
ர ஷ்யா, நிலப் பரப்பளவில் உலகிலேயே மிகப் பெரிய நாடாகும். இந்த நாட்டின் மொத்த நிலப் பரப்பு 17,075,200 சதுர கிலோ மீட்டர்கள் ஆகும். மேலும், மக்கள் தொகையின் அடிப்படையில் இது உலகின் எட்டாவது பெரிய நாடு. 143 முதல் 145 மில்லியன் வரையிலான மக்கள் தொகை இங்கு உள்ளது. ஏறத்தாழ, வட ஆசியா முழுவதையும் மற்றும் ஐரோப்பாவின் 40 சதவீத நிலப்பரப்பையும் தன்னகத்தே உள்ளடக்கிய நாடு. இது, உலகிலேயே அதிகமான வன வளத்தைக் கொண்ட நாடாகும்.
÷ரஷ்யா மேற்கிலிருந்து தென்கிழக்கு முகமாக நார்வே, பின்லாந்து, எஸ்தோனியா, லாத்வியா, லித்துவேனியா,போலந்து, பெலாரஸ், உக்ரைன், ஜார்ஜியா, அசர்பைஜான், கசகிஸ்தான், சீனா, மங்கோலியா, சைபீரியா, ஆகிய நாடுகளை எல்லைகளாகக் கொண்டுள்ளது.
÷ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோ. இங்கு பயன்பாட்டில் உள்ள நாணயத்தின் பெயர் "ரூபிள்'. முதன்மை மொழி ரஷ்ய மொழி. உக்ரேனியம்,பெலோ ரஷ்யன், எஸ்தேனியம், லாத்வியம், லித்வேனியம், மல்தோவியம், ஜார்ஜியம், ஆர்மேனியம், அசர்பைஜானி, கசாக், உஸ்பெக், துருக்மென், கிர்கீசு, தாஜிக் போன்ற மொழிகள் துணை மொழிகள்.
÷முக்கிய தானியங்களாக ரை, கோதுமை, பார்லி, ஓட்ஸ் ஆகியவை விளைவிக்கப்படுகின்றன. எண்ணெய் தயாரிப்பிற்காக சூரியகாந்தி வித்துக்கள் பெருமளவில் விளைவிக்கப்படுகின்றன. முக்கியப் பண்டிகைகளாக பஸ்காவும், புத்தாண்டுப் பிறப்பும் கொண்டாடப்படுகிறது.
÷ரஷ்யப் பெண்கள், கழுத்து முதல் கால்வரை வரும் "சரபான்' எனும் நீளமான ஆடையையும், அதற்குப் பொருத்தமாக "கொகொஷ்னிக்' எனும் அழகான தலைப் பாகையையும் அணிகிறார்கள். ஆண்கள், "கொசொவோரோட்கா' எனும் நீள் கைகளை உடைய சட்டையையும், "உசஹங்க' என்கிற பனிக்குல்லாவையும் அணிகிறார்கள். இவை அந்த நாட்டின் கலாச்சார ஆடைகளாகும்.
÷தேசிய மிருகம் ரஷ்யக் கரடி. இரட்டைத் தலை கழுகு தேசியச் சின்னம். பரவலாகக் காணப்படும் பிர்ச் மரம் ரஷ்யாவின் தேசிய மரம். ÷ரஷ்யாவின் கடைசி ஜார் மன்னன் இரண்டாம் நிக்கோலசின் கொடுங்கோல் ஆட்சி, 1917 -ம் ஆண்டு நவம்பர் மாதம் விளாதிமிர் லெனினால் அகற்றப்பட்டது. 1917-லிருந்து 1922-ம் ஆண்டு வரை ரஷ்யா, சோவியத் சோஷலிஸ்ட் கூட்டாட்சிக் குடியரசு என்ற சுதந்திர நாடாக இருந்தது.
பின்னர், 1922 டிசம்பர் 30-இல் பதினைந்து குடியரசுகளை உள்ளடக்கி சோவியத் ஒன்றியம் என்ற, உலகின் முதல் மற்றும் பெரிய ஜனநாயக சோஷலிச நாடாக உருவெடுத்தது. சோவியத் ஒன்றியத்தின் முதல் பிரதமர் விளாதிமிர் லெனின். கடைசி பிரதமர் இவான் சிலாயெவ். சோவியத் ஒன்றியத்தின் முதல் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின். கடைசி பொதுச் செயலாளர் மிகையில் கோர்ப்பச்சேவ்.
1991 டிசம்பர் 21 அன்று அல்மா ஆட்டா என்ற இடத்தில் கூடிய முன்னாள் சோவியத் கூட்டாட்சி நாடுகள், சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதாக அறிவித்தன. சோவியத் கூட்டாட்சி பல நாடுகளாகச் சிதறுண்டது.
÷ஸ்புட்னிக் எனும், உலகின் முதல் செயற்கைக்கோளை விண்ணில் ஏவிய பெருமை சோவியத் ரஷ்யாவிற்கு உண்டு. சோவியத் விண்வெளி வீரரான யூரி ககாரின், வோஸ்டாக் என்ற ரஷ்ய விண்வெளி ஓடத்தில், உலகிலேயே முதல் முறையாக புவி வட்டப் பாதையில் பயணம் செய்து தன் நாட்டிற்குப் பெருமை சேர்த்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.