்தியது.
÷அவள் நான் பூங்காவில் விளையாடிக் கொண்டு இருக்கும் போது என்னை கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டே இருந்தாள். நான் விளையாடி முடித்துவிட்டு சித்தியுடன் வீடு திரும்பும் வரையில், அவள் பார்வை என்னை விட்டு விலகவேயில்லை.
÷நாங்கள் அவளைக் கடந்து செல்லும் போது, அவள் தனது தாயிடம் என்னைப் பற்றி ஏதோ பிரமிப்பாய் விவரித்துக் கொண்டிருந்தாள். தினமும் காலையில் பால்கனியில் உள்ள ஊஞ்சலில் அமர்ந்து தெருவை வேடிக்கைப் பார்த்துக் கொண்டே காதில் இசைக்கருவி பொருத்திக் கொண்டு பிஸ்கெட் சாப்பிடுவது என்னுடைய வழக்கம்.
÷அப்போது என் வீடு வழியே சாலையைக் கடந்த அந்தச் சிறுமி, சில நொடிகள் நின்று என்னைக் கவனித்துவிட்டு மீண்டும் அதே பிரமிப்புடன் சென்றாள். எனக்கு இதன் காரணம் விளங்கவில்லை. என் சித்தி வந்தவுடன் நேற்று நடந்ததையும், இன்று நடந்த நிகழ்ச்சியையும் சொல்லி, அந்தச் சிறுமி என்னைப் பற்றி அவள் தாயிடம் என்ன விவரித்து இருப்பாள் என்று கேட்டேன்.
÷அதற்கு என் சித்தி, ""உன் கேள்விக்கான விடையை நான் பிறகு சொல்கிறேன். இப்போது நீ என்னுடன் கிளம்பி வா. நாம் எனது முதலாளியின் மகளின் பிறந்தநாள் விழாவிற்கு சென்று விட்டு வரலாம்'' என்று என்னை அழைத்துச் சென்றார்.
÷அந்த வீடு மிகவும் பிரம்மாண்டமாக விழாக்கோலம் பூண்டிருந்தது. நிறைய செல்வந்தர்கள் விழாவிற்கு வந்திருந்தனர். வீடு முழுவதும் அலங்கார விளக்குகளால் ஒளிரப்பட்டு மிகவும் பிரகாசமாக இருந்தது. ஆறு அடி உயர கேக் ஒன்று பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டு இருந்தது.
÷நான் இதுவரை பார்த்திராத பல உணவுப் பொருட்களை அங்கே அடுக்கி வைக்கப்பட்டு அறுசுவை விருந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக பிறந்தநாள் கொண்டாடும் அந்த அக்காவைப் பார்க்க வானுலக தேவதையே இறங்கி வந்தது போல் இருந்தது. அந்த அக்காவின் உடை முழுவதும் நவரத்தினங்கள் பதிக்கப்பட்டு கண்ணை பறித்தவாறு மின்னியது. உடல் முழுவதும் உடையை விட வைர ஆபரணங்கள் படர்ந்திருந்தது. அந்த அக்காவிடம் சென்று நாங்கள் கொண்டு வந்திருந்த பரிசுப் பொருளை கொடுத்து விட்டு சிறிது நேரம் பேசினோம். பின்னர் உணவருந்தச் சென்றோம்.
÷உணவருந்துமிடத்தில் நான் என் சித்தியிடம், அந்த அக்காவின் அழகினையும், அவரது உடையின் நேர்த்தியையும், ஆபரணங்களின் ஜொலிப்பையும் பிரமிப்பாய் விவரித்து கொண்டிருந்தேன். அனைத்தையும் என் சித்தி கூர்மையாக கவனித்துக் கொண்டிருந்தார்.
÷நான் உண்டு முடித்து சித்தியுடன் வீடு திரும்புகையில், என் சித்தி என்னிடம், ""இப்போது நீ என்னிடம் எவ்வாறு அந்த அக்காவைப் பற்றி விவரித்துக் கொண்டிருந்தாயோ, அதேபோல் தான் நேற்று அந்தச் சிறுமி அவள் அம்மாவிடம் விவரித்து இருப்பாள்.
அந்தச் சிறுமி உடுத்தியிருப்பது கந்தலாடை மட்டுமே. அவள் உன்னைப் போல் உடை பிறந்ததிலிருந்தே உடுத்தியிருக்க மாட்டாள். உன் போல் ஆபரணமும் அணிந்திருக்க மாட்டாள். அதனால்தான் தன் வயதே இருக்கும் உன்னிடம் அவற்றைக் காணும் போது அவளுக்கு ஒரு தவிப்பு. தானும் உன் போல் இருக்க வேண்டுமென்று. அதனால்தான் அவள் உன்னைப் பற்றி அவ்வளவு பிரமிப்பாய் தன் தாயிடம் விவரித்தாள்.
÷ஆனால், உனக்கு அந்தச் சிறுமி பிரமிப்பாய் உணர்ந்தது சாதாரணமாகப்பட்டது. அந்த அக்காவிடம் உள்ளது உயர்ந்தது போல் தோன்றி, அதனைப் பற்றி பெருமையாக என்னிடம் விவரித்தாய். இந்த உலகத்தில் அடிப்படையாக தேவையான சுத்தமான உடை, நல்ல உணவு, பாதுகாப்பான இருப்பிடம் இவை எல்லாம் இல்லாமல் வளர்கிறாள் அந்தச் சிறுமி. அந்த ஏழைச் சிறுமியின் ஏக்கமும் ஆசைகளும் இயல்புதானே. ஏற்றதாழ்வுகள் நிறைய உள்ள உலகத்தில் வாழ்கிறோம். நாம் எளிமையாக வாழ்ந்து, நமக்கு மிஞ்சியதை இல்லாவதர்களுக்குக் கொடுத்து உதவ வேண்டும். அவர்கள் அப்போது அடையும் மகிழ்ச்சியே நமக்கு கிடைக்கும் உண்மையான இன்பம்.
÷""ஆமாம் சித்தி, எனக்குப் புரிந்தது'' என்று அர்த்தத்துடன் தலையாட்டினேன். ""என் சமத்துக்குட்டி'' என்று என்னை என் சித்தி மிகவும் ஆரத் தழுவினார். என்னுடைய விடுமுறை நாட்கள் முடிந்து விட்டது. இதோ நான் மீண்டும் என்னுடைய ஊருக்குச் செல்லத் தயாராகி விட்டேன். அத் தெருவின் வழியாக பேருந்து நிலையம் செல்கையில், அந்தச் சிறுமி என்னை பார்ப்பதைக் கவனித்தேன். அவளின் பார்வைக்கான அர்த்தம் உணர்ந்து புன்னகைத்து அவளருகே சென்றேன். அவளுக்காக வாங்கிய உடை ஒன்றை அவளிடம் தந்தேன். அவள் முகத்தில் எத்தனை மகிழ்ச்சி! மீண்டும் சந்திப்போம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.