அறிமுகம்: எழுத்தாளர் ஆர். சண்முகசுந்தரம்

பெண்களுக்குச் சொத்துரிமை உண்டு என இன்று சட்டம் இருக்கிறது. இந்தச் சட்டம் இல்லாத காலத்திலேயே தனக்குச் சொத்துரிமை வேண்டும் என்று போராடிய பெண் நாகம்மாள். அவள் படிப்பறிவு இல்லாதவள். தமிழகத்தின் ஏதோ ஒரு மூ
அறிமுகம்: எழுத்தாளர் ஆர். சண்முகசுந்தரம்

பெண்களுக்குச் சொத்துரிமை உண்டு என இன்று சட்டம் இருக்கிறது. இந்தச் சட்டம் இல்லாத காலத்திலேயே தனக்குச் சொத்துரிமை வேண்டும் என்று போராடிய பெண் நாகம்மாள். அவள் படிப்பறிவு இல்லாதவள். தமிழகத்தின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் தன் கிராமத்தைத் தவிர வெளி உலகம் எதையும் அறியாதவள். அந்தப் பெண் யார் தெரியுமா? எழுத்தாளர் ஆர். சண்முகசுந்தரம் எழுதி 1942-ஆம் ஆண்டு வெளியான "நாகம்மாள்' என்னும் நாவலின் மையப் பாத்திரம்தான். நாவலின் கதாபாத்திரமாக இருந்தாலும், வாசிப்பவர் உள்ளத்தில் உயிர்ப்போடு உலவும் பெண்ணாக நாகம்மாளை ஆர். சண்முகசுந்தரம் உருவாக்கியுள்ளார்.

இந்த நாவல் மட்டுமல்ல. பூவும் பிஞ்சும், பனித்துளி, அறுவடை, தனிவழி, சட்டி சுட்டது உள்ளிட்ட இருபது நாவல்களை அவர் எழுதியுள்ளார். சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, கோவை முதலிய தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் பேசும் தமிழைக் கொங்குத் தமிழ் என்று சொல்வார்கள். இவர் அந்தத் தமிழைப் பயன்படுத்தித்தான் நாவல்களை எழுதினார். மக்கள் வாழ்க்கையும் அவர்கள் பேசும் மொழியும் ஒன்றோடொன்று கலந்தவை. அதை நன்கு புரிந்துகொண்டு நாவல்கள் எழுதிய காரணத்தால், ஆர். சண்முகசுந்தரம் தமிழின் "முதல் வட்டார நாவலாசிரியர்' என்று போற்றப்படுகிறார்.

பழைய கோவை மாவட்டத்திலிருந்த, தற்போது திருப்பூர் மாவட்டத்தில் இடம் பெற்றுள்ள கீரனூர் எனும் கிராமத்தில் 1917-ஆம் ஆண்டு பிறந்தவர். நாவல்கள், சிறுகதைகள், நாடகங்கள், கவிதைகள் எனப் பலவற்றை எழுதியுள்ளார். இந்தி மொழியைச் சிறப்பாகக் கற்றவர் அவர். இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் மிகுந்த புகழ் பெற்றிருந்த வங்கமொழி நாவல்கள் பலவற்றை இந்தி வழியாகத் தமிழுக்கு மொழி பெயர்த்தார். சரத் சந்திரர், பங்கிம் சந்திரர், தாராசங்கர் பானர்ஜி, விபூதிபூஷன் பந்தோபாத்யாய முதலிய வங்க நாவலாசிரியர்களின் நாவல்களைத் தமிழுக்குக் கொண்டுவந்த பெருமை ஆர். சண்முகசுந்தரத்திற்கு உண்டு.

ஆர். சண்முகசுந்தரத்தின் இளைய சகோதரர் ஆர். திருஞானசம்பந்தமும் எழுத்தாளர். இருவரும் இணைந்து "வசந்தம்' என்னும் இலக்கிய இதழைப் பல ஆண்டுகள் நடத்தினார்கள். புதுமலர் நிலையம் எனும் பதிப்பகம் மூலமாகப் பல நூல்களை வெளியிட்டார்கள். காந்தியக் கொள்கைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த ஆர். சண்முகசுந்தரம் தனது வாழ்க்கை முறையாகவே அதைக் கடைப்பிடித்தார். 1977-ஆம் ஆண்டு தம் அறுபதாவது வயதில் அவர் காலமானார்.

ஏறத்தாழ நூற்றைம்பது நூல்கள் எழுதியுள்ள ஆர். சண்முகசுந்தரம் சிறுவர்களுக்கென எழுதிய நூல் ஒன்றே ஒன்றுதான். "ரோஜா ராணி' எனும் அந்த நூல் 1968-ஆம் ஆண்டு வெளிவந்தது. ஒன்பது சின்னச் சின்னக் கதைகளைக் கொண்ட தொகுப்பு நூல் அது. மலர்களின் ராணியாகத் திகழும் ரோஜாவிற்கு அந்தச் சிறப்பு எப்படி வந்தது என்பதை அருமையான கதையாகச் சொல்லியுள்ளார். இத்தொகுப்பில் உள்ள வேறு கதைகளான பவளமல்லிகையின் கதை, முல்லைக் கொடியின் கதை ஆகியவையும் மிகவும் சுவையானவை. மேலும், "பெயரில்லாத பூ' என்ற ஒரு கதையும் இத்தொகுப்பில் உள்ளது. நமக்குப் பெயர் தெரிந்த பூக்கள் குறைவு. உலகில் பெயரில்லாத பூக்களே அதிகம். இந்தப் பெயரில்லாத பூக்களெல்லாம் கடவுளின் அருள் பெற்றவை என்றும் ஒரு கதையைப் புனைந்து எழுதியுள்ளார். ஆர். சண்முகசுந்தரம் குழந்தைகளுக்காக ஒரு புத்தகம்தான் எழுதியிருக்கிறார் என்றாலும் அது மிகவும் அரிய குறிஞ்சிப்பூவிற்கு இணையானது என்று சொல்லலாம்.

- பெ.முருகன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com