

மழை உங்கள் எல்லோருக்குமே பிடிக்கும் இல்லையா. லேசான தூறல் என்றாலும், கொட்டும் மழை என்றாலும், கொஞ்சம் நேரம் நனைய வேண்டும் என்று உங்கள் மனது ஏங்கும் அல்லவா! அப்பா, அம்மா திட்டுவாங்களே என்றெல்லாம் கவலைப்படாமல், வாய்ப்பு கிடைத்தால் இயற்கை "ஷவரா'ன மழையில் நனைய எல்லோருமே ஆசைப்படுகிறோம்.
இப்படி நனையும்போது, மழைத்துளி மேலிருந்து வருவதைப் பார்த்திருக்கிறீர்களா? அவை, எப்பொழுதுமே கோள வடிவில் ஒரு பந்து போல் இருப்பது ஏன்? அது ஏன் சதுரமாகவோ, முக்கோணமாகவோ விழுவதில்லை. இதைப் பற்றி யோசித்திருக்கிறோமா?
மழைத்துளியோ, நீர்த்துளியோ பார்ப்பதற்கு கண்ணீர்த்துளிபோல மேலே கூம்பாகவும், கீழே கோளமாகவும் தோற்றமளிக்கிறது. ஒளிப் பிரதிபலிப்பு, புவிஈர்ப்பு விசை, நீர்த்துளி காற்றில் சறுக்கி வருவது ஆகியவற்றால் நமக்கு நீர்த்துளி இந்தக் கூம்பு வடிவில் தெரிகிறது. உண்மையில், மழைத்துளி கோளமாகவே இருக்கிறது.
வாயுவுக்கு இடையில் விழும் நீர்த்துளியின் வடிவம் கிட்டத்தட்ட கோளம்தான். இதிலேயே மிகப் பெரிய துளிகளின் அடிப்பகுதி சற்றுத் தட்டையாக இருக்கலாம்.
ஆனால், பெரிய நீர்த்துளிகள் மற்றவற்றுடன் சேர்ந்து இன்னும் பெரிதாக ஆக முடியாது. காற்றுடன் அவை உரசுவதால் சிதறி சிறிய துளிகளாகப் பிரிந்து விடுகின்றன. பெரிய நீர்த்துளியின் அளவு 6 மி.மீ அல்லது 0.065 மி.மீ. ஆகும். நீர்த்துளிகள் எப்பொழுதுமே மிகக் குறைந்த மேற்பரப்பு சக்தியுடனே இருக்கும்.
கணித வடிவியல் ரீதியில் மற்ற வடிவங்களைக் காட்டிலும் கோளம்தான் குறைவான மேற்பரப்பு உடைய வடிவம். திரவங்களிலும் திரவத்துளிகளிலும் செயல்படும் சக்தியான பரப்பு இழுவிசை, நீர்த்துளியை தனக்குள் பிடித்து வைத்துக்கொள்ள முயற்சிக்கிறது. மத்தியில் உள்ள புள்ளியைச் சுற்றி இந்த பரப்பு இழுவிசை செயல்படுவதால், நீர் மூலக்கூறுகள் ஒவ்வொன்றும் அதை நோக்கி இழுக்கப்படுகின்றன.
மையப் புள்ளியை நோக்கிய ஈர்ப்பு விசை எல்லா திசைகளிலும் சமஅளவில் செயல்படுவதால், நீர்த்துளி கோள வடிவம் பெறுகிறது. வெளிச் சக்திகள் எதுவும் பாதிக்காத நிலையில், நீர்த்துளிகள் கோளமாக இருக்கும்.
ஒரு குழாயின் முடிவிலோ, ஒரு பரப்பின் எல்லையிலோ சேரும் நீர்த்துளி கோள வடிவத்தில் விழுகிறது. நீராவி அடர்த்தியாகி நீராக ஆகிய பின் கீழே விழும்போதும் இப்படித்தான் விழுகிறது. மழையில் இதுதான் நடக்கிறது.
உலகிலுள்ள கோள்கள் அனைத்தும்கூட கிட்டத்தட்ட கோள வடிவில்தான் உள்ளன. அவை நிரந்தரமாக, நிலைத்து இருப்பதற்கு இந்தக் கோள வடிவமே காரணம் என்கிறார்கள் அறிவியலாளர்கள்.
பூமி, கோள வடிவமாக இருப்பதற்குக் காரணம் அதன் மையத்தில் செயல்படும் புவியீர்ப்பு விசைதான்.
தமிழகத்திற்கு நீர்வளத்தைக் கொண்டு வந்து சேர்க்கும் வடகிழக்குப் பருவ மழை விரைவில் வரப் போகிறது. வாருங்கள் அதில் நனைவோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.