பூப்போட்ட சட்டை- சிறுகதை
எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் மோகன் ஓரளவு நன்றாகப் படிப்பவன்தான். ஆனால், அவன் செய்யும் சேட்டைகளுக்கு அளவே இருக்காது. மற்ற மாணவர்களுக்குத் தொந்தரவு கொடுப்பதோடு, அவர்களைக் கேலி பேசி சிரிப்பது


எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் மோகன் ஓரளவு நன்றாகப் படிப்பவன்தான். ஆனால், அவன் செய்யும் சேட்டைகளுக்கு அளவே இருக்காது. மற்ற மாணவர்களுக்குத் தொந்தரவு கொடுப்பதோடு, அவர்களைக் கேலி பேசி சிரிப்பதும் மோகனின் வழக்கம். மோகனின் சேட்டைகளுக்கு அவனுடன் படிக்கும் கேசவனும் துணை போனான்.
மோகனின் வகுப்பிலேயே பாலு என்ற மாணவனும் இருந்தான். அவன் நல்லொழுக்கம் கொண்டவன். யார் தனக்கு எந்தத் தொந்தரவு செய்தாலும் எதிர்த்துக் கேட்க மாட்டான். அதனால் மோகனின் சேட்டைகளுக்கு பெரும்பாலும் இலக்காவது பாலுதான்.
மோகன், பாலுவின் வெள்ளைச் சட்டையில் அவன் அறியாதபடி தனது பேனா மையைத் தெளித்து விடுவான். பிறகு ஒன்றும் அறியாதது போல. ""என்ன பாலு... உனக்கு மட்டும் ஸ்கூல் யூனிஃபார்மை மாற்றி விட்டார்களா? நாங்க எல்லாம் வெள்ளைச் சட்டை போட்டிருக்கோம். நீ மட்டும் பூப்போட்ட சட்டை போட்டிருக்கியே?'' என்று கேலி செய்வான். மோகனின் கேலிக்கு கேசவனும் கைக்கொட்டிச் சிரிப்பான்.
பல நேரம் மோகன் பாலுவின் சைக்கிளில் காற்றைப் பிடுங்கி விடுவான். பாவம் பாலு. பள்ளியிலிருந்து சைக்கிள் கடை வரைக்கும் சைக்கிளை உருட்டிக் கொண்டு செல்வான்.
அப்போது மோகன் பாலுவைப் பார்த்து, ""சைக்கிளில் வந்தவன் நடந்து போகிறான் பாரு!'' என்று கிண்டலடிப்பான். தன் சட்டையில் மையைத் தெளித்ததும், சைக்கிள் காற்றைப் பிடுங்கி விடுவதும் மோகன்தான் என்பது பாலுவுக்குத் தெரியும். இருந்தும் பாலு அதைத் தெரிந்துக் கொண்டது போல காட்டிக் கொள்ள மாட்டான்.
அவன் மோகனிடம், ""மோகன்! உன்னால் எத்தனை மாணவர்கள் மனம் வருந்துகிறார்கள் தெரியுமா? பிறரைத் துன்புறுத்தி மகிழ்ச்சி காண்பது நல்லதல்ல. உனது இத்தகைய குணத்தை மாற்றிக் கொள்!'' என்று பொதுவாக அறிவுரை சொல்வான். பாலு அவ்வாறு மோகனுக்கு அறிவுரை சொல்லும் போது கேசவன், ""டேய் பாலு, யாரோ செய்த தப்புக்கு மோகனை ஏன் குற்றம் சொல்றே?'' என்று மோகனுக்குத் துணையாக பரிந்துப் பேசுவான். பாலு அங்கிருந்து நகர்ந்தவுடன் மோகனும், கேசவனும் கண்ணடித்து சிரிப்பார்கள்.
மோகன் படித்த பள்ளிக்கூடத்தில் திங்கள்கிழமை தோறும் வகுப்பு தொடங்கும் முன் எட்டரை மணிக்கு மாணவர்கள் அனைவரும் மைதானத்தில் கூடி நிற்க, தலைமைஆசிரியர் தேசியக் கொடியை ஏற்றுவார். பிறகு ஏதேனும் ஒரு மாணவன் உறுதிமொழி கூற, மற்ற மாணவர்களும் அவ்வுறுதிமொழியை வழிமொழிவார்கள். ஒவ்வொரு திங்கட்கிழமையும் ஒவ்வொரு மாணவர் உறுதிமொழி கூற வேண்டும்.
ஒரு சனிக்கிழமை மாலை மோகனின் வகுப்பு ஆசிரியர், ""மோகன், வரும் திங்கட்கிழமை நீதான் உறுதிமொழி கூற வேண்டும்'' என்று சொன்னார். மோகன் சனியும், ஞாயிறும் உறுதிமொழியை மனப்பாடம் செய்து கொண்டான். தனது வெள்ளைச் சட்டையை நன்றாகச் சலவை செய்து, இஸ்திரி போட்டு வைத்தான்.
÷திங்கட்கிழமையும் வந்தது. மோகன் பள்ளிக்கூடத்திற்குக் கிளம்பிச் சென்றான். ஞாயிற்றுக்கிழமை இரவில் நல்ல மழை பெய்திருந்தது. ஆதலால், சாலை எங்கும் ஆங்காங்கே தண்ணீர் தேங்கிக் கிடந்தது. மோகன் பள்ளிக்கூடத்தை நெருங்கும் வேளையில்தான் அந்த எதிர்பாராத சம்பவம் நிகழ்ந்தது.
மோகனை கடந்து சென்ற கார் ஒன்று அவன் அணிந்திருந்த வெள்ளைச்சட்டையில் சேற்றை அள்ளித் தெளித்தபடி சென்று விட்டது. தனது சட்டை முழுவதும் சேறாகிப் போனதைக் கண்ட மோகனுக்கு அழுகையும்,கோபமும் வந்தது. காரை ஓட்டிச் சென்றவரோ எதைப் பற்றியும் கவலைப்படாமல் காரை வேகமாக ஓட்டிச் சென்று விட்டார்.
ஏற்கனவே மணி எட்டே கால் ஆகியிருந்தது. வீட்டிற்குச் சென்று சட்டையை மாற்றிக் கொண்டு வரலாம் என்றால் அதற்கு நேரமும் இல்லை. "இந்த சேறுபடிந்த சட்டையோடு மாணவர்கள் முன்னால் நின்று உறுதிமொழியைக் கூறினால் அனைவரும் தன்னைப் பார்த்துச் சிரிப்பார்களே?' என்று நினைத்த அவனுக்கு அவமானமாக இருந்தது. அந்த நேரத்தில் பின்னால் பெரிய சிரிப்பு சத்தம் கேட்டது. மோகன் திரும்பிப் பார்த்தான். அங்கே கேசவன் நின்று கொண்டிருந்தான்.
அவன் மோகனைப் பார்த்து, ""என்ன மோகன், உனக்கு யூனிஃபார்மை மாற்றி விட்டார்களா? நீ இன்னிக்கு பூப்போட்ட சட்டை போட்டுட்டு வந்திருக்கிறே?'' என்று கூறி சிரித்தான். கேசவன் சொன்னதைக் கேட்ட மோகனுக்கு ஒருபுறம் கோபம் வந்தது. மறுபுறம் அவமானமாக இருந்தது. மோகன் நடந்தவற்றை கேசவனிடம் சொல்லி, தனக்கு ஏதாவது உதவி செய்யுமாறு சொன்னான். ஆனால் கேசவனோ, ""நான் என்ன செய்ய முடியும்? நீயே ஏதாவது மாற்று வழியை யோசித்து செய்!'' என்று சொல்லிவிட்டு வேகமாக நடந்து சென்று விட்டான்.
அந்த நேரத்தில் மோகன் அருகில் ஒரு சைக்கிள் வந்து நின்றது. சைக்கிளில் வந்தவன் பாலுதான். மோகனின் நிலைமையைக் கண்ட பாலுவுக்கு என்ன நடந்திருக்கும் என்று புரிந்து விட்டது. அவன் சற்றும் தாமதிக்காமல் மோகனிடம், ""மோகன் எதற்கும் நீ கவலைப்படாதே. இதோ என் சட்டையை நீ போட்டுக் கொள். உன் சட்டையை என்னிடம் கொடு. உறுதி மொழி சொல்லப் போகிறவன் நீ தானே? அதனால் எல்லாரும் உன்னைத்தான் கவனிப்பார்கள். யோசிக்காமல் சட்டையைக் கழட்டு!'' என்று கேட்டுக் கொள்ள மோகனும் வேறு வழியின்றி பாலுவின் யோசனைக்கு ஒப்புக் கொண்டான்.
மோகனும், பாலுவும் பள்ளி வளாகத்திலேயே ஒரு மரத்தடிக்குச் சென்று தங்கள் சட்டைகளை மாற்றிக் கொண்டார்கள். அதற்குள் மணி எட்டரை ஆகிவிட ஒரு வழியாக மோகன் உறுதிமொழியைக் கூறிவிட்டு வந்தான்.
"தான் பாலுவுக்கு எத்தனையோ துன்பம் விளைவித்தும் அவன் தனக்கு தக்க நேரத்தில் உதவி செய்தான். ஆனால், எப்போதும் தன்னுடன் இருக்கும் கேசவனோ தன்னை நட்டாற்றில் விட்டுவிட்டுப் போய்விட்டானே?' என்று நினைத்த மோகனின் மனதில் குற்ற உணர்ச்சி தோன்றியது.
அவன் பாலுவிடம் வந்து, ""பாலு! இதுநாள் வரை நான் உனக்குத் தெரியாமல் உன் சட்டையில் மையைத் தெளித்து, சைக்கிள் காற்றைப் பிடுங்கிவிட்டு உன்னை துன்பத்திற்கு ஆளாக்கியிருக்கிறேன். உன்னைக் கேலியும் செய்திருக்கிறேன். ஆனால், இன்று நீதான் எனக்கு உதவி செய்தாய். ஆனால், எப்போதும் என் கூடவே வருகின்ற கேசவன் எனக்கு உதவியும் செய்யாமல், கேலி செய்து விட்டுப் போய்விட்டான்!'' என்று கூறி வருந்தினான்.
உடனே பாலு மோகனிடம், ""மோகன்! கேசவனை ஏன் குறை கூறுகிறாய்? அவனா உன் சட்டையில் சேற்றை தெளித்தான்? பாவம் அவன் என்ன செய்வான்? துன்பத்தில் இருப்பவர்களைக் கண்டால், அவர்களுக்கு உதவி செய்யாமல் அவர்களைக் கேலி செய்யும் பழக்கத்தை நீதான் அவனுக்குக் கற்றுக் கொடுத்தாய். இன்று அவன் உன்னையும் கேலி செய்தான்!'' என்று சொன்னான். பாலுவும், மோகனும் பேசிக் கொண்டிருந்ததை சற்று தூரத்திலிருந்து கேட்டுக் கொண்டிருந்த கேசவனுக்கு தான் செய்த தவறு புரிந்தது. அவன் மோகனிடம் வந்து மன்னிப்புக் கேட்டான்.
உடனே பாலு, மோகனிடமும் கேசவனிடமும், ""நாமெல்லாரும் "அறம் செய்ய விரும்பு' என்ற அவ்வைப்பாட்டியின் ஆத்திசூடியைப் படித்திருக்கிறோம். ஆனால் அறம் என்றால் என்ன? என்று யோசித்திருக்கிறோமா? பிறர் நம்மிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நாம் விரும்புகிறோமோ அவ்வாறு நாம் பிறரிடம் நடந்து கொள்ள வேண்டும். இதைவிட எளிமையான முறையில் அறம் செய்ய முடியாது என்று என் அப்பா எனக்கு அடிக்கடி அறிவுறுத்துவார்கள். நான் அதையே பின்பற்றுகிறேன். இனி நீங்களும் அதைப் பின்பற்றி மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்லுங்கள்!'' என்று கூறி முடித்தான்.
பாலு கூறியதைக் கேட்ட மோகனும், கேசவனும் மனம் திருந்தி, இனி அவ்வாறே நடந்து கொள்வதாக உறுதி அளித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...