மந்திரம் கால்; மதி முக்கால்- சிறுகதை

மந்திரகிரியை ஆண்டுவந்தான் மரகதவர்மன். அவனது ஆட்சியில் மக்கள் மகிழ்வுடன் வாழ்ந்து வந்தனர். அதற்கு திருஷ்டி பரிகாரம் போல் ஒரு பூதம் தொல்லை தரத்துவங்கியது. மந்திரகிரி மலையைவிட்டு இறங்கிவந்து ஆடு மாடுகளை
மந்திரம் கால்; மதி முக்கால்- சிறுகதை
Published on
Updated on
3 min read

மந்திரகிரியை ஆண்டுவந்தான் மரகதவர்மன். அவனது ஆட்சியில் மக்கள் மகிழ்வுடன் வாழ்ந்து வந்தனர். அதற்கு திருஷ்டி பரிகாரம் போல் ஒரு பூதம் தொல்லை தரத்துவங்கியது. மந்திரகிரி மலையைவிட்டு இறங்கிவந்து ஆடு மாடுகளை விழுங்கிவந்தது. வனங்களை அழித்தது. வீடுகளை நொறுக்கியது. சிலசமயம் மனிதர்களையும் விழுங்கி ஏப்பம் விட்டது. பூதத்தின் அட்டூழியங்களைத் தாள முடியாமல் அரசன் தவித்தான். மக்கள் அவதியுற்றனர்.

பூதம் தங்களை விழுங்கிவிடுமோ என எண்ணி மக்கள் பயந்து நடுங்கினர். எனவே, மன்னன் மரகதவர்மன் ஒரு அறிவிப்பை வெளியிட்டான்.

"மந்திரகிரி மலையில் உள்ள பூதத்தை அழிப்பவர்க்குத் தன் மகளை மணம் முடித்துத் தருவதோடு; தனக்குப்பிறகு மந்திரகிரியின் ஆட்சிப்பொறுப்பும் ஒப்படைக்கப்படும்' என்பதுதான் அந்த அறிக்கை.

அதைக்கேட்டு வீர இளைஞர்கள் பலரும் வீறுகொண்டு எழுந்தனர். மந்திரகிரி மலை பூதத்தை அழிக்கப் புறப்பட்டனர்.

மலைமீது உட்கார்ந்திருந்த பூதம் தூரத்தில் இளைஞர்களைக் காணும்போதே, பெரிய பாறையினைத் தூக்கிப்போட்டு அழித்தது. பூதத்தை அழிக்கப் புறப்பட்ட பலரும் போனதோடு சரி. திரும்பி யாரும் வரவில்லை.

மன்னன் மிகவும் மனக்கவலை கொண்டான். "பூதத்தைக் கொல்லும் வல்லமை பெற்றவர் இந்த மந்திரகிரியில் யாரும் இல்லையா?' எனக் கேட்டு வருந்தினான்.

இந்த செய்தி "மருதமதி" எனும் இளைஞனுக்கு எட்டியது. அவனுக்கு மந்திரம் தெரியும். அதுவுமில்லாமல் அவனது குரு அவனுக்கு ஒரு போர்வையைக் கொடுத்திருந்தார்.

அது ஒரு மந்திரப்போர்வை. அதற்கென சில அபூர்வ குணங்கள் இருந்தன.

அதாவது அந்தப் போர்வையைப் போர்த்திக்கொண்டால், போர்த்திக் கொள்பவரின் உருவம் வெளியே தெரியாது. உருவம் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து விடும்.

அந்தப் போர்வையுடன் மந்திரகிரி மலையை அடைந்தான் மருதமதி.

மலையின் உச்சியில் வழக்கம்போல் பூதம் உட்கார்ந்திருந்தது.

போர்வையைத் தயாராக வைத்தபடி மலையேறிப் போனான் மருதமதி.

அவனைக்கண்டதும் பூதம் ஆவேசமாகப் பார்த்தது. அதிபயங்கரமாய் ஓசையெழுப்பியது.

அந்த ஓசையில் நாடே கிடுகிடுத்தது. தன்னை நோக்கி ஒருவன் வருவதை அறிந்ததும், பெரிய பாறை ஒன்றைத்தூக்கி அவனை நோக்கி வீசியது. அந்தசமயம், மருதமதி போர்வையைப் பிரித்து சட்டென போர்த்திக் கொண்டு நகர்ந்தான். மந்திரப் போர்வையில் உடல் மறைந்ததும் பூதத்தின் குறி தவறி பாறை பாதாளத்தில் விழுந்தது.

மலையிலிருந்து பாதாளத்திற்கு உருண்டோடும் பாறைச் சத்தம் கிடுகிடுவென அந்தப் பகுதியை நடுங்கவைத்தது.

சற்று நேரம் கழித்து போர்வையை விலக்கியதும் மருதமதியின் உருவம் தெரிந்தது.

மீண்டும் பாறையைத் தூக்கி வீசியது பூதம். அப்பொழுதும் போர்வையைப் போர்த்தி உருவத்தை மறைத்துக் கொண்டான்.

பூதத்தின் குறி தவறத்தவற அதன் கோபம் அதிகரித்தது.

மலையுச்சியின் பாறையில் தனதருகே இருக்கும் மருதமதியின் மீது நேரடியாகப் பாய்ந்தது பூதம்.

சட்டெனப் போர்வையில் மறைந்தான் மருதமதி. குறிதவறிய பூதம் மலைச்சரிவில் உருண்டு பாதாளத்தில் விழுந்து இறந்தது.

பூதத்தை அழித்த மருதமதியை நாடே திரண்டு வந்து வரவேற்றது.

ஊரே அவனைப் போற்றியது. அவன் அரண்மனைக்கு அழைத்து வரப்பட்டான். மன்னன் அவனை மனமாரப் பாராட்டினான்.

""எனது குடியை, குடிமக்களைக் காப்பாற்றிய உன்னை பெரிதும் மெச்சுகிறேன். மதிக்கிறேன் என்றாலும் அரசகுலத்தில் பிறவாத உனக்கு ஆட்சிப்பொறுப்பினைத் தர முடியாது. அரச குடும்பத்தில் பிறந்தவருக்கே அரசகுலப் பெண்களை மணம் முடித்துத் தர இயலும்...'' என்றார் மன்னன்.

"".............''

"" எனவே,ஆட்சியைத் தருவதற்குப் பதிலாக, உனது எடையளவு பொற்காசுகளைத் தருகிறேன். பெற்றுக்கொள்'' என்றான் மரகத வர்மன்.

அதைக்கேட்டு மருதமதி திடுக்கிட்டான். நீதிதவறாத அரசன் என்றும் கொடுத்த வாக்கை மீற மாட்டான். ஆனால் மரகத வர்மன் மீறிவிட்டானே! வார்த்தை தவறிவிட்டானே! தன்னை ஏமாற்றிய அரசனை நினைத்து வருந்தினான். எனினும்,""அரசே! தங்களின் சித்தப்படியே ஆகட்டும். நான் எனது இல்லம் சென்று காணிக்கைபெற தயாராகி வருகிறேன்'' என விடைபெற்றுப் புறப்பட்டான்.

போகும் வழியெங்கும் பலத்த யோசனை. மன்னனுக்குப் புத்திபுகட்ட வேண்டும். அதற்கென்ன வழி? என்று பலமாக சிந்தித்தான்.

செல்லும் வழியில் ஒரு யானையைப் பார்த்தான். அதைக் கண்டதும் அவனுக்கு வழியொன்று புலப்பட்டது.

நீராடி பூஜையை முடித்துக்கொண்டு அரண்மனையை அடைந்தான்.

அரண்மனைத்திடலே விழாக்கோலம் பூண்டிருந்தது. பெரிய தராசுத் தட்டு ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. மன்னன் மரகதவர்மன் வந்ததும்,மருதமதி தராசின் ஒரு தட்டில் நிறுத்தப்பட்டான். இன்னொரு தட்டில் பொற்காசு மூட்டை ஒன்றை வைக்கச் சொன்னான். வைத்தனர். தராசுத் தட்டு அப்படியே இருந்தது. இன்னொரு மூட்டையை வைத்தனர். மீண்டும் அப்படியே இருந்தது. மேலும் மேலும் பொற்காசுமூட்டையை அடுக்கினர். எனினும் தராசுத்தட்டு அவன்பக்கமே தாழ்ந்திருந்தது. இதைக்கண்ட மன்னன் திடுக்கிட்டான். "கஜானாவின் எல்லா பொற்காசுகளையும் மூட்டைகளாக்கி தராசுத்தட்டில் வைத்தும் மருதமதிக்கு ஈடாகவில்லையே?' என எண்ணிக் குழம்பினான்.

மேலும் தட்டில் வைக்க பொற்காசு மூட்டைகளே இல்லை எனும் சூழ்நிலை.

மன்னனுக்கு தர்மசங்கடமான சூழ்நிலை.

""அரசே! தங்களிடம் ஓர் உண்மையைக் கூற விரும்புகிறேன். கூறலாமா?'' என்றான் மருதமதி.

""என்ன உண்மை?''

""இந்த நாட்டையே விற்று அதன் மூலம் கிடைக்கும் பொற்காசுகளைக் கொண்டுவந்து கொட்டினாலும் இந்தத் தராசுத்தட்டு தாழவேதாழாது. சொன்னசொல்லைக் காப்பாற்றுவதே அரச தர்மம். எனக்குச் சமமான எடைக்குப் பொற்காசுகள் தருவதாக வாக்களித்தீர்கள். இப்பொழுது அதை நிறைவேற்றுவீர்களா?'' எனக் கேட்டான்.

அரசன் திகைத்தான். ""முதல்  வாக்குறுதியிலிருந்து, வார்த்தை மாறி இரண்டாவது வாக்குறுதி அளித்தீர்கள். இரண்டில் ஒன்றையாவது நிறைவேற்றுவதுதான் ராஜதர்மம் என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா?"" எனக் கேட்டான் மருதமதி.

மன்னனுக்கு என்ன செய்வதெனப் புரியவில்லை. வழி தெரியாமல் தவித்தான்.

""ஒப்புக் கொள்கிறேன். சொன்ன சொல்லைக் காப்பாற்றாதவன் என்ற பழிச்சொல் என்னைச் சேர்ந்துவிடும். எனவே நீயே ஒரு வழி சொல்'' என்றான் மன்னன்.

வினா:- பல மூட்டை பொற்காசுகளைத் தராசுத்தட்டில் வைத்தும் தட்டு ஏன் தாழவில்லை?

மன்னனுக்கு மருதமதி என்ன வழி சொன்னான்?

விடை:- தராசுத்தட்டில் நின்றிருந்த மருதமதி மந்திரப்போர்வையை விலக்கினான். அதனுள்ளிருந்த யானை தராசுத்தட்டை மிதித்து அழுத்திக் கொண்டிருந்தது.

பொருளே இல்லை எனும் நிலை வந்தால் அது ராஜவம்சத்துக்கே அவமானம் என நினைத்ததால் மரகதவர்மன் தன் மகளை மருதமதிக்கே மணம் முடித்து வைத்து நாட்டை ஆளும் பொறுப்பையும் கொடுத்தான்.

மந்திரப் போர்வையால் பூதத்தைக் கொன்ற மருதமதி,மன்னனின் தவறையும் சுட்டிக்காட்டி வெற்றி பெற்றுவிட்டான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com