

சார்லி சாப்ளின்:
÷1889-ஆம் ஆண்டு லண்டன் மாநகரத்தில் ஹன்னா எனும் ஒரு ஏழைப் பாடகிக்கு மகனாகப் பிறந்தவர் சார்லி சாப்ளின். அவருடன் பிறந்தவர் ஒரே ஒரு அண்ணன்தான். அவர் பெயர் சிட்னி சாப்ளின். தந்தை சார்லஸ் சிறுவயதிலேயே குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார். பிறகு, மிகவும் பாடுபட்டு ஹன்னா தன் குழந்தைகளை வளர்த்தாள். வீடில்லாமல் வீதியோரங்களில் வசிக்கும் அளவுக்கு வறுமையால் அவர்கள் துன்பப்பட்டார்கள். இதனால், பாடப் புத்தகம் சுமக்கும் வயதிலேயே சாப்ளின் குடும்ப பாரத்தைச் சுமந்தார். பேப்பர் போடும் பையனாக வேலை செய்தார். என்றைக்காவது ஒருநாள் அம்மாவை நல்ல முறையில் வாழ வைக்கவாவது, தான் பெரிய நடிகனாக வேண்டும் என்று கனவு கண்டார் சாப்ளின்.
÷எனவே, அவர் நாடகக் குழுக்களில் சேர்ந்தார். சிறு வயதில் தான் தெருக்களில் பார்த்த எத்தனையோ மனிதர்களை கதா பாத்திரங்களாக மாற்றி அவர்கள்போல நடித்தார். பெரும் பாராட்டு குவிந்தது. பதினாறாம் வயதில் நாடகக் குழுவுடன் அமெரிக்காவிற்குச் சென்றார். அங்கு சினிமா வாய்ப்பு வந்தது. நடிக்கப் போனவர் சினிமாவை இயக்கவும் தொடங்கினார். "ட்ராம்ப்' எனும் நாடோடிக் கதாபாத்திரத்தை உருவாக்கி தானே நடித்தார்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும், அவரது நடிப்பைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தனர். குறுகிய காலத்திலேயே மிகப் பெரிய சினிமா நட்சத்திரமாக உயர்ந்தார். பெரும் பணக்காரரானார். தான் ஆசைப்பட்டதுபோலவே, தன் அம்மாவை மிகவும் போற்றிக் காத்தார். அமெரிக்க அரசாங்கம் அவரது இறுதிக் காலத்தில் ஆஸ்கார் விருது கொடுத்து கெüரவித்தது. உலகின் மிகப் பெரும் சினிமா மேதையான சாப்ளின் 1977-ம் ஆண்டு மறைந்தார்.
÷ஒரு அம்மா ஆஸ்பத்திரிலேர்ந்து கைக் கொழந்தயோட வெளியே வர்றாங்க. பாவம், அவங்களுக்கு எங்க போறதுன்னு தெரியல. என்னா பிரச்சனைன்னா, அந்தக் கொழந்தைக்கு அதோட அப்பாவின் ஆதரவு இல்ல. இனி இந்தக் கொழந்தய நாம வச்சிருக்க முடியாதுன்னு அந்த அம்மா நெனக்கிறாங்க.
÷அப்ப, வழில ஒரு ஜீப் நிக்குது. அந்த வண்டியைப் பாத்தா பணக்காரங்களோட வண்டி மாதிரித் தெரியுது. அதனால, அந்த அம்மா என்னா செய்யிறாங்க, "என்னோட கொழந்த பணக்கார வீட்டுலேயே வளரட்டும்' அப்புடின்னு நெனச்சிக்கிட்டு, கொழந்தய அந்த வண்டிக்குள்ள வச்சிட்டுப் போயிடுறாங்க. மனசு கேக்கலதான்.
ஆனாலும் என்னா செய்யிறது, வேற வழி தெரியலையே.
÷அப்புறம் என்னா நடக்குது தெரியுமா? அந்த வண்டிய ரெண்டு திருட்டுப் பயலுவோ ஓட்டிக்கிட்டுப் போறானுக. வண்டிய நிறுத்துன அப்பொறந்தான் ஒரு கொழந்த அழுவுற சத்தம் கேக்குது. அறிவுகெட்டவனுங்க என்னா பண்ணிட்டாங்கன்னா, அப்புடியே கொழந்தய எடுத்து ஒரு குப்பத் தொட்டில போட்டுட்டுப் போயிடுறாங்க.
அப்பதான், அழுக்குச் சட்டையோட வர்றான் கண்ணாடி ரிப்பேர் பண்ற ஒருத்தன். அது வேற யாருமில்ல, நம்ம சார்லி சாப்ளின்தான். அவருக்கு சொந்த பந்தம்னு வேற யாருமில்ல. அவரு ஒரு அனாத. அதனால, இந்தக் கொழந்தயும் இன்னொரு அனாதையா ஆயிடக் கூடாதுன்னு அதத் தூக்கிக்கிட்டு வீட்டுக்கு வந்துடறாரு.
÷ஒரு சின்ன ரூம்பு. அந்த ரூம்புக்குள்ளாற கொஞ்சமா சாமாஞ்செட்டுக. சாப்ளினோட சொத்து இவ்ளோதான். ஆனாக்கா பாருங்க, அவரு அந்தக் கொழந்தய நல்லா வளக்குறாரு. கொழந்தைக்கு அஞ்சு வயசாவுது. பச்சப் புள்ளயா இருந்தவன் இப்ப குட்டிப் பையனாயிட்டான்.
நீங்களே அவனப் பாத்தா, "அட, பய நல்லா ஓட்டஞ்சாட்டமா இருக்குறானே, இவங்கூட சேந்து வெளயாடலாமே' அப்புடின்னு நெனப்பீங்க.
÷இப்ப அந்தக் குட்டிப் பையனுக்கு என்ன வேலை தெரியுமா? காலையில தூங்கி முழிச்சதும் சாப்ளின் கிட்டே "இன்னைக்கு எந்தத் தெரு' அப்புடின்னு கேப்பான். சாப்ளினும் இன்ன தெருதான்னு ஒரு தெருவோட பேரைச் சொல்லுவாரு. குட்டிப் பையன் ஒடனே வீட்ட விட்டு வெளிய வந்து அஞ்சாறு கல்லுகள எடுத்து பாக்கெட்டுல போட்டுக்குவான். சாப்ளின் சொன்ன தெருவுல எந்த வீட்டுச் சன்னல் கண்ணாடி பளபளன்னு இருக்குதோ, அந்தக் கண்ணாடியக் குறிபாத்து கல்லால அடிச்சிட்டு ஒரே ஓட்டமா ஓடியாந்துடுவான்.
வீட்டுக்காரவுங்க வெளில வந்து பாத்துட்டு "அடடா, நல்லாருந்த கண்ணாடி இப்புடி ஆயிருச்சே' அப்புடின்னு வருத்தப்படுவாங்க. அந்த நேரம் பாத்து சாப்ளின் கண்ணாடி ரிப்பேர் பண்றவரா அங்க போவாரு. வீட்டுக்காரவுங்க,"அய்யா, நீ சரியான நேரத்துலதான் வந்துருக்க. இந்த சன்னலுக்கு புது கண்ணாடி போட்டுட்டுப் போ' அப்புடீன்னு சொல்லுவாங்க. சாப்ளினும் கண்ணாடி மாட்டிட்டு காசு வாங்கிட்டு வருவாரு.
÷இப்புடித்தான் தெனமும் அவங்க சம்பாதிச்சி காலத்தத் தள்ளுனாங்க. இந்தக் குட்டிப் பையன், நல்லாருக்குற சன்னல கல்லால ஒடக்கிற சங்கதி ஒரு போலீஸ்காரருக்குத் தெரிஞ்சுபோச்சு. அவரு அவனப் புடிக்கிறதுக்குத் தொரத்துறாரு. பையன் சிட்டாப் பறந்துட்டான். போலீஸ்காரரால அவனப் புடிக்க முடியல.
÷குட்டிப் பையனும், சாப்ளினும் ஒருத்தர் மேல ஒருத்தர் ரொம்ப நேசபாசமா இருந்தாங்க. பையனுக்கு ஏதாச்சும் ஆச்சின்னா சாப்ளின் ரொம்பத் துடிச்சுப் போயிடுவாரு. அந்த மாதிரி சாப்ளினுக்கு ஏதாச்சும் ஒடம்பு கிடம்பு முடியாமப் போச்சுன்னா, குட்டிப் பையன் அவர ரொம்ப நல்லா பாத்துக்கிடுவான். அவருக்கு ரொட்டி சுட்டுத் தருவான். சுடு தண்ணி வச்சுத் தருவான். இப்புடி அவனும், சாப்ளினும் ரொம்ப சந்தோஷமா இருக்குறாங்க.
÷இதுக்கு நடுவுல, அந்தப் பையனோட அம்மா இப்ப பெரிய சினிமா நடிகையா ஆயிடறாங்க. பெரிய பணக்காரங்களா ஆயிடறாங்க. ஆனாலும் தான் பெத்த புள்ள இல்லாம அவங்களால நிம்மதியா இருக்க முடியல. "எங் கொழந்தய கண்டு புடிச்சிக் கொடுங்க போலீசு' அப்புடின்னு போலீஸ்ல புகார் கொடுக்குறாங்க.
÷"எங்கருக்கான் அந்தக் குட்டிப் பயல்?' அப்புடின்னு போலீஸ் அரக்கப் பறக்கத் தேடுது. பேப்பருலேயும் அறிவிப்புக் கொடுக்குறாங்க.
÷குட்டிப் பையனுக்கு ஒரு நாளு ஒடம்பு சரியில்லாமப் போயிடுது. வீட்டுக்கு வந்து வைத்தியம் பாக்குற டாக்டருக்கு, அந்தப் பையன் சாப்ளினோட பையன் இல்லைன்னு தெரிஞ்சு போவுது. வாய வச்சிக்கிட்டு சும்மா இருக்காம டாக்டரு போயி போலீஸýகிட்டே சொல்லிடுறாரு.
÷போலீஸ் அதிகாரிங்க சும்மா இருப்பாங்களா. அவங்க ஒடனே பாஞ்சி வந்து குட்டிப் பையன சாப்ளின் கிட்டேயிருந்து பிரிச்சிக் கூட்டிட்டுப் போறாங்க. அவங்க கிட்டேர்ந்து பையனக் காப்பாத்த சாப்ளின் ரொம்பப் போராடறாரு. அவரால முடியல. கடைசியில நடிகைக்குத் தகவல் தெரிஞ்சி, அவங்க போலீஸ் ஸ்டேஷனுக்கு வர்றாங்க. பையன கட்டிப் புடிச்சி அழுவுறாங்க. அப்புறம் என்னா ஆவுது? சாப்ளின் மறுபடியும் அனாத ஆயிடறாரு.
÷ஒரு நாளு சாப்ளின் தன்னோட வீட்டுல தனியா இருக்குறாரு. அப்ப போலீஸ் வந்து கதவத் தட்டுது. அவர ஒரு பணக்கார வீட்டுக்கு கூட்டிட்டுப் போவுது. அங்க, சாப்ளின் கதவத் தொறக்குறாரு. அப்ப...
÷அந்தக் குட்டிப் பையன் ஓடி வந்து சாப்ளின அப்புடியே கட்டிப் புடிச்சிக்குறான். சாப்ளின் அப்புறம் அவங்க கூடவே சந்தோஷமா வாழுறாரு.
÷புள்ளைங்களா,இந்தப் படத்தோட பேரு "தி கிட்'. 1921-ல வந்த படம். வாய்ப்புக் கெடச்சா இந்தப் படத்தப் பாருங்க. ரொம்ப ரசிப்பீங்க!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.