
அந்தக் காலத்தில் சேவலுக்குத்தான் வால் மிகவும் அழகாக இருக்கும். அதன் வால், நீல நிறத்தில் வண்ணச் சித்திரங்களுடன் அற்புதமாக இருந்தது. அப்போது மயிலின் வால் எப்படி இருந்தது? மயில் தன் குட்டையான வாலுடன் திரிந்துகொண்டிருந்தது. வாலா அது?வால்போன்ற ஒன்று, அவ்வளவுதான்.
சேவலின் வாலைப் பார்த்து மயில் பொறாமைப்பட்டது. ஒரு நாள் மயில், சேவலிடம் வந்து கேட்டது:
""சேவலே, சேவலே! உன்னோட வாலை எனக்குக் கொஞ்சம் இரவல் கொடேன். ஒரு கல்யாணத்துக்குப் போகணும். அலங்காரம் செஞ்சிக்கிட்டுப் போக ஆசையா இருக்கு.''
அதைக் கேட்டு சேவல் வியப்படைந்தது. ""என்ன! இந்த உலகத்துல வாலைக் கூடவா இரவல் தருவாங்க?'' என்று கேட்டது.
கெஞ்சிக் கேட்டது மயில்:
""சேவலே, சேவலே! இந்த உலகத்தில இருக்கிற பிராணிங்க எல்லாம் அடிக்கடி வாலை மாத்திக்கிறதும், இரவல் வாங்குறதும் உண்டுதான். இவ்ளோ நாளா இது உனக்குத் தெரியாதா? ரொம்பப் புத்திசாலியான உனக்கே இது தெரியலியா? இப்ப எனக்கு உன்னோட வாலை இரவல் கொடு. நான் கல்யாணத்துக்குப் போயிட்டு வந்து பத்திரமா திருப்பிக் கொடுத்திடறேன்!''
ஒருவருக்கொருவர் வாலை இரவல் கொடுத்து வாங்கும் பழக்கம் நடைமுறையில் உள்ளதுதான்போலிருக்கிறது. நமக்குத்தான் இது தெரியவில்லை என்று நினைத்த சேவல் கேட்டது:
""சரி மயிலக்கா! நான் இப்ப என் வாலைக் கொடுத்தா நீ எப்ப திருப்பித் தருவே?''
""கல்யாணம் முடிஞ்சவுடனே நேரா இங்கே வந்து உன் வாலைக் கொடுத்திடறேன்! எம்மேல சந்தேகமா இருந்தா, என்னைப் பத்தி யாருகிட்ட வேணும்னாலும் விசாரிச்சுப் பாத்துக்க! இதுவரைக்கும் நான் சொன்ன சொல் தவறி நடந்ததில்லே! "நேர்மை தவறாத நல்ல பறவை'ன்னு என்னைப் புகழ்ந்து பாட்டுகூட எழுதியிருக்காங்களே! இதுவும் உனக்குத் தெரியாதா?''
""அப்படியா? உன்னைப் பத்தி அப்படி பாட்டு எழுதியிருக்காங்களா? நல்லதுதான்! நீ கல்யாணம் முடிஞ்சவுடனே எந்த நேரத்துக்கு வருவே மயிலக்கா?''
""கல்யாணம் எப்ப முடியும்னு தெரியலையே...சாயங்காலமும் முடியலாம், நடு ராத்திரியிலயும் முடியலாம்! ஒரு வேளை, விடியிற வரைக்கும்கூட கல்யாணக் கொண்டாட்டம் நடக்கலாம். எப்படியிருந்தாலும் நாளைக்குப் பொழுது விடியறதுக்குள்ளே நான் கண்டிப்பா வந்திடறேன்!''
சேவல் கறாராகச் சொன்னது:
""சரி! அதுக்கு மேலே தாமதம் பண்ணிடாதே. இல்லாட்டி காலையில கோழிகள் என்னைக் கிண்டல் பண்ணும்!''
கண்டிப்பாக வாலைத் திருப்பித் தந்துவிடுவதாக மயில், சேவலிடம் வாக்களித்தது.
சேவல் தன் அழகான வாலை தயக்கத்துடன் மயிலிடம் கொடுத்தது. மயில், சேவலின் வாலைக் கொண்டு தன்னை அழகுபடுத்திக்கொண்டது. பிறகு அங்கிருந்து மறைந்துவிட்டது.
சேவல் வால் இல்லாமல் உட்கார்ந்திருந்தது. கல்யாணம் முடிந்து மயில் எப்போது வரும் என்று காத்திருந்தது. மாலைப் பொழுதும் வந்தது. பிறகு சூரியனும் மறைந்துவிட்டான். ஆனால் மயிலை மட்டும் இன்னும் காணவில்லை.
சேவல் வேலியின் மீது ஏறி நின்று கூவியது. "இன்னும் மயிலக்கா வரலையே! கல்யாணம் ரொம்பத் தடபுடலா நடக்குதோ என்னமோ!' என்று நினைத்துக்கொண்டது. கோழிகள் படுத்துவிட்டன. சேவலும் கண்ணயர்ந்தது.
சேவல் அடிக்கடித் தூக்கத்திலிருந்து விழித்து தன்னுடைய வாலைப் பற்றி நினைத்துக்கொண்டது,"பாரேன், நடுராத்திரி வந்துடுச்சி! ஒண்ணுமே தெரியலையே, ஒரே இருட்டா இருக்கே. ஊம்! கல்யாணம் முடிஞ்சி திரும்பி வரும்போது ஒரு வேளை, மயிலக்கா வழி தவறிப் போயிருக்குமோ?' பிறகு சேவல் தன் இறக்கைகளைப் படபடவென்று அடித்துக்கொண்டது. "மயிலக்காவைக் கூப்பிடுவோம்!' என்று நினைத்துக் கூவியது. பிறகு மீண்டும் மீண்டும் கூவி மயிலை அழைத்தது. அப்படியும் மயில் வரவில்லை.
மறுபடியும் லேசாகத் தூங்கி விழுந்தது சேவல். ஆமாம், அதற்குத் தூக்கம் வரவில்லை. தன்னுடைய வாலை நினைத்து வருத்தப்பட்டது. கல்யாணம் முடிந்து மயில் திரும்பி வருவதுபோலவும், வழியில் கொள்ளைக்காரர்கள் மயிலைத் தாக்கி வாலைப் பிடுங்கிக்கொண்டு ஓடுவதுபோலவும் சேவல் கனவு கண்டது.
விடியற்காலையில் துள்ளி எழுந்தது சேவல். "அட ஆண்டவனே! இன்னும் மயிலக்கா வரலையே!' என்று நினைத்து மறுபடியும் கூச்சலிட்டது:
""கொக்கரக்கோ! மயிலக்கா, மயிலக்கா இங்கே வா!''
என்ன! இங்கே வருவதா? இங்கே எப்படி வருவது? மயில்தான் இரவோடு இரவாக வெளி நாட்டிற்கு ஓடிப்போய் அங்கேயே குடியேறிவிட்டதே! அதன் பிறகு அதை இங்கு யாருமே பார்க்கவில்லை.
வெகு காலம் சென்றுவிட்டது. என்னென்னமோ நடந்துவிட்டது. சேவலுக்குப் புதிய வால்கூட முளைத்துவிட்டது. என்னதான் இருந்தாலும் சேவல் ஆறுதல் அடையவில்லை.
அன்றிலிருந்து சேவல் ஒவ்வொரு இரவும் மூன்று முறை கூவி வருகிறது. யாருக்குத் தெரியும் - சேவலின் பழைய வாலை மயில் திரும்பக் கொடுக்குமா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.