நானும் என் தம்பியும்

குழந்தைப் பருவத்தில் எனக்கும் என் தம்பிக்கும் இடையில் நடந்த ஒரு நிகழ்ச்சியை நினைத்துப் பார்க்கிறேன். இப்போது அதைப் பற்றி நினைக்கும்போதும் எனக்கு லேசான குற்ற உணர்ச்சி ஏற்படுகிறது. அந்த வேதனையின் சன்னல்
நானும் என் தம்பியும்

குழந்தைப் பருவத்தில் எனக்கும் என் தம்பிக்கும் இடையில் நடந்த ஒரு நிகழ்ச்சியை நினைத்துப் பார்க்கிறேன். இப்போது அதைப் பற்றி நினைக்கும்போதும் எனக்கு லேசான குற்ற உணர்ச்சி ஏற்படுகிறது. அந்த வேதனையின் சன்னல் வழியே மனித இயற்கையையும் நான் எட்டிப் பார்க்கிறேன்.

 என் தம்பி மிகச் சிறியவனாக இருக்கும்போதிலிருந்தே கைவினைப் பொருட்கள் செய்வதில் மிகவும் விருப்பமுள்ளவனாக இருந்தான். பள்ளிக்கூடத்தின் வருகைப் பதிவேட்டில், பள்ளியின் முத்திரை குத்தப்பட்டிருக்கும். அதை அவன் பார்த்ததால்தான்  அவனுக்கு முத்திரை தயார் செய்வதில் ஆர்வம் ஏற்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன்.

ரப்பர் ஸ்டாம்புகள் வருவதற்கு முன்பு, இலவ மரத்தின் பெரிய முள்ளில்தான் சிலர் முத்திரை உருவாக்கினார்கள். அன்று இரண்டாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த என் தம்பி, இலவ முள்ளிலிருந்து முத்திரை தயாரிக்கும் வித்தையை யாரிடமிருந்தோ தெரிந்துகொண்டான்.

பிள்ளைகள் வீட்டுப் பாடங்கள் செய்யாதிருந்தால் எங்கள் அப்பா அதை ஒருபோதும் மன்னிக்க மாட்டார். ஆயினும் வீட்டுப் பாடங்களுக்கான நேரத்திலிருந்து கொஞ்சம் நேரத்தை மிச்சம் பிடித்துதான் தம்பி, இலவ முட்களையும் அதில் எழுத்துக்களைச் செதுக்குவதற்கான உளிகளையும் சேகரிக்க வேண்டும்.

குடைக் கம்பியை பென்சிலின் நீளத்தில் உடைத்து, அதன் முனையைத் தீயில் வைத்துக் காய்ச்சி தட்டையாக அடித்து நசுக்கிதான் அவன் பல அளவுகளில் உளிகள் செய்தான். ஆங்கில எழுத்துக்கள் உள்ள முத்திரை செய்ய வேண்டுமானால், அதை அரபி மொழியைப் போல, வலமிருந்து இடமாக, ஒரு கண்ணாடியில் காணும் பிம்பம் போலச் செதுக்க வேண்டும். பழகி வந்த எழுத்து முறைக்கு நேர்மாறான இந்த முறையில் எழுத்துக்களைச் செதுக்கும் திறமை பெற அவன் கொஞ்சம் அதிக நேரம் செலவிட வேண்டி வந்தது.

 இதெல்லாம் அவன் படிப்பையும் தேர்வு முடிவையும் பாதித்தது என்று சொல்ல வேண்டியதில்லை அல்லவா? நான் பெரிதும் முயன்று சிறிய முள்ளில் மூன்று ஆங்கில   எழுத்துக்களைச் செதுக்கி முத்திரை தயாரித்தேன். அதில் மை தடவி காகிதத்தில் குத்திப் பார்த்தபோது அச்சு தவறாக வந்தது. அப்போது எனக்கு என் தம்பியின் மீது  பொறாமை ஏற்பட்டது. ஏனென்றால் அவன் முத்திரை செய்வதில் என்னைவிடத் திறமை பெற்றிருக்கிறான் அல்லவா!

நான் தவறாக முத்திரை செய்ததைக் கண்டு என் தம்பியால் சிரிக்காமல் இருக்க  முடியவில்லை. அவன் சிரித்தது எனக்கு மிகவும் கோபத்தை ஏற்படுத்தியது. அவன் சேகரித்து வைத்திருந்த இலவ முட்களையும், குடைக் கம்பிகளையும் நான் வெளியே வீசியெறிந்தேன். அப்பா அடிப்பார் என்று பயந்து முட்களையும் உளிகளையும் ரகசியமாக மறைத்து வைத்திருந்த தம்பி, அந்தச் சூழ்நிலையில் புத்திசாலித்தனமாக பற்களைக் கடித்துக்கொண்டு மெüனமாக இருந்தான்.

முன்கூட்டியே கல்லில் தேய்த்து வைத்திருந்த இலவ முள்ளின் அடிப்புறத்தில்தான் முத்திரையின் எழுத்துக்களைச் செதுக்க வேண்டும். அதற்கு அந்தப் பகுதியை நன்றாகத் தேய்த்து பளபளப்பாக்க வேண்டும்.

நானும் தம்பியும் படிப்பதற்குப் பயன்படுத்திய வட்ட மேசையின் அடியில் தேய்த்துத்தான் தம்பி முள்ளைக் கடைசியாக மெருகேற்றுவான். அந்த நேரம் முழுதும் தன் முன்னால் ஒரு புத்தகத்தையோ அல்லது ஒரு நோட்டுப் புத்தகத்தையோ விரித்து வைத்திருப்பான். அதைப் படிப்பதுபோல நடித்துக்கொண்டே முள்ளைத் தேய்ப்பான்.

 ஒரு நாள் நான் அவனது இந்த முயற்சியைத் தடுக்க வேண்டும் என்று நினைத்து ஜியோமிதிப் படங்கள் வரைவதற்கான கருவிகளை மேசை மீது பொருத்தி வைத்தேன். மேசையின் அடியில் தம்பி தேய்த்துக்கொண்டிருப்பதால் மேசை குலுங்கும். அவன் மேசையை ஆட்டுவதால் என்னால் சரியாகப் படம் வரைய முடியவில்லை என்று சத்தம்போட்டு அப்பாவைக் கூப்பிட்டு அவனுக்கு அடிவாங்கிக் கொடுக்க வேண்டும் என்பதுதான் என் மனதில் உள்ள திட்டம்.

ஒரு கலைஞன் தன் படைப்பின் உருவாக்கத்தில் ஆழ்ந்து ஈடுபடுவான். தன் மனதில் உள்ள கலையை எப்படியும் வெளிப்படுத்துவதற்காக முனைப்புடன் உழைப்பான். அதைப்போலத்தான் என் தம்பியும் முத்திரை செய்வதில் முழுமூச்சாக ஈடுபடுவான். அதைத் தெரிந்துகொண்டுதான் நான் என் தம்பியின் முயற்சிகளுக்குத் தடைகள் ஏற்படுத்தினேன். என் கெட்ட நோக்கம், தம்பிக்குப் பிடிக்கவில்லை. ஆயினும் அந்தச் சூழ்நிலை அவன் என்னை எதிர்ப்பதற்கு ஏற்றதாக இல்லை.

அதனால் மேசை சற்றும் அசையாமல்தான் அந்தப் பாவமான சிறுவன் முள்ளைத் தேய்த்து மெருகேற்றிக்கொண்டிருந்தான். இடையிடையே அப்பா எங்கள் முன்னால் அங்கும் இங்கும் நடப்பார். அப்போதெல்லாம் தம்பி, முள்ளை மடியில் ஒளித்து வைத்துக்கொண்டு இந்திய வரலாற்றை உரக்க வாசிப்பான்.

 எழுத்துக்களைச் செதுக்குவது என்பது, இலவ முள்ளைத் தேய்த்து பளபளப்பாக்குவதுபோல சுலபமான காரியம் அல்ல. இலக்கை அம்பெய்து வீழ்த்தக் குறி பார்க்கும் அர்ஜுனனைவிடவும் கவனமாகத்தான் தம்பி, கம்பி உளியால் நேர்மாறான எழுத்துக்களை ஒவ்வொன்றாகச் செதுக்கி வந்தான். முற்றிலும் ஆழ்ந்த முறையில் அவன் அந்தச் செயலில் ஈடுபட்டிருந்ததால், அப்பா பக்கத்தில் வந்ததை அவன் கவனிக்கவே இல்லை. அவனைவிடக் கவனமாகப் படிப்பதாக நடிக்கும் நானோ, அவன் முன்னால் இருந்த புத்தகத்தை எடுத்துத் தலைகீழாக வைத்தேன். அப்பா பார்த்தால் ஏற்படக்கூடிய விளைவுகளை அறிந்த என் தங்கை, தம்பியை நிமிண்டி ஆபத்து எச்சரிக்கை செய்தாள்.

தம்பி திடுக்கிட்டுச் சுதாரித்துக்கொண்டு புத்தகத்தைப் படிக்க முற்பட்டான். அப்போது புத்தகம் தலைகீழாக இருந்தது. அதைக் கண்ட தம்பிக்கு கோபமும் வருத்தமும் ஏற்பட்டது. அதைப் பார்த்து  நான் மகிழ்ந்தேன். ஒன்றும் தெரியாதவனைப்போல புத்தகம்  படித்தவாறு அப்பாவின் முன்னால் என்னை நல்ல பையனாகக் காட்டிக்கொண்டேன். அப்பா அறையைவிட்டுச் சென்றபோது என் தம்பியால் என்னைக் கிள்ளாமல் இருக்க  முடியவில்லை.

உரக்கக் கத்தி அப்பாவை சம்பவ இடத்திற்கு வரவழைக்க எனக்கு இதுவே     போதுமானதாக இருந்தது. பிறகு விசாரணை நடந்தது. அவனது பொருட்கள் எல்லாம் ஆஜராக்கப்பட்டன. பிறகு அப்பா அவனை அடித்தார்.

அப்பாவிடம் அடிவாங்கிய வருத்தத்தில் தம்பி இரவு உணவு சாப்பிடாமல் படுத்துவிட்டான். இரவு எட்டு மணி ஆனது. கொஞ்சம் நேரமானால் ஒன்பதாகிவிடும். ஒன்பதரையிலிருந்து - பத்து மணிக்குள் படுக்க வேண்டும். இன்று நான் தனியாகப் படுக்க வேண்டுமே என்று நினைத்தபோது எனக்கு மிகப் பெரிய அச்சம் ஏற்பட்டது.

இந்த இரவு நேரத்தில் தம்பியை அடிவாங்க வைத்தது நல்லது இல்லை. இதே விஷயம் காலையில் நடந்திருந்தால் மாலையாகும்போது அவன், காலையில் நடந்ததை            மறந்திருப்பான். இனி என்ன செய்வது? மெதுவாக தம்பி படுத்திருக்கும் கட்டிலுக்குச் சென்று பார்த்தேன். அவன் இப்போதும் தேம்பிக்கொண்டிருந்தான்.

நான் என்னை நினைத்து மிகவும் வெட்கப்பட்டேன். ஆனாலும் தம்பியின் முன்னால் பணிந்துபோகக் கூடாது என்று நினைத்தேன். நான் தனியாகப் படுத்துத் தூங்க வேண்டும் என்று என்னால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.

பகலில் எங்கள் இருவரின் கட்டில்களும் அறையின் இரண்டு ஓரங்களில் கிடக்கும். இரவில் நாங்கள் அப்பாவிற்குத் தெரியாமல் இரண்டு கட்டில்களையும் சேர்த்துப்போடுவோம். எல்லா இரவிலும் என் கனவில், ஆகாயமளவு உயரம் இருக்கும் ஒரு பயங்கரப் பூதம் வந்து  என்னைப் பிடிக்க முயலும். அந்தப் பூதத்திடமிருந்து நான் தப்பிக்க வேண்டும் என்றால்,      உறக்கத்தில் பயந்து அலறும் என்னை என் தம்பி தொட்டு எழுப்ப வேண்டும்.

கனவில் வரும் பூதத்தை தனியாக எதிர்கொள்ள எனக்குச் சக்தியில்லை. அதனால்தான் நான் தம்பியை ஒட்டி உரசிக்கொண்டு படுப்பேன்.

அன்று என் தம்பியின் தேம்பலைக் கேட்டபோது முன்பு ஒருபோதும் நான் உணர்ந்திராத துயரம் எனக்கு ஏற்பட்டது. இரவில் வந்து என் கழுத்தைப் பிடிக்கும் பூதத்தைவிடப் பயங்கர உருவம் கொண்ட என் குற்ற உணர்ச்சி, என் முன்னால் வந்து நிற்பதுபோல    எனக்குத் தோன்றியது.

அன்று கட்டிலைப் பிடித்து சேர்த்துப்போட தம்பி ஒத்துக்கொள்ளவில்லை. விளக்கை அணைத்துவிட்டு நான் தனியாகவே என் கட்டிலை மெல்ல மெல்ல இழுக்கத் தொடங்கினேன். தரையில் கட்டில் உராய்கிற சத்தம் கேட்டு அப்பா வந்துவிடுவாரோ என்று பயந்து, இடையிடையே கூர்ந்து கவனித்தேன். இரவு எப்போதோ என் கட்டிலை அவன் கட்டிலுடன் சேர்த்துப் போட்டேன். மெல்ல மெல்ல தம்பியை நெருங்கிப் படுத்தேன்.

 அப்போது அவன் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தான். அவனைத் தொட்டபோது, குற்ற உணர்ச்சியால் துன்பப்பட்டுக்கொண்டிருந்த எனக்கு அழுகை வந்தது. நான் அவனைக்    கட்டிப்பிடித்துக் கொண்டு படுத்து விம்மி விம்மி அழுதேன். பொழுது விடிந்தபோது என் தம்பி, இரவில் நடந்ததையெல்லாம் மறந்துவிட்டிருந்தான். அவன் மீண்டும் ஒரு இலவ  முள் எடுத்து தேய்க்கத் தொடங்கினான்.

கடவுள் எனக்கு ஒரு தம்பியைக் கொடுத்தார். நான் அவன் மூலம் சகோதரத்துவத்தின் மேன்மையை உணர்ந்துகொண்டேன். உலகின் மறு மூலையில் உள்ள மனிதனையும் நான் என் சகோதரனாக்கிக் கொள்வதற்கான தொடக்கப் புள்ளியாக இருந்தான் என் தம்பி. அவன் என் குழந்தைப் பருவத்தை மகிழ்ச்சி நிறைந்ததாக்கியவன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com