உலக அதிசயங்கள் ஏழு

வகுப்பறையில் ஆசிரியை கேட்டார்கள்: ""உலக அதிசயங்கள் ஏழு இருக்கின்றன என்று உங்களுக்கு எல்லாம் தெரியும். உங்களைப் பொறுத்தவரை உலக அதிசயங்கள் என்பது என்ன?'' ஆசிரியையின் கேள்வி செல்வியைச் சிந்திக்க வைத்தது.
உலக அதிசயங்கள் ஏழு
Published on
Updated on
2 min read

வகுப்பறையில் ஆசிரியை கேட்டார்கள்: ""உலக அதிசயங்கள் ஏழு இருக்கின்றன என்று உங்களுக்கு எல்லாம் தெரியும். உங்களைப் பொறுத்தவரை உலக அதிசயங்கள் என்பது என்ன?'' ஆசிரியையின் கேள்வி செல்வியைச் சிந்திக்க வைத்தது. வகுப்பிலிருந்த மற்றவர்களும் ஆசிரியையின் கேள்விக்கான பதிலை யோசித்தார்கள். யார் முதலில் பதில் சொல்லப் போகிறார்கள் என்று ஆர்வத்துடன் காத்திருந்தார் ஆசிரியை. செல்விதான் முதலில் எழுந்தாள்.

""மனிதர்களால் பார்க்கமுடிவதுதான் டீச்சர் முதல் அதிசயம். நாம் எவ்வளவு அற்புதமான காட்சிகளைப் பார்க்கிறோம். அந்தக் காட்சிகள் நமக்கு எவ்வளவு ஆனந்தம் தருகின்றன! எவ்வளவு நிறங்களை, மனிதர்களை, இயற்கைக் காட்சிகளை, நிகழ்ச்சிகளை நாம் பார்க்கிறோம். மனிதனுக்குப் பார்க்கக்கூடிய திறமை அமைந்திருப்பதே ஒரு அதிசயம்தான். நமக்கு இன்றியமையாத பார்வையைத் தரும் கண்களை நாம் நன்கு பராமரிக்க வேண்டும்.''

""அடுத்த  இரண்டாவது அதிசயம், கேட்க முடிவதுதான் டீச்சர். மனிதர்கள் தங்கள் காதுகளால் எவ்வளவு அரிய விஷயங்களைக் கேட்கிறார்கள். நல்ல இசை, ஆன்றோர்களின் பேச்சுக்கள், இனிய வார்த்தைகள் இவற்றையெல்லாம் கேட்டு இன்புறுவதற்கு இணையாக எதைச் சொல்ல முடியும்? நாம் கேட்கும் திறமையுடன் இருப்பதே வியப்பளிக்கும் உண்மைதான் டீச்சர். நம் காதுகள் நமக்குக் கிடைத்த வரங்கள்தான்.''

""நம்மால் தொட்டு உணர முடிவதுதான் மூன்றாவது அதிசயம். மனதிற்கு இனியவர்களை, மலர்களை, மழலைச் செல்வங்களை, மற்ற எண்ணற்றவையை நாம் தொட்டுணர்ந்து அனுபவிக்கின்றோமே, அதற்கு நிகராக என்ன இருக்கிறது? தொட்டுத்தானே நாம் வீணையை மீட்டுகிறோம். தீண்டுவதன் மூலமாகத்தானே நாம் நம் அன்பை வெளிப்படுத்துகிறோம்! பார்வையற்றவர்கள்கூட தொடு உணர்வின் மூலமாகக் கல்வி பயின்று மேல் நிலையை அடைகிறார்களே!''

""மனிதனால் சுவையை அனுபவிக்க முடிவதுதான் நான்காவது அதிசயம். எவ்வளவு உணவு வகைகள்! எத்தனை பானங்கள்! அத்தனையையும் நாம் சுவைத்து மகிழ்கிறோமே! நினைத்துப் பாருங்கள், இது எவ்வளவு பெரிய நன்மை! சுவையை அனுபவிக்க முடியாமல் நாம் வாழ்ந்துவிட முடியுமா? முடியவே முடியாதல்லவா? மனிதன் வாழ உணவு தேவை. அந்த உணவோ பற்பல அருஞ்சுவைகள் நிறைந்தவை. எனவே இவற்றைப் பகுத்து அறியும் தகுதி பெரிய தகுதிதான்!''

""அறிவைப் பயன்படுத்தி புரிந்துகொள்ள முடிவதே ஐந்தாவது அதிசயம். இன்றைக்கு உலகம் எவ்வளவோ முன்னேறிவிட்டது. கல்வியும், தொழில் துறைகளும் மிகவும் வளர்ந்துவிட்டன. மனித உறவுகளும் பலப்பல பரிமாணங்கள் வாய்ந்தவையாக உள்ளன. இவை எல்லாவற்றோடும் சேர்த்து, வாழ்க்கை என்ற பிரமாண்டத்தை நாம் புரிந்துகொண்டு வாழ்கிறோமே, இது எவ்வளவு பெரிய தகுதி. ஒவ்வொரு நுட்பமான விஷயத்தையும் நாம் புரிந்துகொள்ளும் அறிவாற்றல் ஒரு அதிசயம்தான்.''

""ஆறாவது அதிசயம், நாம் சிரிக்க முடிவது! உயிரினங்களில் மனிதனுக்கு மட்டும்தானே சிரிக்கக்கூடிய திறமை இருக்கிறது! சிரிக்கும்போதுதான் மனிதர்கள் மிகவும் அழகாக இருக்கிறார்கள்! சிரிப்பது உடல் நலத்திற்கும், மன நலத்திற்கும் ஏற்றது. மனம் திறந்து வெளிப்படையாக சிரித்து மகிழ்வது நம் ஆயுளை அதிகரிக்கும். துன்பம் வரும்போதும் அதை சிரித்து வெல்ல வேண்டும் என்றுதானே வள்ளுவப் பெருந்தகை சொல்கிறார்!''

""அதிசயத்தில் எல்லாம் தலைசிறந்த அதிசயம் நம்மால் அன்பு செலுத்த முடிவதுதான். இதுதான் ஏழாவது அதிசயம். அன்பு இல்லாமல் இந்த உலகம் இயங்காதுதானே டீச்சர்? அன்புதான் கடவுள் என்று சொல்கிறார்களே! ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தி வாழ்வதே உயர்ந்த வாழ்க்கை! பிறரை நேசிக்க முடியும் தன்மையே மிகப்பெரிய அதிசயம்.'' செல்வி சொன்ன ஏழு அதிசயங்களையும் எல்லோரும் ஏற்றுக்கொண்டார்கள். ஆசிரியை, செல்வியை மிகவும் பாராட்டினார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com