நம்மைச் சுற்றி நடப்பது என்ன? - 8: வார்டு கவுன்சிலர்களின் செயல்பாடுகள்

சென்ற வாரம், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் எப்படித் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பது குறித்து அறிந்தோம். அவர்களின் கடமைகள் என்னவென்று இந்த வாரம் பார்ப்போமா?  பல கிராம ஊராட்சி அமைப்புகள் இணைந்தது ஒரு

சென்ற வாரம், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் எப்படித் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பது குறித்து அறிந்தோம். அவர்களின் கடமைகள் என்னவென்று இந்த வாரம் பார்ப்போமா?

 பல கிராம ஊராட்சி அமைப்புகள் இணைந்தது ஒரு ஊராட்சி ஒன்றியம் என்று நமக்குத் தெரியும். ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திற்கும் ஒரு அலுவலகம் இருக்கும். அங்கு   ஊராட்சி ஒன்றியத் தலைவர் கூட்டம் நடத்துவார். ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் (கவுன்சிலர்கள்) அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வார்கள். ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் அந்தக் கூட்டத்தில் தனது வார்டு மக்களுக்குத் தேவையான திட்டங்களை எடுத்துரைப்பார். அந்தக் கூட்டத்தின் வாயிலாகத் திட்டங்களைக் கேட்டுப் பெறுவார். இவர், தன் வார்டு மக்களின் குறைகளை எடுத்துச் சொல்வார். மேலும் இவர் அந்தக் கூட்டத்தில், ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் சிறப்பாக நடைபெற ஆலோசனைகளையும் வழங்குவார்.

ஊராட்சி ஒன்றியக் கூட்டம் நடக்கும் தினத்தை, ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் எவ்வாறு தெரிந்துகொள்வார்?

 ஊராட்சி ஒன்றியக் கூட்டம் நடைபெறும் தேதியை, ஊராட்சி ஒன்றியத் தலைவர் கடிதம் மூலமாகத் தெரிவிப்பார். அவரது கையொப்பம் இடப்பட்ட அந்தக் கடிதத்தில் கூட்டம் நடைபெறும் தேதியும், கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலும் இடம் பெற்றிருக்கும். ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் அந்தக் கடிதத்தைக் கையொப்பமிட்டுப் பெற்றுக்கொள்வார்.

ஊராட்சி ஒன்றியக் கூட்டங்களில் சில வகைகள் உள்ளன. அதாவது,சாதாரணக் கூட்டம் என்று ஒரு வகைக் கூட்டம் கூட்டுவார்கள். இந்தக் கூட்டத்தை ஐந்து நாட்கள் கால அவகாசம் கொடுத்துக் கூட்டலாம்.

அடுத்ததாக, ஏதாவது முக்கிய விஷயங்களை உடனடியாக விவாதித்து முடிவு எடுக்கவேண்டிய சூழ்நிலைகளில் "அவசரக் கூட்டம்' கூட்டுவார்கள். ஒரே நாள் மட்டுமே கால அவகாசம் கொடுத்து அந்தக் கூட்டத்தைக் கூட்டுவார்கள். இன்னொரு வகைக் கூட்டம் இருக்கிறது. இதற்கு சிறப்புக் கூட்டம் என்று பெயர். இதை, ஏழு நாட்களிலிருந்து   பதினைந்து நாட்கள் வரை கால அவகாசம் தந்து கூட்டுவார்கள்.

இப்படிப்பட்டக் கூட்டங்களில் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் எவற்றைப் பற்றிப் பேசலாம்?

தனது வார்டின் வளர்ச்சி குறித்துப் பேசலாம். பிறகு, நிர்வாகத்தின் நிதி வீணடிக்கப்பட்டிருந்தால் அதைச் சுட்டிக்காட்டலாம். நிர்வாகத்தின் மற்ற குறைபாடுகளையும் எடுத்துச் சொல்லலாம். இப்படி அவர், தான் பேசுவதற்கான விஷயங்களைக் கொண்டுவருவார்.

அந்தக் கூட்டத்தில் அவர் எவற்றைப் பற்றிப் பேசக்கூடாது?

ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திற்குத் தொடர்பற்ற எந்த விஷயத்தைப் பற்றியும் அவர் பேசக்கூடாது.

பிறர்மேல் அவதூறு மற்றும் கெட்ட பெயர் உண்டாக்கும் வகையில் பேசக்கூடாது.

மற்றவர்களின் நடத்தைகளை விமர்சித்துப் பேச முடியாது.

பேசுவதற்கு ஒரு முறை அனுமதி மறுக்கப்பட்ட விஷயத்தைப் பற்றி மறுமுறை பேச முடியாது.

கற்பனையான விஷயங்களைப் பற்றியும் பேசக்கூடாது.

 ஆக, அந்தக் கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் எவற்றைப் பற்றிப் பேசலாம் எவற்றைப் பற்றிப் பேசக்கூடாது என்பதை நீங்கள் சுருக்கமாகப்  புரிந்துகொண்டிருப்பீர்கள். ஆமாம், அவர்கள் மக்களுக்கான நன்மைகளைப் பற்றி மட்டும்தான் பேசமுடியும்.

 ஆனால் அதே சமயத்தில், ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் பற்றிய எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் தெரிந்துகொள்ள ஊராட்சி ஒன்றிய உறுப்பினருக்கு உரிமை உண்டு. இதற்காக அவர் எழுத்து மூலம் கேள்வி எழுப்ப முடியும்.

 இப்படிப்பட்ட அதிகாரம் ஊராட்சி ஒன்றிய உறுப்பினருக்கு உள்ளது. அதனால் அவர் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் தொடர்பான விவரங்களைக் கேள்வி எழுப்பித் தெரிந்துகொள்ள முடியும்.

 கூட்டத்தின் தலைவர் அளிக்கும் பதில் திருப்தியளிக்கவில்லை எனில் உறுப்பினர், அது தொடர்பான துணைக் கேள்விகளை எழுப்பலாம். உறுப்பினரின் கேள்விகளை தலைவர் பரிசீலனை செய்வார். அனுமதிக்கத் தக்க கேள்விகளை மட்டும் எடுத்துக்கொண்டு தலைவர், அடுத்து வரும்கூட்டத்தில் அந்தக் கேள்விகளுக்கான பதில்களைச் சொல்வார். உறுப்பினரின் சில கேள்விகளைத் தலைவர் மறுத்து ஒதுக்கிவிடலாம். ஆனால் அதற்கான முறையான காரணங்களை விளக்கி தலைவர், அந்தக் கேள்வியை எழுப்பிய உறுப்பினருக்கு எழுத்து மூலம் விளக்கம் தரவேண்டும்.

 தன் கேள்வியை மறுத்த தலைவர், அப்படி மறுத்ததற்கான முறையான காரணத்தைத் தெரியப்படுத்தவில்லை என்றால் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் என்ன செய்ய வேண்டும்?

 அவர், மாவட்ட ஆட்சித் தலைவருக்கு கடிதம் எழுதி, அது பற்றி விளக்கம் கேட்க     முடியும்.

(தொடரும் )

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com