நாடுகளறிவோம் - 1

இந்தியா தெற்காசியாவில் உள்ள பெரிய குடியரசு நாடுகளில் ஒன்றாகும். இந்தியா என்ற பெயர் சிந்து நதியை ஒட்டிய கலாசாரத்திலிருந்து பெறப்பட்டதாகும். இந்தியா, பாரதமென்றும் அழைக்கப்படுகிறது. ÷பரப்பளவில் இந்தியா உ
நாடுகளறிவோம் - 1
Published on
Updated on
2 min read

இந்தியா தெற்காசியாவில் உள்ள பெரிய குடியரசு நாடுகளில் ஒன்றாகும். இந்தியா என்ற பெயர் சிந்து நதியை ஒட்டிய கலாசாரத்திலிருந்து பெறப்பட்டதாகும். இந்தியா, பாரதமென்றும் அழைக்கப்படுகிறது.

÷பரப்பளவில் இந்தியா உலகின் ஏழாவது பெரிய நாடாகும். இந்தியாவின் மொத்த நிலப்பரப்பு 3,287,590 சதுர கிலோ மீட்டர் ஆகும். இந்தியா மொத்தம் 7,000 கிலோ மீட்டர் நீளமுள்ள கடல் எல்லையைக் கொண்டது.

÷இந்தியா- வங்காளதேசம், மியான்மர், சீனா, பூடான், நேபாளம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் தன் எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது. இலங்கை, மாலத்தீவு ஆகிய தீவுகள் அடங்கிய வங்காள விரிகுடாவைக் கிழக்கிலும், மேற்கில் அரபிக்கடலையும், தெற்கில் இந்தியப் பெருங்கடலையும் கொண்ட தீபகற்பமாக இந்தியா விளங்குகிறது.

÷இந்து சமயம், புத்தம், சமணம், சீக்கியம் என்னும் பெருமதங்களின் தோற்றுவாயாக இந்தியா விளங்குகிறது. வேறு எந்தக் கலாசாரத்தையும், வரலாற்றையும்விட இந்தியக் கலாசாரமும், வரலாறும் மிகப் பழமையானதாகும்.

÷பண்டைய நாகரிகங்கள் பல இந்தியாவிலேயே தோன்றியவை. சிந்துசமவெளி நாகரிகம் ஹரப்பா, மொகஞ்சதாரோ ஆகியன இவற்றுள் அடங்கும்.

÷சுமார் நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழைய கற்காலத்தைச் சேர்ந்த பாறை ஓவிய மரபு மத்திய இந்தியாவில் பிம்பேடகாவிலும், மற்றும் சில இடங்களிலும் கண்டறியப்பட்டுள்ளது. ÷கி.மு.1500 அளவில் வடமேற்கு திசையில் இருந்து வந்த ஆரிய இனக் குழுக்கள் சிந்துசமவெளி நாகரிகத்துடன் கலந்து வேதகால பண்பாடு உருவானதாகக் கருதப்படுகிறது.

÷ஆனால், சிந்துசமவெளி நாகரிகத்தினரும், தமிழ்ச் சங்க இலக்கியம் உரைக்கும், மூழ்கிய குமரிக்கண்டத்தைச் சேர்ந்த தென்னகத்தினரும், இந்தியாவின் பூர்வ குடிமக்களாக அறியப்படுகின்றனர்.

÷கி.பி.மூன்றாம் நூற்றாண்டில் தொடங்கிய குப்தர்கள் காலம் இந்தியாவின் பொற்காலமாகும். சேர, சோழ, பாண்டிய, பல்லவ, சாளுக்கிய, கடம்பப் பேரரசுகள் இந்தியாவை பல்வேறு காலகட்டங்களில் ஆண்டுள்ளன.

÷மேலும், அராபியர் வருகை எட்டாம் நூற்றாண்டில் தொடங்கியது. துருக்கியர் 12-ம் நூற்றாண்டில் வரத் தொடங்கினர். இவற்றைத் தொடர்ந்து ஐரோப்பிய வர்த்தகர்கள் 15-ம் நூற்றாண்டின் இறுதியில் இந்தியா வந்தனர்.

÷கி.பி.19-ம் நூற்றாண்டில் ஏறத்தாழ இந்தியாவின் முழு அரசியல் கட்டுப்பாடும் ஆங்கிலேயரிடம் சென்றது. பல்வேறு தீவிரவாத, மிதவாத குழுக்களும் இந்திய சுதந்திரத்திற்காகப் போராடினர். இறுதியில், 1947 ஆகஸ்ட் 15-ம் தேதி மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் தலைமையில் வன்முறையற்ற அகிம்சை போராட்டம் வெற்றி பெற்று இந்தியா, ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றது. மேலும், 1950 ஜனவரி 26-ம் தேதி குடியரசாக மலர்ந்தது.

÷இந்தியாவில் மொத்தம் 28 மாநிலங்களும், 7 யூனியன் பிரதேசங்களும் உள்ளன.

÷சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக ராஜேந்திர பிரசாத்தும், முதல் பிரதமராக ஜவஹர்லால் நேருவும் பதவி வகித்தனர்.

÷இந்தியாவின் தலைநகர் புதுதில்லியாகும். 2005-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 1,080,264,338 பேர் வாழ்வதாகத் தெரிகிறது.

÷இந்தியாவில் "ரூபாய்' எனும் நாணய முறை வழக்கில் உள்ளது.

÷இந்தியாவின் தற்போதைய குடியரசுத்தலைவராக பிரதீபா பாட்டிலும், பிரதமராக மன்மோகன் சிங்கும் பதவி வகித்து வருகின்றனர். பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான கூட்டணி அரசு இந்தியாவை ஆண்டு வருகிறது.

÷இந்தி, ஆங்கிலம், தமிழ், மலையாளம், கன்னடம், உருது, தெலுங்கு உள்ளிட்ட இருபத்திரண்டு மொழிகள் இந்தியாவில் பேசப்படுகின்றன.

÷இந்தியாவின் தேசிய விலங்கு புலியாகும். தேசிய பறவை மயில். தேசிய மரமாக ஆலமரம் உள்ளது.

÷காவி, பச்சை மற்றும் தூய வெண்மை  என மூவர்ணத்தின் நடுவே அசோக சக்கரம் பொருந்திய கொடியானது இந்தியத் தேசியக் கொடியாக உள்ளது.

÷இந்தியாவின் கலாசார ஆடையாக வேட்டி, சேலை, குர்தா, சல்வார் கமிஸ் போன்ற ஆடைகளை  மக்கள் அணிகின்றனர்.

÷இந்தியாவில் பொங்கல், தீபாவளி, நவராத்திரி, ஓணம் போன்ற பண்டிகைகள் சிறப்புற கொண்டாடப்படுகின்றன.

÷கர்நாடக, இந்துஸ்தானி மற்றும் தமிழிசையும் இந்தியாவின் முக்கிய இசை மரபாக உள்ளது.

÷பரத நாட்டியம், ஒடிசி, குச்சிபுடி, கதகளி, கரகாட்டம், ஒயிலாட்டம் போன்ற நடனங்கள் இந்தியாவின் நடனகலையின் சிறப்பை உலகுக்கு பறைசாற்றுகின்றன.

÷உலகின் மிகப் பழமையான நூல்களான தொல்காப்பியமும், ரிக்வேதமும் இந்தியாவில் தோன்றியவையாகும்.

÷அரிசியும், கோதுமையும் இந்திய உணவுப் பொருட்களில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பருத்தி, கரும்பு, சணல், தேயிலை, உருளைக்கிழங்கு ஆகியவை இந்தியாவின் முக்கிய விளை பொருட்களாகும்.

÷இந்தியாவின் தேசிய விளையாட்டாக "ஹாக்கி' விளையாடப்படுகிறது.

÷உலகிலேயே முதன்முதலில் பூஜியத்தைப் பயன்படுத்திய பெருமை இந்தியாவிற்கு உண்டு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com