சீனமொழி திரைப்படம்: நாட் ஒன் லெஸ்

புள்ளைங்களா, இந்தப் படம் சீன மொழிப் படம். படத்தோட பேரு "நாட் ஒன் லெஸ்'. அப்புடின்னா, "ஒருவர்கூட குறையாமல்'ன்னு அர்த்தம். படத்த டைரக்டு பண்ணுனவரு "சாங் ஈமு' அப்புடிங்கிற டைரக்டரு. ரொம்பப் புகழ்பெற்ற இவ
சீனமொழி திரைப்படம்: நாட் ஒன் லெஸ்
Updated on
3 min read

பு ள்ளைங்களா, இந்தப் படம் சீன மொழிப் படம். படத்தோட பேரு "நாட் ஒன் லெஸ்'. அப்புடின்னா, "ஒருவர்கூட குறையாமல்'ன்னு அர்த்தம். படத்த டைரக்டு பண்ணுனவரு "சாங் ஈமு' அப்புடிங்கிற டைரக்டரு. ரொம்பப் புகழ்பெற்ற இவரு. அந்தக் கத என்னா தெரியுமா..?

÷நம்ப ஆசியாவுல இருக்கிற ரொம்பப் பெரிய நாடு சீனாதாங்கறது ஒங்களுக்கெல்லாம் தெரியுமில்ல. அந்த சீன நாட்டுல ஒரு குட்டி கிராமம். அந்த கிராமத்துல ஒரு குட்டி பள்ளிக்கொடம். அந்த கிராமத்துல இருக்கிற சனங்கள்லாம் ரொம்ப ஏழப்பட்டவங்க. அதனால, பசங்களப் பள்ளிக்கொடத்துக்கு அனுப்பாம, ""போயி ஏதாச்சிம் சம்பாதிச்சிட்டு வாங்கடா பயலுவலா''ன்னு வேலைக்கு அனுப்புறாங்க.

முன்னாடி அந்தப் பள்ளிக்கொடத்துல மொத்தம் அம்பது புள்ளைங்க படிச்சாங்க. இப்ப, இருபத்தெட்டு பேர்தான்! அந்தப் பள்ளிக் கொடத்துக்கு ஒரே ஒரு டீச்சர்தான் இருக்காங்க. அவங்க பேரு "காவோ'. இந்த இருபத்தெட்டு புள்ளைங்களையாவது சிந்தாம செதறாம அப்புடியே வச்சிக்கிட்டு பள்ளிக் கொடத்த நடத்திப்புடணும்னு காவோ டீச்சர் நெனக்கிறாங்க.

÷அப்புடி இருக்கும்போது ஒரு நாளு, காவோ டீச்சருக்கு ஒடம்பு சரியில்லாமப் போயிடுது. அதனால, அவங்க ஊருக்குப் போக வேண்டிய நெருக்கடி வருது. அந்த நெலமையில காவோ டீச்சர், "மின்சி' அப்புடிங்கிற புது டீச்சர்கிட்ட பள்ளிக்கொடத்த ஒப்படைக்கிறாங்க. ஒப்படைச்சிட்டு,""மின்சி டீச்சர், மின்சி டீச்சர், இந்தப் பள்ளிக்கொடத்த      பத்துநாள் மட்டும் பாத்துக்கங்க. நான் ஊருக்குப் போயிட்டு ஓடியாந்துடறேன்.

இப்ப இருக்கிற இருபத்தெட்டு பேர்ல ஒருத்தர்கூட கொறையாமப் பாத்துக்க வேண்டியது ஒங்க பொறுப்பு'' அப்புடின்னாங்க. ÷அந்தப் புது டீச்சர் மின்சிக்கு என்னா வயசு தெரியுமா? பதிமூணு வயசுதான் ஆவுது. அவங்க ஒரு குட்டி டீச்சர். புள்ளைங்கள்லாம் புது டீச்சரைப் பாத்துச்சிங்க. ""என்னாடாது இந்த டீச்சரு இவ்ளோ சின்ன வயசு டீச்சரா இருக்காங்களே! நம்மள ஒண்ணும் செய்யமாட்டாங்க'' அப்புடின்னு ஆட்டம்போட்டுச்சிங்க.

டீச்சருக்கு அடங்காம காக்கரே மூக்கரேன்னு சத்தம் போட்டுச்சிங்க. புள்ளைங்களோட அட்டகாசத்தைத் தாங்க முடியல. மின்சி டீச்சருக்குப் பாடம் நடத்துறதவிட, புள்ளைங்க பள்ளிக்கொடத்தவிட்டு ஓடிடாம பாத்துக்கறதுதான் பெரிய வேலையாப் போயிடுச்சி!

÷அந்தப் புள்ளைங்கள்ல ஒருத்தன் இருக்கான், சுட்டியிலயும் சுட்டி பயங்கரமான சுட்டிப் பயல் அவன். அவன் பேருதான் "சாங்'. கையக் கால வச்சிக்கிட்டு கொஞ்சம் நேரம்  சும்மா இருக்கமாட்டான்.

நீங்களே அவனப் பாத்தாக்கூட, என்ன இந்தப் பயல் சரியான வாலுப் பயலா இருக்கானே! அப்புடின்னு நெனப்பீங்க. அடிக்கடி சாக்பீச ஒடச்சிப்போடுவான். மத்த புள்ளைங்களைப் போட்டு கும்மாங்குத்துக் குத்துவான். பள்ளிக்கொடத்தவிட்டு விருட்டு விருட்டுன்னு வெளியில ஓடிப்போயிடுவான். மின்சி டீச்சரால அவனக் கட்டுப்படுத்தவே முடியல. ஒரு நாளு அவனுக்குத் தண்டனை கொடுக்குறாங்க மின்சி டீச்சர். அடுத்த நாளு அந்த சாங் பயல் பள்ளிக்கொடத்துக்கு வரல.

÷மின்சி டீச்சர் ரொம்ப பயப்படுறாங்க. என்னடாது இப்புடி நடந்துடுச்சே அப்புடின்னு வருத்தப்படுறாங்க. அப்பதான் சாங் பயல் பக்கத்து டவுனுக்கு கூலி வேல செய்ய ஓடிப்போயிட்டான்னு தகவல் வருது.

அப்பதான் மின்சி டீச்சருக்கு, "ஒரு புள்ளகூட  கொறையாம பாத்துக்கங்க'ன்னு காவோ டீச்சர் சொல்லிட்டுப் போனது நெனப்பு வந்துச்சி. நாம தண்டனை கொடுத்ததாலதான் இந்தப் பயல் டவுனுக்கு ஓடிப்போயிட்டான் போலருக்குன்னு மின்சி டீச்சர் கவலப்படுறாங்க.  காவோ டீச்சர் திரும்பி வர்றதுக்குள்ள எப்புடியாவது அந்த சாங் பயல டவுன்லேர்ந்து கூட்டியாந்து பள்ளிக்கொடத்துல சேத்துவுட்டுடணும்னு மின்சி டீச்சர் முடிவு செய்யிறாங்க.

÷ஆனா, டவுனுக்குப் போயிட்டு வர நெறெயப் பணம் செலவாகுமே. அதுக்கு என்னா பண்றது? எப்புடி சமாளிக்கிறது? மின்சி டீச்சர்கிட்டே காசு இல்ல. டீச்சர் ரொம்ப யோசிச்சி மனசு கொழம்புறாங்க. படிக்கிற புள்ளைங்கள்லாம் டீச்சரோட கஷ்டத்தப் பாத்து பரிதாபப்படுறாங்க. அவங்கெல்லாம் மின்சி டீச்சர் கிட்ட சொல்றாங்க,""டீச்சர்... டீச்சர்... சாங் பயல் நமக்கு வேணும் டீச்சர்! எப்புடியாவது அவனக் கூட்டிக்கிட்டு வந்துடுங்க டீச்சர்!''

÷ஆனா, பணத்துக்கு என்னா செய்யிறது? அதுதான் சிக்கல். அப்பதான் பசங்க பணத்துக்கு ஒரு ஐடியா கொடுக்குறாங்க. பக்கத்துல ஒரு செங்கல் சூளை இருக்குது. அங்க இருக்குற செங்கல்லுகள பக்கத்துல ஒரு யெடத்துல கொண்டுபோயி அடுக்கணும். அப்புடி அடுக்குனா மின்சி டீச்சர் ஊருக்குப் போயிட்டு வர்றதுக்கான காசு கெடைக்கும். இதுதான் பசங்க கொடுத்த ஐடியா.

சரின்னு எல்லாரும் பக்கத்துலருக்குற செங்கல் சூளைக்குப் போயி வேல செய்யிறாங்க. எல்லாப் புள்ளைங்களும் வரிசயா நின்னுக்கிட்டு, ஒவ்வொரு செங்கல்லையா கைமாத்திக் கைமாத்திக் கொடுத்து இன்னொரு யெடத்துல அடுக்கிடறாங்க. அந்தப்     புள்ளைங்களுக்கெல்லாம், கூலி வேல செய்யிறதுக்காக டவுனுக்குப் போன சாங் திரும்பி வந்து தங்களோட படிக்கணும்கிறதுதான் ஆச! அன்னைக்கி முழுநாளும் எல்லாரும் பாடுபட்டு ஒழச்சதுக்காக மொதலாளி எல்லாருக்கும் சம்பளம் கொடுக்கிறாரு.

அப்ப, டீச்சர் டவுனுக்குப் போயிட்டு வர்றதுக்கான பணம் சேந்துடுது. ÷மின்சி டீச்சர், சாங்கைத் தேடி டவுனுக்குப் போறாங்க. ஆனா, எங்க தேடியும் அவனக் கண்டுபுடிக்க முடியல. மின்சி டீச்சர் பாவம். சாப்புடாம தெருத் தெருவா அலஞ்சு தேடுறாங்க. இந்த சாங் பயல எங்கயுமே காணல. கடைசில ஒருத்தர் ஒரு ஐடியா கொடுக்கிறாரு. என்னா ஐடியா?

÷""இந்தாப் பொண்ணு, நீ இப்புடியெல்லாம் அலஞ்சா அந்தப் பயலக் கண்டுபுடிக்க முடியாது. பேசாம ஒரு டி.வி. ஆபிசுக்குப் போ. அங்க போயி, இந்த மாதிரி இந்தப் பையன்  இப்புடிக் காணாமப் போயிட்டான். அவனக் கண்டுபுடிக்கணும்னு சொல்லு. அங்க உள்ளவங்க டி.வி.ல அறிவிப்புக் கொடுப்பாங்க. அப்ப ஒன்னோட பயல் கெடச்சிடுவான்.''

÷அவரு சொன்ன மாதிரி மின்சி டீச்சர் டி.வி. ஸ்டேஷனுக்குப் போறாங்க. ஆனா, அங்க ஒரு காவலாளி இருந்தாரு.  அவரு நம்ம மின்சி டீச்சர உள்ளே விடமாட்டேன்னுட்டாரு. ""இந்தாம்மா, நீ உள்ளே போவாத! இங்கயே நில்லு! கண்ணாடி போட்டுக்கிட்டு வெள்ளையும் சொள்ளையுமா அதிகாரி ஒருத்தரு வருவாரு. அவருகிட்டே ஒன்னோட விஷயத்தச் சொல்லு. அவருதான் நிகழ்ச்சிப் பொறுப்பாளரு!'' அப்புடின்னாரு.

÷மின்சி டீச்சர் காத்துருக்காங்க. கண்ணாடி போட்டவங்க யார் வந்தாலும் ஒடனே ஒடனே       ஓடி ஓடிப்போயி விசாரிக்கிறாங்க. பசி தாங்க முடியல. அந்தப் பயல கண்டுபுடிக்க முடியுமோ முடியாதோன்னு அழுக அழுகயா வருது. ஒடம்பே சோந்து போயி தூக்கக் கலக்கமா வருது. தாங்க முடியாம, அங்கயே ஒரு மூலையில ஒக்காந்து தூங்கித் தூங்கி வுழுவுறாங்க. கடைசில, மறுநாள் காலையிலதான் அந்த அதிகாரியக் கண்டுபுடிச்சி விஷயத்தச் சொல்றாங்க.

÷அந்த அதிகாரி நல்ல அதிகாரி. ஒடனே காவலாளியக் கூப்புட்டு, ""ஏன்யா இந்தப் பொண்ண முன்னாடியே உள்ள விடல. நீ ஒழுங்கா இருக்க மாட்டியா? பிச்சிப்புடுவேன் பிச்சி!'' அப்புடின்னு திட்டுறாரு. ஒடனே மின்சி டீச்சர் டி.வி.ல பேசறதுக்கு       ஏற்பாடு செய்யிறாரு. மின்சி டீச்சர் டி.வி.ல பேசுறாங்க:

÷""தம்பி சாங், நீ எங்கடா போயிட்ட? ஒன்னயத் தேடித்தான்டா நான் இங்க வந்துருக்கேன். எப்புடியாவது கிராமத்துக்கு வந்துடுடா தம்பி...''

  பேசும்போதே டீச்சர் அழுகுறாங்க. அவங்க பேசறது டவுனு முழுக்க எல்லா டி.வி.லேயும் தெரியுது. அதப் பாக்குறவங்கள்லாம் கண்கலங்குறாங்க. அந்த சமயத்துல, வேல கெடைக்காம பிளாட்பாரத்துல திரிஞ்சிக்கிட்டிருக்கிற சாங்கும் இதப் பாக்குறான். அவனும் அழுதுடுறான். அப்பொறம், டீச்சரும் அவனும் ஒண்ணாச் சேந்துடுறாங்க.

÷கடைசியா, ஒரு லாரி முழுக்க பல பேரு கொடுத்த பரிசுகளோட மின்சியும், சாங்கும் ஊர் திரும்பறாங்க. ஊரே அவங்கள மகிழ்ச்சியா வரவேற்குது! எப்புடியிருக்கு கதை. இந்தப் படத்த மறக்காதிங்க. மனசுல வச்சிக்கங்க. சந்தர்ப்பம் கெடைக்கும்போது பாருங்க.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com