எது நாட்டுப் பற்று?- சிறுகதை
எட்டாம் வகுப்பு படிக்கும் கோபால்தான் வகுப்புத் தலைவன். எனவே தினமும் மாலை வகுப்பு முடிந்ததும் அவனுக்குச் சில வேலைகள் இருக்கும். ஆசிரியர் திருத்த வேண்டிய கட்டுரை நோட்டுப் புத்தகங்களை அவரது அறையில் கொண்ட


எட்டாம் வகுப்பு படிக்கும் கோபால்தான் வகுப்புத் தலைவன். எனவே தினமும் மாலை வகுப்பு முடிந்ததும் அவனுக்குச் சில வேலைகள் இருக்கும். ஆசிரியர் திருத்த வேண்டிய கட்டுரை நோட்டுப் புத்தகங்களை அவரது அறையில் கொண்டு வைப்பது, மறுநாளுக்கான சாக்பீஸ், டஸ்டர் போன்றவற்றை எடுத்து வைப்பது போன்ற வேலைகளைச் செய்து முடித்து விட்டு அவன் வீட்டிற்குச் செல்ல சற்று தாமதமாகிவிடும்.
அன்றைய தினமும் அவன் வழக்கம் போலவே வேலைகளை முடித்து விட்டு வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தான். வரும் வழியில் ஒரு முச்சந்திப்பில் அவனுடன் படிக்கும் கணேசனும், நாகராஜனும் நின்று கொண்டிருந்தனர். கணேசன் நாகராஜனிடம் தூரத்தில் எதையோ சுட்டிக் காட்டியபடி சிரித்துக் கொண்டிருந்தான்.
கோபால் அவர்களிடம், 'நீங்கள் இருவரும் எனக்கு முன்பே புறப்பட்டு வந்தீர்களே? இங்கே நின்று எதற்காக சிரித்துக் கொண்டிருக்கிறீர்கள்?'' என்று கேட்டான்.
அதற்கு கணேசனும், ''நான் இப்போது எனது நாட்டுப்பற்றைக் காட்டும் செயல் ஒன்றைச் செய்தேன். அதைத்தான் நாகராஜனிடம் சொல்லிக் கொண்டிருக்கிறேன்'' என்று சொல்லிவிட்டு சிரித்தான்.
நேற்று பள்ளிக்கூடத்தில் அவர்களது வரலாறு ஆசிரியர் இந்திய நாட்டுத் தலைவர்கள் சிலரைப் பற்றி பாடம் நடத்தினார். அப்போது, மாணவர்களும் தேசப்பற்றோடு திகழ வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார். 'கணேசன் இந்நேரத்தில் நாட்டுப்பற்றைக் காட்டும் எந்தச் செயலைச் செய்திருப்பான்?' என்று கோபாலுக்கு குழப்பமாக இருந்தது.
அவன் கணேசனிடம், ''கணேசா! நீ சொல்வது எனக்குப் புரியவில்லை. அப்படி என்ன நாட்டுப்பற்றைக் காட்டும் செயலைச் செய்துவிட்டாய்?'' என்று கேட்டான்.
உடனே நாகராஜன், ''கோபால்! சிறிது நேரத்திற்கு முன்பு இந்த வழியே இரண்டு வெளிநாட்டுக்காரர்கள் நடந்து வந்தார்களாம். அவர்கள் இந்தியாவிற்கு சுற்றுலா வந்திருப்பார்கள் போலத் தெரிகிறது. அவர்கள் இருவரும் நம் ஊரிலுள்ள சாலைகளில் குப்பைகள் நிரம்பிக் கிடப்பதாகப் பேசிக் கொண்டதைக் கணேசன் கேட்டானாம். அதைக் கேட்டு கணேசனுக்கு கோபம் வந்ததாம்!'' என்று சொன்னான்.
''சரி, அந்த வெளிநாட்டுக்காரர்கள் நாம் நாட்டிலுள்ள சாலைகளைப் பற்றி அப்படி பேசினார்கள். அதற்கு கணேசன் என்ன செய்தான்? அதைச் சொல்!'' என்று கோபால் கேட்டான்.
உடனே கணேசன், ''நான் செய்ததை நானே சொல்லிவிடுகிறேன் கோபால். அந்த வெளிநாட்டுக்காரர்கள் நம் நாட்டைப் பற்றி இழிவாகப் பேசியதற்காக அவர்களைப் பழிவாங்க நினைத்தேன். அதற்குத் தகுந்தாற்போல அவர்கள் என்னிடம் வந்து ரயில் நிலையம் எங்கே இருக்கிறது? என்று கேட்டார்கள். நானும் இதுதான் நல்ல சந்தர்ப்பம் என்று அவர்களிடம் தவறான வழியைச் சொல்லிவிட்டேன். நம் ஊரில் ரயில் நிலையம் வடக்குப் பக்கம் அல்லவா இருக்கிறது. இதோ அந்த வெளிநாட்டுக்காரர்கள் தெற்குப் பக்கமாக நடந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். நம் நாட்டைப் பற்றி இழிவாகப் பேசியவர்களுக்கு இதுதான் தண்டனை!'' என்று சொல்லிவிட்டு சிரிக்க, கூடவே நாகராஜனும் விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கினான்.
கணேசன் சொன்னதைக் கேட்ட கோபாலுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவன் கணேசனிடம், ''கணேசா, நீ செய்தது மிகவும் தவறு. நான் இப்போதே ஓடிச் சென்று அவர்களிடம் ரயில் நிலையத்திற்கான சரியான வழியைச் சொல்லிவிட்டு வரப்போகிறேன்!'' என்றபடி சாலையைக் கடக்கச் சென்றான்.
அதைக்கண்ட கணேசனும் நாகராஜனும், ''கோபால்! உனக்கு நம் நாட்டின் மீது பற்றே இல்லையா? அந்த வெளிநாட்டினருக்கு உதவி செய்யாதே!'' என்று சொன்னார்கள்.
ஆனால் கோபால் அவர்கள் சொன்னதைப் பொருட்படுத்தவில்லை. சாலையைக் கடக்கும் வரை நிதானமாகச் சென்ற கோபால், தெற்குச்சாலையை அடைந்ததும், வேகமாக ஓடினான். அவன் எதிர்பார்த்தது போலவே சற்று தூரத்தில் இரு வெளிநாட்டுக்காரர்கள் நடந்து போய்க் கொண்டிருப்பது தெரிந்தது.
கோபால் அந்த வெளிநாட்டுக்காரர்களின் அருகில் சென்று, ''நீங்கள் ரயில் நிலையத்திற்கா சென்று கொண்டிருக்கிறீர்கள்?'' என்று ஆங்கிலத்தில் கேட்டான். அவர்கள் இருவரும் ''ஆமாம்!'' என்று பதிலளித்தனர்.
உடனே கோபால், ''நீங்கள் சற்று முன்பு என் நண்பர்களிடம் வழி கேட்டீர்கள் போலிருக்கிறது. அவர்களுக்கு ரயில் நிலையம் எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. எனவே அவர்கள் உங்களுக்கு தவறான வழியைக் காண்பித்து விட்டார்கள். நீங்கள் போகவேண்டிய ரயில் நிலையம் வடக்குப் பக்கம் இருக்கிறது. இதோ எதிர்ப்புறச் சாலை வழியே செல்லுங்கள். என் நண்பர்கள் உங்களுக்கு ஏற்படுத்திய சிரமத்திற்கு மன்னித்துக் கொள்ளுங்கள்!'' என்று சொன்னான்.
உடனே வெளிநாட்டுக்காரர்கள் இருவரும், ''ஓ... அப்படியா? பரவாயில்லை. சிறுவர்களுக்கு ரயில் நிலையம் தெரிய வாய்ப்பில்லைதானே! இருப்பினும் எங்கள் மீதுள்ள அக்கறையால், எங்கள் பின்னால் ஓடி வந்து சரியான வழியைச் சொன்னதற்கு நன்றி! இந்தியாவில் பிறருக்கு உதவி செய்யும் மக்கள் அதிகம் இருக்கிறார்கள் என்பது இந்நாட்டிற்கு நிச்சயம் பெருமை!'' என்று கோபாலைப் பாராட்டினார்கள். கூடவே அவர்கள் தங்கள் பையிலிருந்த ஒரு சாக்லெட்டையும் எடுத்து கோபாலுக்குக் கொடுத்தார்கள். கோபால் சாக்லெட்டை வாங்கியபடி அவர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு திரும்பினான். கோபாலின் மீது கோபம் கொண்ட கணேசனும், நாகராஜனும் அவன் வருவதற்குள் சென்றிருந்தனர்.
மறுநாள் பள்ளிக்கூடம் ஆரம்பமானது. வரலாறு ஆசிரியர் வகுப்பினுள் நுழைந்தார். அதற்காகவே காத்திருந்த கணேசன் எழுந்தான். நேற்று மாலை நடந்தவை அனைத்தையும் ஆசிரியரிடம் விளக்கமாகக் கூறினான். பிறகு, ''சார்! எங்கள் இருவரில் யார் செய்தது சரி என்று சொல்லுங்கள்?'' என்று கேட்டான்.
அதைக் கேட்ட ஆசிரியர், ''நிச்சயம் கோபால் செய்ததுதான் சரி. நீ செய்தது மிகவும் தவறு!'' என்று சொன்னார்.
உடனே கணேசன், ''மாணவர்கள் தேசப்பற்றோடு திகழ வேண்டும் என்று நீங்கள்தான் அறிவுறுத்தினீர்கள்? அதன்படி நம் நாட்டை இழிவாகப் பேசியவர்களுக்கு தவறான வழியைச் சொல்லி அவர்களைப் பழிவாங்க முயற்சித்தேன். ஆனால், கோபாலோ நான் செய்தது தவறு என்று சொல்லி, அந்த வெளிநாட்டினரிடம் சென்று சரியான வழியைச் சொல்லிவிட்டு வந்திருக்கிறான். அவன் செய்தது எப்படி சரியாகும்?'' என்று கேட்டான்.
ஆசிரியரும், ''கணேசா! ஏற்கனவே நம் ஊர்களிலுள்ள சாலைகள் குப்பை நிரம்பிக் கிடக்கிறது என்று அவர்கள் சொன்னார்கள். நீ உண்மையிலேயே நாட்டுப்பற்றைக் காண்பிக்க விரும்பினால், சாலையிலுள்ள குப்பைகளை அகற்றுவதற்காக ஏதேனும் செய்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு அந்த வெளிநாட்டினருக்கு தவறான வழியைக் காட்டி, அவர்களைப் பழிவாங்குவது எப்படி நாட்டுப்பற்று ஆகும்? நீ அவ்வாறு செய்ததால், இந்தியர்கள் அனைவரும் பொய் சொல்பவர்கள் என்றல்லவா எண்ணுவார்கள்? ஆனால், கோபால் அவர்களுக்கு சரியான வழியைச் சொன்னதால், அவர்கள் இந்தியாவைப் பற்றி பெருமையாகப் பேசிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். நம் நாட்டிற்கு அவப்பெயர் வாங்கித் தருவது நாட்டுப்பற்றா? அல்லது பெருமை தேடி தருவது நாட்டுப்பற்றா? நீயே சொல்!'' என்று கேட்டார்.
ஆசிரியர் கூறியதைக் கேட்ட கணேசன் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்தான். உடனே நாகராஜனும், ''சார்! அப்படியானால் நம் நாட்டை இகழ்ந்து பேசிய அவர்களைத் தண்டிக்க வேண்டாமா?'' என்று கேட்டான்.
அதைக் கேட்ட ஆசிரியர் புன்னகை செய்தார். பிறகு அவர் மாணவர்களை நோக்கி, ''நீங்கள் அனைவரும் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். நமது குறையை அக்கறையோடு ஒருவர் எடுத்துக் கூறினால் அதை நாம் நேர்மையாக ஏற்றுக் கொண்டு, அக்குறையைக் களைவதற்கான முயற்சியில் இறங்க வேண்டும். அதை விட்டுவிட்டு அவர்களுக்குத் துன்பம் விளைவிப்பதோ, அவர்களைப் பழிவாங்குவதோ சரியாகாது. நம் குறையை நாம் ஏற்றுக் கொள்ள மறுத்தால், அக்குறையை களையவே முடியாது.
உண்மையிலேயே நாம் நமது நாட்டுப்பற்றை வெளிப்படுத்த விரும்பினால், நமது பள்ளிக்கூடத்திலேயே ஓர் மாணவர் அமைப்பை உருவாக்க வேண்டும். அதன் மூலம், சாலைகளைச் சுத்தம் செய்வது உட்பட பல நற்காரியங்களைச் செய்ய வேண்டும். கூடவே பல பள்ளிகளிலுள்ள மாணவர்களையும் இத்தகைய பொதுசேவை செய்யும்படி அறிவுறுத்த வேண்டும். அவ்வாறு செய்தால் சீக்கிரமே நம் நாட்டிலுள்ள குறைகளை முழுவதுமாகப் போக்கிவிட முடியும். இதுவே உண்மையான நாட்டுப்பற்று. இதோ இன்றே நாம் மாணவர் அமைப்பை உருவாக்குவோம். அதற்கு கோபாலே பொறுப்பு ஏற்கட்டும்!'' என்று கூறி முடிக்க, வகுப்பிலிருந்த மாணவர்கள் அனைவரும் ஒருசேர கைதட்டினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...