கி யூபா ஒரு தீவு. இது முதன்முதலில், ஐரோப்பியக் கடலோடி கொலம்பசினால் 1492-ம் ஆண்டு அக்டோபர் 12-ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. கியூபாவும் அதனோடு சேர்ந்த பல தீவுகளையும் சேர்த்து கியூபக் குடியரசு என்று அழைக்கப்படுகிறது. இந்த நாடு வட கரீபியன் கடலில் அட்லாண்டிக் பெருங்கடலும், மெக்சிகோ வளைகுடாவும் கலக்கும் இடத்தில் அமைந்துள்ளது. கியூபாவுக்கு தெற்கில் ஜமைக்காவும், மேற்கில் மெக்சிகோவும், கிழக்கில் ஹைதியும், வடக்கில் பகாமசும் எல்லைகளாக அமைந்துள்ளன.
÷கியூபாவின் தலைநகரம் ஹவானா. கியூபா ஒரு சோசலிசக் குடியரசு நாடு. இதன் அதிபராக தற்போது ரவுல் காஸ்ட்ரோ பதவி வகித்து வருகிறார். இவர், முந்தைய அதிபரான பிடல் காஸ்ட்ரோவின் தம்பி. இந்த நாட்டின் ஆட்சி மொழி "ஸ்பானிய மொழி'
÷1,14,524 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பைக் கொண்ட நாடு கியூபா. 2006-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, இங்கே 11,382,820 பேர் வாழ்வதாக மதிப்பிடப் பட்டிருக்கிறது. இந்த நாட்டில் நடைமுறையில் உள்ள நாணயத்தின் பெயர் கியூபா பீசோ.
÷ஸ்பெயின், கியூபாவை ஏறத்தாழ 400 ஆண்டுகளாக அடிமைப்படுத்தி வைத்திருந்தது. கியூபா, கி.பி. 1868-ம் ஆண்டு அக்டோபர் 10-ம் தேதி விடுதலை கோரியது. மேலும், கி.பி. 1902-ம் ஆண்டு மே மாதம் 20-ம் நாள், தன்னை ஒரு சுதந்திர நாடாக அறிவித்தது. சுதந்திரத்திற்கான போராட்டத்தைத் தீவிரப்படுத்தியது. பிடல் காஸ்ட்ரோ, சே குவேரா போன்ற போராளிகளின் தலைமையிலான சுதந்திரப் போராட்டம் வெற்றி பெற்றது. கியூபா, கி.பி. 1959-ம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி ஒரு சோசலிசக் குடியரசு நாடாக மலர்ந்தது.
÷கியூபா நூறு சதவீதம் கல்வியறிவு பெற்ற மக்கள் வாழும் நாடாகும். உலகின் மிகச்சிறந்த பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்று ஹவானா பல்கலைக்கழகம். இது கியூபாவில் உள்ளது.
÷கியூபாவில் நிக்கல் மற்றும் கோபால்ட் தனிம தாதுக்கள் பெருமளவில் கிடைக்கின்றன. எனவே, இந்தத் தாதுக்களை வெட்டி எடுக்கும் சுரங்கத் தொழிலே இங்கு முக்கியமான தொழில். புகையிலை, கரும்பு, மற்றும் காபி ஆகியன முக்கிய விளைபொருட்கள்.
÷"டோகோரோகோ' எனும் பறவை கியூபாவின் தேசியப் பறவை. "வெள்ளை மரிபோசா' என்னும் பட்டாம் பூச்சியின் வடிவம் கொண்ட மல்லிகைப் பூதான் தேசிய மலர். தேசிய விளையாட்டு பேஸ்பால். கூடைப் பந்து, கைப்பந்து (வாலிபால்),கிரிக்கெட்போன்ற விளையாட்டுகளும் மக்களிடையே புகழ் பெற்றவை. கியூபா, குத்துச் சண்டை விளையாட்டிற்கு உலக அளவில் புகழ் பெற்ற நாடாகும்.
÷"பாப்டிசம்' என்னும் மதத் திருவிழாவும், "கார்னிவல்' எனும் அணிவகுப்புத் திருவிழாவும்,"கியூபா டிஸ்கோ' எனும் இசைத் திருவிழாவும் இங்கே சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
÷"ரொப விஜா' எனும் மாட்டு இறைச்சி, தக்காளிச் சாறுடன் செய்யப்பட்ட மாமிச உணவு, மஞ்சள் சாதத்துடன் சேர்த்த கறுப்பு நிற பீன்ஸ் உணவு, வெண்பன்றி இறைச்சி, வெங்காயக் கூட்டு ஆகியவை முக்கிய உணவு வகைகள்.
÷""தாய் நாடு அல்லது மரணம்!'' எனும் வாசகமே கியூபா மக்களின் தேசிய முழக்கமாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.