

ஒரு அண்டங்காக்கை இரை தேடி பறந்தபோது ஒரு குட்டி எலியைப் பார்த்தது. உடனே அதை அலகில் கவ்விக் கொண்டு காட்டின் மேலே பறந்தது. திடீரென்று காகத்தின் பிடியிலிருந்து நழுவி கீழே விழுந்தது குட்டி எலி. அந்தக் காட்டில் வசித்து வந்த மந்திரவாதியின் அருகேதான் அந்தக் குட்டி எலி விழுந்தது.
பரிதாபமான குட்டி எலியைப் பார்த்து மனம் இறங்கினான் மந்திரவாதி. அவன் குட்டி எலியைத் தன்னுடன் வளர்த்து வந்தான். பல நாட்கள் கடந்தன. ஒரு நாள் தன் குடிலைவிட்டு வெளியே வந்த எலி ஒரு பூனையைப் பார்த்துவிட்டது. உடனே அது பயந்து நடுங்கி பாயந்தோடிச் சென்றது. ஒரு மூலையில் பதுங்கியபோதும் அதன் நடுக்கம் நிற்கவில்லை.
இதைக் கவனித்துக் கொண்டிருந்த மந்திரவாதி கனிவுடன் கேட்டான்.
""என்ன ஆயிற்று குட்டி எலியே? ஏன் இப்படி நடுங்குகிறாய்?''
குட்டி எலி கீச்சுக் குரலில் சொன்னது:
""நான் குடிலிலிருந்து வெளியே சென்றபோது ஒரு பெரிய பூனையைப் பார்த்தேன். அது என்னைக் கொன்றுவிடுவதுபோல் பயமுறுத்தியது''
எலியின் பயத்தை அகற்ற நினைத்த மந்திரவாதி சொன்னான்:
""நீ ஒருபோதும் பூனையைப் பார்த்து பயப்படாதபடி நான் ஒரு வழி செய்கிறேன். இப்போது நீ சென்று உறங்கு. காலையில் நீ எழும்போது எலியாக இருக்கமாட்டாய். ஒரு அழகான பூனையாக இருப்பாய்''
காலையில் குட்டி எலி ஒரு அழகான பூனையாக மாறியிருந்தது. அப்போது மந்திரவாதி சொன்னான்:
""நீ இனி எப்போதுமே ஒரு பூனையைப் பார்த்து அஞ்சத் தேவையில்லை. ஏனென்றால் இப்போது நீயே ஒரு பூனைதான்.''
பூனையாக மாறிய குட்டி எலி மகிழ்ச்சியுடன் வெளியே ஓடியது. சூரிய வெப்பத்தில் தன்னை சூடுபடுத்திக் கொள்வதற்காக ஓர் இடத்தில் படுத்தது. அப்போது மீண்டும் எதிர்பட்டது அந்தப் பழைய பூனை. குட்டி எலி அதைப் பார்த்துப் பெரும் பதற்றமடைந்தது. தான் இப்போது ஒரு எலி அல்ல, பூனை என்பதையும்ங்கூட அது மறந்து ஓட்டமாக ஓடியது.
எலியின் அச்சத்தைப் பார்த்து வியப்படைந்த மந்திரவாதி கேட்டான்:
""என்ன ஆயிற்று உனக்கு? இந்தமுறை யார் உன்னைப் பயமுறுத்தியது?''
பூனையாக மாறியிருந்த எலி தன்னை நினைத்து வெட்கமடைந்தது. தான் இப்போதும் ஒரு பூனையைப் பார்த்து அஞ்சுகிறோம் என்பதை ஒத்துக் கொள்ளவில்லை. எனவே மந்திரவாதியிடம் பொய் சொன்னது.
""நான் காட்டில் ஒரு நாயைச் சந்தித்தேன். அது என்னைத் துரத்தியது. அதனிடமிருந்து நான் தப்பி வந்ததே அதிசயந்தான்''
பரிவு கொண்ட மந்திரவாதி மீண்டும் சொன்னான்:
""நீ இரவில் உறங்கி காலையில் எழும்போது நீ அழகிய பூனையாக இருக்கமாட்டாய். ஒரு நாயாக மாறியிருப்பாய். பிறகு எப்போதும் நீ ஒரு நாயைப் பார்த்து பயப்படத் தேவையில்லை.''
காலையில் எழுந்தபோது அந்தப் பூனை உண்மையாகவே ஒரு பெரிய நாயாக இருந்தது. சத்தமாகக் குரைத்தது. மகிழ்ச்சியாகக் காட்டுக்குள் ஓடும்போது ஒரு மரத்தருகே அந்தப் பூனையை மீண்டும் பார்த்தது. பூனையும் நாயைப் பார்த்தது. அந்த நாய் தன்னைத் தாக்கவே வந்திருப்பதாக நினைத்தது பூனை. எனவே தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக உறுமியது. நகங்களைத் தூக்கிக் காட்டி மியாவ் என்று அலறியது.
பூனையின் அலறலைக் கேட்டு மிரண்டுபோன நாய் தலை தெறிக்க ஓடியது.
குடிலில் வந்து ஒளிந்து நாயிடம் மந்திரவாதி கேட்டான்:
""இப்போது யார் உன்னை பயமுறுத்தினார்கள்?''
பூனையைப் பார்த்து தான் பயந்துவிட்டேன் என்று சொல்ல வெட்கப்பட்டது நாய். எனவே அது மந்திரவாதியிடம் பொய் சொன்னது.
""என் குருவே! நம் குடிலுக்கு அருகிலேயே நான் ஒரு புலியைப் பார்த்தேன். எவ்வளவு கொடூரமாக இருந்தது தெரியுமா அது? என்னைப் பார்த்து பயங்கரமாக உறுமியது. கடவுள் அருளால் நான் எப்படியோ அதனிடமிருந்து தப்பி வந்துவிட்டேன்!''
மந்திரவாதி அன்புடன் சொன்னான்:
""இனி எப்போதும் யாரைப் பார்த்தும் அஞ்சாதபடி நான் ஒரு ஏற்பாடு செய்கிறேன். நாளைக் காலையில் நீ எழும்போது ஒரு புலியாக மாறியிருப்பாய்''
அவன் சொன்னது அப்படியே நடந்தது. காலையில் நாய் எழுந்தபோது ஒரு புலியின் உருவத்துடன் இருந்தது. அந்தப் புலி நினைத்தது:
"இந்தச் சிறிய குடில் நான் வசிப்பதற்குத் தகுதியான இடம் அல்ல. ஒரு பெரிய மிருகமான நான் சிறிய குடிலில் மனிதனுடன் வாழ்வதா? நான் காட்டுக்குச் செல்வேன். அங்கிருக்கும் எல்லா விலங்குகளும் என்னைப் பார்த்து அஞ்சும்படி செய்வேன்.'
தன்னைப் பற்றி மிகவும் பெருமையாக நினைத்தவாறு புலி காட்டுக்குள் நடந்தது. அப்போது எதிர்பாராமல் மீண்டும் அந்தப் பூனையைப் பார்த்துவிட்டது. பூனையும் புலியைப் பார்த்தது. அச்சத்தால் பூனையின் உடல் சிலிர்த்தது. அதன் முதுகு வளைந்திருந்தது. மரண பயத்துடன் வெறித்துப் பார்த்தது.
எனக்கு முடிவு வந்துவிட்டது. இந்தப் புலியிடமிருந்து என்னால் தப்பிக்க முடியாது... கடவுளே என்ன செய்வேன் என்று கலக்கமடைந்தது பூனை.
அந்தப் புலி இருக்கிறதே அது என்ன செய்தது தெரியுமா? பூனையைப் பார்த்ததும் பயந்து பதறி ஓடிக் குடிலுக்குள் புகுந்து கொண்டது. அதன் பற்கள் கடகடவென அடித்துக் கொண்டன.
புலியின் பயத்தைப் பார்த்துப் பெரிதும் வியப்படைந்த மந்திரவாதி கேட்டான்:
""ஏன் மீண்டும் அஞ்சி நடுங்குகிறாய்? நீ இப்போது ஒரு புலி. உன்னைவிடப் பலம் வாய்ந்த விலங்கு எதையும் பார்த்தாயா?''
""ஆமாம்... அங்கே பார்த்தேன்...'' என்று திக்கித் திணறிச் சொன்னது புலி.
மந்திரவாதி தெரிந்து கொள்ள விரும்பினான்.
""என்ன விலங்கு அது?''
""அது... அது.... அது ஒரு பூனை''
அப்போதுதான் மந்திரவாதிக்கு எல்லாம் தெளிவாகப் புரிந்தது. அவன் சொன்னான்:
""ஒரு எலி மிகவும் பலம் வாய்ந்த புலியாக மாறினாலும் அது எலிக்கான அச்சத்துடனேயே இருக்கிறது. உடல் பலத்தால் பலனொன்றும் இல்லை. யார் துணிவற்றவர்களாக இருந்தாலும் எலியைப் போன்றவர்கள்தான்''
பிறகு மந்திரவாதி அந்தப் புலியைச் சாதாரண எலியாக மாற்றினான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.