சிறுவர் சினிமா: சொர்க்கத்தின் குழந்தைகள்

தி சில்ரன் ஆஃப் ஹெவன் "தி சில்ரன் ஆஃப் ஹெவன்'னு ஒரு படம் இருக்கு கண்ணுகளா. ஈரான் தேசத்துப் படம். உலகத்துல இது வரைக்கும் எத்தனையோ படங்கள் குழந்தைகளைப் பத்தி வந்துருக்கு. ஆனா, இதுதான் நல்ல படம்னு நெறையா
Updated on
3 min read

தி சில்ரன் ஆஃப் ஹெவன்

"தி சில்ரன் ஆஃப் ஹெவன்'னு ஒரு படம் இருக்கு கண்ணுகளா. ஈரான் தேசத்துப் படம். உலகத்துல இது வரைக்கும் எத்தனையோ படங்கள் குழந்தைகளைப் பத்தி வந்துருக்கு. ஆனா, இதுதான் நல்ல படம்னு நெறையா பேரு சொல்றாங்க. இது என்னா கதை தெரியுமா?

÷ஈரான்ல ஒரு ஏழைக் குடும்பம் இருக்கு. அந்தக் குடும்பத்துல பாசமான அண்ணந் தங்கச்சி ரெண்டு பேரு இருக்காங்க. அண்ணன்காரன் பேரு அலி. அவன் ஒரு நாள் உருளைக்கெழங்கு வாங்க மார்க்கட்டுக்குப் போறான். வரும்போது அப்படியே தங்கச்சியோட ஷூவை ரிப்பேர் பண்ணி எடுத்துட்டு வந்துடலாம்னு, அந்த ரெண்டு ஷூவையும் எடுத்துக்கிட்டுப் போறான். அப்பதான் அவன் ஒரு பெரிய பிரச்னையில மாட்டிக்கிறான். என்னா பிரச்னை? ரிப்பேர் பண்ண எடுத்துக்கிட்டுப்போன தங்கச்சியோட ஷூவைத் தொலச்சிடுறான்.

÷அங்கயும் இங்கயும் தேடித்தேடிப் பாக்குறான், ஷூவைக் காணல. என்னா பண்றது?   இப்படி ஒரு துன்பம் வந்துடுச்சே! குடும்பம் உள்ள கஷ்ட நெலமையில இன்னொரு புது ஷூ வாங்க முடியாதே. அடடா... அப்பா என்ன சொல்லுவாங்களோ... ஷூ இல்லாம தங்கச்சிக்கு ரொம்பச் சிரமமாப் போகுமே... இப்படியெல்லாம் நெனச்சு மனசு வேதனப்படுறான். அவனோட நெலமயக் கொஞ்சம் யோசிச்சிப் பாருங்க கண்ணுகளா... ரொம்பப் பாவம்தானே!

÷அவங்க குடியிருக்கிற வீட்டுக்கு ஆறுமாச வாடக இன்னும் கொடுக்கல. அம்மாவுக்கும் உடம்பு சரியில்ல. அப்பா தோட்ட வேலை செய்யிறவரு. அந்த வேலையும் எப்போதும் இருக்காது. இந்த நேரத்தில ஷூ தொலஞ்சிபோன கதை அப்பாவுக்குத் தெரிஞ்சா ரொம்ப சிக்கலாப் போகுமே. ரொம்ப பயப்படுறான் அலி. அதனால என்னா செய்யிறான்? வீட்டுக்கு வந்து தங்கச்சி சாராக்கிட்டே மட்டும் ரகசியமா இந்த விஷயத்தைச் சொல்றான். சாரா ஒரு குட்டித் தங்கச்சிதான், ஆனாலும், அவ கெட்டிக்காரி. "நமக்குன்னு இருந்தது ஒரு ஜோடி ஷூதான். அதுவும் போச்சே' அப்படின்னு ரொம்பக் கவலைப் படுறா.  அவளுக்கு அதிர்ச்சியா இருக்கு. அழுக அழுகயா வருது. அண்ணங்காரன அப்படியே கோவமாப் பாக்குறா. அலி என்னா செய்வான் பாவம். அவன் சோகமா தங்கச்சியப் பாக்குறான்.           "தங்கச்சி... தங்கச்சி... நீ ரொம்ப நல்ல தங்கச்சில்ல. ஷூ தொலஞ்சி போனத அப்பாக்கிட்ட சொல்லிறாத புள்ள...' அப்படின்னு சைகை காட்டுறான்.

÷தங்கச்சிக்காரிக்குக் கோவம்தான். ஆனாலும், என்னா பண்றது? இப்ப இந்த விஷயத்த வீட்ல சொன்னா அண்ணனுக்குத்தான அடி விழும். அதனால அவ,"நான் இனி எப்படி அண்ணா பள்ளிக்கொடத்துக்குப் போறது?'ன்னு நோட்டுல எழுதிக் காட்டுறா. அலியும், "நீ என்னோட ஷூவைப் போட்டுக்கிட்டு பள்ளிக்கொடத்துக்குப் போ தங்கச்சி. நீ பள்ளிக்கொடம் முடிஞ்சி வரும் வழியில நான் உங்கிட்டேர்ந்து ஷூவை வாங்கிக்கிறேன்'ன்னு எழுதிக் காட்டுறான். வேற வழி என்னா இருக்கு? அதனால சாராவும் சம்மதிக்கிறா.

÷அந்த ஈரான் நாட்டுல பள்ளிக்கொடம்லாம் எப்படி நடக்கும் தெரியுமா கண்ணுகளா? பொண்ணுங்களுக்கு காலையிலயும், பையன்களுக்கு சாயந்தரமும்தான் பள்ளிக்கொடம் நடக்கும். அதனால, சாரா காலையில அண்ணனோட ஷூவைப் போட்டுக்கிட்டு பள்ளிக்கொடத்துக்கு ஓடுறா. மத்தியானம் அவள் திரும்பற வழியில சந்து ஒண்ணு இருக்கு. அங்க புத்தகப் பையோட அலி காத்திருப்பான். பள்ளிக்கொடம் முடிஞ்சதும் தங்கச்சி, அண்ணன் கிட்டே ஓடி வருவா. தங்கச்சி கால்ல இருக்கிற ஷூவை அவசர அவசரமா தன்னோட கால்ல மாத்திப் போட்டுக்கிட்டு அவன் ஓடுவான் பள்ளிக்கொடத்துக்கு. இந்த மாதிரி தெனமும் போனா பள்ளிக்கொடத்துக்கு சரியான நேரத்துக்குப் போக முடியுமா? லேட்டாவும்தானே. பெரிய சார் அலியைக் கவனிக்கிறாரு. "என்னா இந்த பையன் தெனமும் லேட்டா லேட்டா வர்றானே. இவனக் கொஞ்சம் கண்டிச்சி வச்சாதான் சரிப்படும்'ன்னு நெனக்கிறாரு. அலியைக் கூப்புட்டு, ""இதோ பாருடா பையா... இனிமே நீ லேட்டா வந்தா, அப்பொறம் தெரியும் என் சேதி!''ன்னு எச்சரிக்கிறாரு.

÷அப்ப அலிக்கு இன்னும் ரொம்ப நெருக்கடியாப் போவுது. அவன் தங்கச்சிக்கிட்ட சொல்றான்,""தங்கச்சி... தங்கச்சி... நான் தெனமும் லேட்டா வர்றேன்னு பெரிய சாரு என்னயத் திட்டுறாரு. அதனால, நீ மத்தியானம் பள்ளிக்கொடம் முடிஞ்சதும் கொஞ்சம் சீக்கிரம் வாயேன்.'' சரின்னு சொல்றா சாராத் தங்கச்சியும்.

÷அடுத்த நாளு, சாராவுக்குப் பள்ளிக்கொடம் முடியுது. தன்னோட அண்ணனுக்காக அவள் அவசரஅவசரமா ஓடி வர்றா. அப்ப என்னா நடக்குது? கஷ்டத்துக்கு மேல கஷ்டம்.   அவளோட ஷூ ஒண்ணு தவறி, ரோட்டு நடுவுல இருக்கிற கால்வாயில விழுந்துடுது. தண்ணில விழுந்த ஷூ மிதந்துகிட்டே ஓடுது. சாரா கரையிலேயே அதத் தொரத்திக்கிட்டு ஓடுறா. அங்கே ஒரு இடத்துல சாராவுக்காக அலி காத்துருக்கானே, அவன் என்னா நெனக்கிறான். "என்னா, இந்த தங்கச்சிப் புள்ளைய இன்னுங்காணுமே, எனக்கு ரொம்ப லேட்டாவுதே...'ன்னு கோவப்படுறான்.

÷கடைசில சாரா எப்படியோ போராடி ஷூவை எடுத்துக்கிட்டு அண்ணனப் பாக்குறதுக்காக வேகமா ஓடி வர்றா. ""என்னா புள்ள இப்புடி லேட்டாக்கிட்டியே...''ன்னு அலி எரிச்சல்படுறான். அவசரமா ஷூவை மாத்திப் போட்டுக்கிட்டு வேக வேகமா பள்ளிக்கொடத்துக்கு ஓடுறான். பெரிய சார் பாக்குறாரு. "என்னா, இந்தப் பையன் மறுபடியும் லேட்டா வர்றானே'ன்னு கடுகடுன்னு இருக்காரு. அலியக் கூப்புட்டு ""இந்தா தம்பி, நீ போயி உன்னோட அப்பாவ அழைச்சிக்கிட்டு வா. அப்பத்தான் உன்னை பள்ளிக்கொடத்துல சேப்பேன். இல்லன்னா சேக்க மாட்டேன்!''ன்னு சொல்றாரு. ஆனா, அலிக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிற வாத்தியாரு,""இந்தப் பையன் நல்லா படிப்பான் சார். அதனால, இவன ஒண்ணும் செஞ்சிறாதீங்க'ன்னு பெரிய சார் கிட்டே எடுத்துச் சொல்லி, அலியைக் காப்பாத்துறாரு.

÷என்னதான் லேட்டா வந்தாலும் அலி பரீச்சையில முதல் மார்க்கு வாங்குறான். இதனால, அவனுக்கு ஒரு பேனா பரிசாக் கிடைக்குது. அத தங்கச்சிக்கு கொடுத்து சந்தோஷப்படுறான்.

÷சாராவோட வகுப்புல இருக்கிற இன்னொரு பொண்ணு, சாராவோட தொலஞ்சி போன ஷூவைப் போட்டுருக்கிறா. இதப் பாத்துடுறா சாரா. பள்ளிக்கொடம் விட்டதும் அண்ணணும், தங்கச்சியும் அந்தப் பொண்ணு பின்னாலேயே போறாங்க. அப்பதான் அவங்களுக்கு, அந்தப் பொண்ணோட குடும்பமும் ரொம்பக் கஷ்டப்படுற குடும்பம்தான், தங்களோட குடும்பத்தைவிடவும் மோசமான நெலமையில உள்ள குடும்பம்தான்னு தெரியுது. அதனால, இவகிட்டே ஷூவைத் திருப்பிக் கேட்க வேண்டாம்னு திரும்பி வந்துடுறாங்க.

÷அலி ஒரு நாளு அப்பாவோட டவுனுக்குப் போறான். அப்பா ஒவ்வொரு வீடா படியேறி தோட்ட வேலை கேக்குறதைப் பாக்குறான். தன்னோட அப்பா படுற கஷ்டத்த கண் முன்னால பாத்து ரொம்ப வேதனப்படுறான். இந்த நெலமையில ஷூ பிரச்னைய எப்படி சரி பண்றது? அப்பதான், ஒரு சந்தோஷமான அறிவிப்பு வருது. அது என்னா? ஒரு ஓட்டப் பந்தயம் நடக்கப் போவுது. எல்லா பள்ளிக் கொடத்துப் புள்ளைங்களும் அதுலக் கலந்துக்கிடுவாங்க. அலிக்கு இதுல என்னா சந்தோஷம்னு கேக்குறீங்களா? ஓட்டப் பந்தயத்துல மூனாவதா ஜெயிச்சி வந்தா ஒரு ஜோடி ஷூ பரிசாக் கிடைக்கும். "எப்படியாவது மூனாவது ஆளா வந்துட்டம்னா நமக்கு ஷூ கிடைக்கும். அத நாம தங்கச்சிக்குக் கொடுத்துடலாமே'ன்னு ஆர்வமா போட்டில கலந்துக்குறான்.

÷போட்டி ஆரம்பிக்குது. ஆயிரக்கணக்கான புள்ளைங்க அந்தப் போட்டில கலந்துக்குறாங்க. எப்படியாவது மூனாவது ஆளா வந்து அந்த ஷூவை ஜெயிச்சிடணும்னு ஓடுறான் அலி. வாழ்க்கையில நாம நெனச்சது அப்படியேவா நடக்குது கண்ணுகளா? அலி, எதேச்சையா எல்லாருக்கும் முன்னால ஓடி வந்து முதல் பரிசு ஜெயிச்சிடுறான். இத யாருமே எதிர்பாக்கல.

÷எல்லாரும் அலியப் பாராட்டுறாங்க. போட்டாப் புடிக்கிறாங்க. பெரிய மனுசங்கள்லாம் அலிகிட்டே வந்து கைகுலுக்குறாங்க.  அவனுக்கு முதல் பரிசு கெடைக்குது. ஆனா, இந்த நல்ல பையன் அலி என்னா நெனக்கிறான் தெரியுமா? தனக்கு மூனாவது பரிசு கிடைக்காமப் போச்சேன்னு ரொம்ப துயரப்பட்டு தலையக் குனிஞ்சிக்குறான்.  பேப்பர்காரவுங்க,""ஏ தம்பி, உன்னைப் போட்டா புடிக்கணும். தலையைக் கொஞ்சம் நிமிந்து பாரு!''ன்னு சொல்றாங்க. அலி நிமுந்து பாக்குறான். பாவம், அவனோட கண்ணெல்லாம் கலங்கியிருக்கு. பிஞ்சு மொகம் வாடிக் கெடக்கு!

÷அடுத்த நாளு அந்த அண்ணன் தங்கச்சி ரெண்டு பேருக்கும் அப்பா புது ஷூ வாங்கிட்டு வந்து கொடுக்கிறாரு. ரெண்டு பேரும் சந்தோஷமா பள்ளிக்கொடத்துக்குப் போறாங்க!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com