

ரா கடைக்குப் போய் கடுகு வாங்கிட்டு வாம்மா'' என்றார் அவளது அம்மா.
""சரி'' என்றபடி கடை வாசலுக்கு வந்த தாராவின் மனதில், சட்டென சந்தேகம் தோன்றியது.
"அம்மா கடுகு வாங்கச் சொன்னாங்களா? இல்ல மிளகாவா?' என குழம்பினாள். இதுதான் தாரா. எல்லா விஷயத்தையும் சந்தேகமும், தயக்கமுமாக செய்வாள். பரீட்சை எழுதும் நேரத்தில் கூட இந்தக் கேள்விக்கு விடை இதுவா? அதுவா? என குழம்பி யோசிப்பாள்.
இவளது யோசனையிலேயே நேரம் கரைய பிறகு வேகமாக எழுதுவாள். அது அவசரத்தில் அள்ளித் தெளித்த கோலமாகி விடும். அதனால் மதிப்பெண் குறையும்.
பலமுறை பலவிதங்களில் பெற்றோர் எடுத்துக் கூறிய பிறகும், அவளது மனம் தயங்கி தவித்தது. மறுவாரம் அவர்களின் வீட்டுக்கு தாராவின் கொள்ளுத் தாத்தா வந்தார். 92 வயது அவருக்கு. ஏதோ ஒரு குடு குடு கிழவர் தட்டுத் தடுமாறி வருவார் என எதிர்பார்த்த தாராவுக்கு மெல்லிய உடற்கட்டுடன் தடுமாறாத நடையுடன் கம்பீரமாக வந்த தாத்தாவைப் பார்த்ததும் பிரமிப்பு ஏற்பட்டது. சற்றே உயர்ந்த படியில் ஏற கைக் கொடுத்த அப்பாவை தடுத்தார்.
""கை கொடுத்து என்னை கிழவனாக்காதே!'' என மறுத்தார்.
அவரது தடுமாறாத நடவடிக்கைகள் தாராவை வியக்க வைத்தது. அவரிடமே கேட்டாள். ""நான் செய்யும் உடற்பயிற்சி உடலுக்கு வலிமை தருது. தன்னம்பிக்கையும், தியானமும், மனவலிமையையும் தருது'' என்றார்.
தாராவின் மனதில் அவரது பேச்சு சற்றே நம்பிக்கை ஒளியை ஏற்றியது.
அடுத்து வந்த ஞாயிற்றுக்கிழமை தாத்தாவின் பிறந்த நாள். எல்லோரும் அனாதை இல்லத்துக்கு சென்றனர். கேக், பழங்கள், பிஸ்கெட்டுகள் என வாங்கிச் சென்றார்கள். தாரா எல்லா குழந்தைகளிடமும் கேக்கைக் கொடுத்து கைக் குலுக்கினாள்.
அடுத்த அறைக்கு சென்றவள் ஆச்சரியத்தில் திகைத்தாள். வெகு சாதாரணமான பனை ஓலையிலும், பிளாஸ்டிக் வயரிலும் இத்தனை விதமான கலைப் பொருட்கள் செய்ய முடியுமா? என வியந்தாள்.
பின்பு அங்கிருந்த சிறுவனிடமும் கேக்கை தந்து கைக் குலுக்கி, ""நான் தாரா. நீ?'' என்றவளின் விழிகள் திடுக்கிட்டன.
""நான் ரமேஷ்'' என்றான் அந்தப் பார்வையற்ற சிறுவன்.
""உனக்கு... உனக்கு...'' என திணறினாள் தாரா. ""இந்த அறையில் இருக்கிற யாருக்குமே கண் தெரியாது'' என்றான்.
""பிறகு எப்படி இதை செய்தீங்க?'' என்றாள்.
""இதை செய்ய கைகளும், கணக்குப்படி இயங்குகிற மனதும் போதுமே'' என்றான் ரமேஷ்.
""உனக்குக் கஷ்டமா, இல்லையா?'' என்றாள் தாரா தனக்கே உரிய தயக்கத்துடன்.
""உன்னைப் போல அன்பானவங்க வரும் போதுதான் பார்க்க முடியலியேன்னு வருந்துவேன்'' என்றான். மாலை வரை அவர்களுடன் இருந்தான்.
வெளியே வந்ததும் தனது மனநிலையை எண்ணி வெட்கப்பட்டாள் தாரா. "உடல் ஊனமுற்ற நிலையிலும் உறுதியுடன் செயல்படும் அவர்கள்? எல்லா நலத்துடன் வாழ்ந்தாலும் தடுமாறி தயங்கும் நான் எங்கே? வயதான காலத்திலும் தளராத நடையுடன் சேவை செய்கிறார் தாத்தா. அவருடைய பேத்தி நான் தன்னம்பிக்கையுடன் செயலாற்ற வேண்டாமா? இனிமேல் எதற்கும் தயங்கி தடுமாற மாட்டேன்' என முடிவு செய்தாள்.
உறுதியுடன் செயல்பட்டாள். அடுத்த வந்த தேர்வில் நன்கு படித்து வகுப்பில் மூன்றாவது இடத்தைப் பிடித்தாள். அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினாள். ""அம்மா, அடுத்தத் தேர்வில் நிச்சயமா முதலிடத்துக்கு வந்துடுவேன்'' என்ற தாராவின் குரலில் தன்னம்பிக்கை நிறைந்திருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.