

உத்தமர் வேதம், சாஸ்திரம் மற்றும் ஜோதிடம் போன்ற கலைகளை நன்கு கற்று விற்பன்னர். ஆனால், இவருடைய பெருமை வாய்ந்த ஞானத்தினால் தன் குடும்பத்தைப் பராமரிக்கக் கூடிய போதிய வருமானம் கிடைக்காததால் வறுமை அவரை வாட்டியது. ஒருவேளை உணவுக்கே கடினமாயிற்று. ஆகவே அவர் மனைவி சுமதி அவரிடம், ""சுவாமி! நம்மால் பசி தாங்க முடியும். நம் குழந்தைகள் வாடி வதங்குவதைப் பார்க்க என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை. தாங்கள் குருகுலத்தில் படித்த போது நம் நாட்டு அரசரும் தங்களுடன் வேதசாஸ்திரம் படித்தவர் என்று கூறுவீர்களே. அவரைச் சந்தித்து உதவிக் கேட்டால் தங்களுக்கு உதவ மாட்டாரா? தயக்கம் காட்டாமல் அவரை உடனே பாருங்கள்'' எனக் கெஞ்சினாள்.
""சுமதி! சொல்வது சுலபம். எப்போதோ படித்தோம். வறுமையில் வாடிய என்னை அவர் புரிந்துக் கொள்வது சிரமம். மேலும், அரண்மனைக் காவலர்கள் இந்தத் தரித்தரனை மன்னரைப் பார்க்க அனுமதிப்பார்களா?''
""ஏழை குசேலர் கிருஷ்ணபகவானை சந்திக்கவில்லையா? உங்களாலும் முடியும். நம் குழந்தைகள் முகத்தைப் பாருங்கள். தெய்வத்தின் மீது பாரத்தைப் போட்டு கிளம்புங்கள். கடவுள் உங்களைக் கைவிட மாட்டார்'' என்றாள் சுமதி.
மனைவியின் வற்புறுத்தலால் உத்தமர் பயணம் மேற்கொண்டார். நாம் படித்தது ஏட்டுச் சுரக்காய் ஆகிவிட்டதே என தன்னையே நொந்துக் கொண்டு, தன் நண்பன் உஜ்ஜையினி மன்னன் ஆதித்தனை சந்திக்க முடிவு செய்தார். கால்நடையாகக் காடு, மேடுகளைக் கடந்துச் செல்ல இரண்டு தினங்களாவது ஆகும். கடினப் பயணம்தான். காட்டை நெருங்கும் போது மதியம் உச்சி வேளையாயிற்று. கையில் கொண்டு வந்த உணவை சாப்பிட்டுவிட்டு களைப்பின் மிகுதியால் சிறிது நேரம் ஓய்வெடுக்க மரத்தடியின் நிழலில் படுத்துக் கொண்டார். அசதியில் வாய் திறந்தபடி தூங்கினார். அது சமயம், மரத்தில் ஓடிவந்த ஒரு ஓணான் அவர் வாய்க்குள் புகுந்து வயிற்றுக்குள் சென்று விட்டது. அலறியடித்துக் கொண்டு உத்தமர் "" ஐயோ... கடவுளே! என்ன செய்வேன்? என் உயிருக்கு ஆபத்து வந்து விட்டதே'' என்று விரைவாக வைத்தியரைச் சந்தித்து ஓணானை வெளியேற்ற அவசரமாக நகரத்தை நோக்கி ஓட ஆரம்பித்தார்.
அப்போது வயிற்றுக்குள்ளிருந்த ஓணான், ""உத்தமரே! பயப்படாதீர். உங்களுக்கு உதவி செய்யவே தங்களிடம் தஞ்சமடைந்தேன். உங்கள் உயிருக்கு ஒரு ஆபத்தும் வராது'' என்றார்.
"என்ன ஆச்சர்யம்! ஓணான் பேசுகிறதே. இது என்ன மாயமா, மந்திரமா?' எனக் கலங்கி, ""நீ யார்? எனக்கு எப்படி உதவ முடியும்?'' என்றார் உத்தமர்.
"உத்தமரே! தேவலோகத்தில் பாதுகாப்புப் பிரிவிலிருந்த நான் சிறிது நேரம் கண்ணயர்ந்து விட்டேன். அதனால் கோபம் கொண்ட தேவேந்திரன், "நீ ஓணானாக மாறி பூலோகத்தில் மரத்துக்கும், வேலிக்கும் தாவி ஆகாயத்தைப் பார்த்து தலையை ஆட்டிக் கொண்டிரு. உன் தேவலோக சக்தியினால் ஒரு நல்லவருக்கு உதவ வேண்டும். அவர் உன் உதவியால் சுயநலமின்றி மற்றவருக்கு உதவி செய்யும் போது, உன் சுயரூபத்தை அடைந்து என்னிடம் வந்து சேர்வாய்' என்று சாபத்தையும், அதிலிருந்து மீள சாபவிமோசனத்தையும் அருள் புரிந்துள்ளார். இது தேவ ரகசியம். யாரிடமும் சொல்லக் கூடாது. புரிந்ததா! ஆகவே, நீங்கள் உங்கள் நாட்டு மன்னனை சந்தியுங்கள். மற்றவைகளை நான் கவனித்துக் கொள்கிறேன்' என்றது ஓணான்.
அதன்படி, உத்தமர் அரண்மனை வாயிலை அடைந்து காவலர்களிடம், ""தான் மன்னனின் நண்பர். அவரைச் சந்திக்க விரும்புகிறேன்'' என்று கூறியதும், காவலர்கள் ""யார் இந்த அந்தணன்? மன்னரின் நண்பரா?'' எனச் சந்தேகித்து அனுமதி மறுத்தனர்.
எதேச்சையாக உப்பரிகையில் உலாவிக் கொண்டிருந்த ஆதித்தன், கீழே நடக்கும் வாக்குவாதத்தைக் கண்டு காவலர்களை நோக்கி, அவ்வந்தணரை உள்ளே அனுமதிக்க உத்தரவிட்டார்.
மகிழ்ச்சியோடு உள்ளே வந்த உத்தமர் கைகூப்பி வணங்கி, ""மன்னா! என்னைத் தெரியவில்லையா? நான்தான் தங்களோடு குருகுலத்தில் பயின்ற ஏழை அந்தணன் உத்தமன்'' என்றதும், ஆதித்தன் ""ஆகா! உத்தமா நீயா?'' என்று அவரை அணைத்துக் கொண்டு, ""நண்பனே! பல ஆண்டுகளுக்குப் பிறகு என்னைச் சந்திக்க வந்தக் காரணத்தை அறியலாமா? நீயும், உன் குடும்பமும் சுகமா? எங்கே வாசம்?'' என கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தான்.
""நான் வேத சாஸ்திரம் படித்தும் போதுமான வருமானமில்லாமல் கஷ்டப்படுகிறேன். என்னுடைய குடும்பமும் கஷ்டப்படுகிறது. தாங்கள் அரசாங்கத்தில் பணி செய்ய உதவினால் என் வறுமை நீங்கும்'' என்றார்.
""உத்தமா! உனக்கு இந்தக் கதியா? உனக்கு என்னால் எல்லா வசதியும் செய்து தர முடியும். ஆனால், இப்போது சந்தர்ப்பமும், சூழ்நிலையும் என்னை செயலற்றதாக்கி விட்டது. அண்டை நாட்டரசன் உஜ்ஜைனியை படையெடுத்து அபகரிக்க முயல்கிறான். நானும், என் குடிமக்களும் அமைதியை விரும்புபவர்கள். தெய்வ பக்திக் கொண்டவர்கள். அதனால் போர் வீரர்களுக்கு தக்க பயிற்சியளிக்கவில்லை. போரை தவிர்த்து சரணாகதி அடைவது எனத் தீர்மானித்து விட்டேன். ஆகவே, உனக்கு எப்படி உதவி செய்வது எனப் புரியாமல் தவிக்கிறேன்'' என வருத்தமுற்றான் ஆதித்தன்.
உத்தமர் தன் துரதிருஷ்டத்தை நினைத்து மௌனமாக தன்னை நொந்துக் கொண்டார். அப்போது ஓணான் உத்தமரிடம், "கவலையை விடு. நான் எதிரிப் படைகளை விரட்டியடிக்கிறேன் என மன்னனிடம் சவால் விடு. மற்றவையை நான் கவனித்துக் கொள்கிறேன்' என்றதும், ""இது நடக்கக் கூடிய காரியமா? எப்படிச் சமாளிக்க முடியும்'' என உத்தமர் கேட்டார்.
"உத்தமரே! என்ன யோசனை? என் மீது நம்பிக்கையிருந்தால் உடன் மன்னனிடம் பேசு' என்று உசுப்பியது.
மௌனம் கலைந்த உத்தமர், ""என் ஆருயிர் மன்னா! கவலையை விடுங்கள். எதிரிப் படைகள் வரும் போது வழித் தடலில் எதிர்புரமாக அவர்களை நான் பார்க்கும் படி ஏற்பாடு செய்யுங்கள். பிறகு என்ன நடக்கிறது என்பதைக் கவனியுங்கள்'' என்று ஓணான் ரகசியமாகச் சொன்னதை அப்படியே கூறினார்.
ஆதித்தனுக்கு, உத்தமரின் பேச்சைக் கேட்டதும், ""என்ன பைத்தியக்காரச் செயல்! ஏதாவது மூளைக் கோளாரா? எப்படி இருந்தாலும் தோல்விதான். ஆனது ஆகட்டும், தி உத்தமரின் விருப்பப் படி செய்து தான் பார்ப்போமே'' என்று தன் அமைச்சரோடு, நாட்டின் எல்லையை நெருங்கிக் கொண்டிருக்கும் எதிரிப் படைகளை மலையின் மீது ஏறி நோக்கும் படி செய்தான்.
என்ன ஆச்சர்யம்! இவர்களைக் கண்டதும் எதிரிப் படையினர் மூலைக்கு ஒன்றாக தலைதெரிக்க புறம் காட்டி ஓட ஆரம்பித்தனர். எதிரி பக்கத்திலிருந்து சரணடைய சமாதானச் சின்னமான வெள்ளைக் கொடியை பறக்க விட்டனர்.
ஓணான் உத்தமரிடம், ஆதித்தனாரை சமாதான உடன்படிக்கையை ஏற்கும்படி தூண்டியது.
மன்னன் ஆதித்தன் பிரமைப் பிடித்தவனாகி, ""உத்தமரே! என்னை மாயஜாலம் இது. நடப்பது நிஜந்தானா? நான் காண்பது கனவா அல்லது நினைவா'' என்று பதறி, அவர் கைகளைப் பற்றிக் கொண்டார்.
""மன்னா! இது ஆண்டவன் செயல். தேவ ரகசியம். இதை வெளியிட்டால் நம் இருவருக்கும் ஆபத்து ஏற்படும். அது பிறகு உனக்குத் தெரிய வரும். எதிரியை மன்னித்து விடு'' என்றார். எதிரிகள் தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்று வந்த வழியே திரும்பினர்.
சமாதான உடன்படிக்கை ஏற்பட்டதும், ஓணான் வடிவிலிருந்த தேவவிரதன் தன் சுயரூபத்தில் வெளி வந்தார். தன் கதையை விலாவாரியாகக் கூறினார்.
""ஆதித்த மன்னா! உத்தமா உங்கள் இருவருடைய நல்ல எண்ணமும், நல்லதே செய்ய வேண்டும் என்ற வைராக்கியமும் என்னை சாபத்திலிருந்து மீட்டு என் சுயரூபத்தை அடைந்தேன். என் தேவசக்தியால் போர் முனையில் எதிரிகள் மீது ஆக்ரோஷத்துடன் பாயும் கொடிய மிருகங்களை ஆயிரக்கணக்கில் தோன்றச் செய்தேன். அதுதான் எதிரியின் கொட்டத்தை அடக்கியது. உன் உண்மையான பக்தியால் எம்பெருமான் உனக்கு எந்த செய்கையிலும் வெற்றியையும், புகழையும் அருள்வார். உனக்கும், உத்தமருக்கும் சகல சௌபாக்யங்களும் உண்டாகட்டும்'' எனக் கூறி மறைந்தார்.
மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கிய உத்தமரைக் கட்டித் தழுவி, ""தங்களால்தான் எனக் கடவுளின் அனுக்கிர வரமும், ராஜ்யத்தில் அமைதியும், மக்களின் பாராட்டும் கிடைத்தது. இனி தாங்கள் உங்கள் குடும்பத்தோடு அரண்மனையிலேயே தங்கி நாடு செழிக்க வேண்டுமென'' வேண்டிக் கொண்டான்.
ஆனால் உத்தமர், ""மன்னா! தங்கள் அன்பான விருப்பத்தை புரிந்துக் கொண்டேன். இருப்பினும் என் கிராமத்திற்குச் சென்று வேத சாராம்சத்தின் மகிமையை மக்களுக்குப் புகட்ட விரும்புகிறேன். தடை சொல்லாதீர்கள். நல்லதைப் பாருங்கள்; நல்லதைப் பேசுங்கள்; நல்லதையே செய்யுங்கள்; அது உங்களைக் காக்கும்'' என்றார்.
அவர் விருப்பத்தை மறுக்காமல் அவருக்கு நிறைய வெகுமதிகளையும், பத்து கிராமங்களையும் தானமாகக் கொடுத்து தக்கப் பாதுகாப்போடு அனுப்பி வைத்தான்.
உத்தமர் ஊர் நெருங்கும் போது, தன் வீடும், மனைவி மக்களும் மற்றும் ஊரே ஜெகஜோதியாகக் காட்சியளித்தன. எல்லாம் தேவ விரதன் செயல் எனப் புரிந்துக் கொண்டார்.
குசேலர் போல் உத்தமரும், அவர் குடும்பமும் வறுமையிலிருந்து விடுபட்டு சகல பாக்யங்களையும் பெற்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.