
சீனா, ஆசியாக் கண்டத்தில் உள்ள குடியரசு நாடு. இது உலகிலேயே மக்கள் தொகை அதிகமாகக் கொண்ட நாடு. சீனாவில் 1,33,86,12,968 பேர் வாழ்கிறார்கள். இந்த நாடு 95,98,094 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டது. சீனாவின் தலைநகரம் பீஜிங். இங்கு "யென்' எனும் நாணயம் பயன்படுத்தப்படுகிறது. சீனாவின் எல்லைகளாக வடகிழக்கில் வடகொரியா, வடக்கில் மங்கோலியா, மேற்கில் முன்னாள் சோவியத் ரஷ்யா, தெற்கில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா, நேபாளம், பூட்டான், மியான்மர் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் உள்ளன.
புத்தம், தாவோயிசம் ஆகிய மதங்களை முக்கிய மதங்களாகக் கொண்ட சீனாவில், மண்டரின்
எனப்படும் சீன மொழியே ஆட்சிமொழியாக உள்ளது. இங்குள்ள சீனப் பெருஞ்சுவர் உலக அதிசயங்களில் ஒன்றாக விளங்குகிறது. இதன் நீளம் 8,851.5 கிலோ மீட்டர். சீனாவின் மக்கள் விடுதலைப் படையே உலகின் மிகப் பெரிய ராணுவம். ஷாங்காய், டியன்ஜின் ஆகியவை சீனாவின் முக்கிய நகரங்கள். யாங்ட்சே, ஹுவாங்ஹோ (மஞ்சள் நதி), லிஜியாங் ஆகியன முக்கிய நதிகள். மஞ்சள் நதியில் சில நேரங்களில் ஏற்படும் வெள்ளப் பெருக்கு, பயிர்களையும் வீடுகளையும் நாசம் செய்கிறது. இதனால், மஞ்சள் நதி "சீனாவின் துயரம்' எனப்படுகிறது.
உலகப் புகழ் பெற்ற சீனத் தத்துவ ஞானி கன்ஃபியூஷியஸ், சீனாவைச் சேர்ந்தவர். இவரது போதனைகள் "நான்கு புத்தகங்கள்' எனும் தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன. சீனா மீது ஆதிக்கம் செலுத்திய ஜப்பான், இரண்டாம் உலகப்போரின் முடிவில் வீழ்ந்தது. கி.பி. 1949, அக்டோபர் 1-இல் மாசேதுங், சீன மக்கள் குடியரசை அமைத்தார். இத்துடன் சீனா, கம்யூனிச நாடாக மாறியது. சீனாவின் தற்போதைய அதிபர் ஹு ஜிந்தாவோ. பிரதமர் வென்ஜியாபோ. சீனாவின் தினாமன் சதுக்கம் உலகப் புகழ் பெற்றது. இங்கு ஒரே நேரத்தில் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் அமரமுடியும். சீன மக்களின் முக்கிய உணவுகள், நூடுல்ஸ், கேக், சோயா குழம்பு, நத்தை மற்றும் பாம்பு இறைச்சி, கருவாடு, முட்டைகோஸ், வெங்காயக் கூட்டு ஆகியவையாகும். சீன மக்கள் விரும்பிப் பருகும் ஒரு பானம் தேனீர்.
சீனாவின் தேசிய விலங்கு சீன டிராகன். ஐந்து இதழ்கள்கொண்ட, மலர்ந்த பிளம் மலர்தான் சீனாவின் தேசிய மலர். மே தினம், லாந்தர் பெஸ்டிவல், பீஜிங் வாத்து எனும் உணவுத்திருவிழா இறந்தவர்களுக்கான "சிங்மிங்' எனும் விழா, ஷாங்காய் படகுத் திருவிழா ஆகியவை சீனாவின் முக்கிய விழாக்கள் ஆகும். முக்கிய விளை பொருட்கள், அரிசி, சோயா, தேயிலை, கோதுமை ஆகியவை. திசை காட்டும் கருவி, வெடி மருந்து, மூங்கிலிலிருந்து காகிதம் தயாரிப்பது, அச்சிடுதல் ஆகியவற்றை முதலில் அறிமுகப்படுத்திய பெருமை சீனாவிற்கு உண்டு.
சீனத்துப் பெண்கள் "சியாங்சம்' என்ற அழகிய பாரம்பரியமான ஆடைகளை அணிகிறார்கள். ஆண்கள் "சியாங்சன்', "குங்ஃபூ' ஆடைகளை அணிகிறார்கள். 2008-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி சீனத் தலைநகர் பீஜிங்கில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் சீனா, 51 தங்கப் பதக்கங்களையும், 21 வெள்ளிப் பதக்கங்களையும், 28 வெண்கலப் பதக்கங்களையும் பெற்று முதலிடம் வகித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.