

நிலா நிலா ஓடிவா...
நில்லாமல் ஓடிவா
மலை மேலே ஏறிவா...
மல்லிகைப்பூ கொண்டுவா....
- என்று நிலவைக் காட்டி குழந்தைகளுக்கு சோறூட்டும் தாய், நிலவை வெள்ளிக் கிண்ணம், வானப் பெண்ணின் பொட்டு என்று வர்ணித்துப் பாட்டு எழுதும் கவிஞர்கள்... என நிலவின் பெருமையைப் போற்றாதவர்களே இல்லை.
ஆங்கிலத்தில் நிலாவை "லூனார்' என்று குறிப்பிடுகிறார்கள். லூனார் என்ற சொல், லத்தீன் மொழியில் நிலாவைக் குறிப்பதாகும். பூமியின் அருகில் உள்ள துணைக் கோள்தான் நிலா. பூமி, சூரியனைச் சுற்றிவர 365 1/4 நாள்கள் எடுத்துக் கொள்கிறது. நிலா, பூமியைச் சுற்றி வர 29 1/2 நாள்கள் எடுத்துக் கொள்கிறது. இந்த 29 1/2 நாள்களைச் சேர்த்து "லூனார் மாதம்' என்று அழைக்கப்படுகிறது.
இரவில் பளிச்சென்று பிரகாசிக்கும் நிலவு, உண்மையில் தன்னுடைய ஒளியை பூமிக்குத் தரவில்லை. சூரியனுடைய ஒளியைத்தான் பிரதிபலிக்கிறது. பூமியைச் சுற்றிவரும் சுழற்சிக்கேற்ப அமாவாசை, பிறை நிலா, அரை வட்ட நிலா, முழு நிலா என்றழைக்கப்படும் பெüர்ணமி எனப் பல்வேறு தோற்ற வேறுபாடுகளை அடைகிறது. இவ்வாறு நிலா பதினைந்து நாள்களுக்கு ஒருமுறை வளர்ந்து பின்பு தேய்வதை வைத்து நாள்களைக் கணக்கிடும் முறைக்கு "லூனார் மாதம்' என்று பெயர் வைத்தார்கள், முற்காலத்தில் வாழ்ந்த மனிதர்கள். இதைக் கொண்டு காலத்தையும் நேரத்தையும் கணித்தனர்.
எகிப்தியர்கள் சந்திரனை "தாத்' கடவுளாக வணங்கினர். கிரேக்கர்கள் பெண் கடவுள் பெயரான "போபியா' அல்லது "சிந்தியா' எனப் பெயரிட்டு வணங்கி வந்தனர். பழங்கால மக்கள் சூரியக் கடவுள் பொற்தேரில் செல்வதாகவும் இரவில் சந்திரக் கடவுள் வெள்ளி ரதத்தில் பவனி வருவதாகவும் நினைத்து வணங்கி வந்தனர்.
ரோமானியர்கள் நிலாவைப் பெண் கடவுளாகக் கருதி, "டயானா' என்று பெயரிட்டு வணங்கினர். டயானா, சூரியக் கடவுளான அப்போலோவின் தங்கையாகக் கருதப்பட்டாள்.
முழு நிலவு தினமான பெüர்ணமி அன்று துர்தேவதைகளும், சூனியக்காரிகளும், கொடூர ஓநாய்களும் இரவு நேரத்தில் வலம் வரும் என்று பல கற்பனைக் கதைகள் உலா வந்தன. ஆனால் இந்த கற்பனைக் கதைகளை எல்லாம் தகர்க்கும் விதமாக, 1969-ம் ஆண்டு ஜூலை மாதம் 20-ந் தேதி அன்று சரியாக இரவு 10.56 மணிக்கு அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவில் காலடி எடுத்துவைத்தார்.
நிலவை அண்ணாந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த காலம் போய், நிலவுக்கே சென்று பூமியை வேடிக்கை பார்க்கும் அளவுக்கு வளர்ந்திருக்கும் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி பிரமிக்கவைக்கிறதுதானே!
நிலவின் ஈர்ப்பு சக்திக்கு ஈடு கொடுக்கமுடியாமல் மெதுவாக ஒரு கங்காருவைப் போல இங்கும் அங்கும் தாவினார் நீல் ஆம்ஸ்ட்ராங். அவருடன் எட்வின் ஆல்டிரினும்... இந்த அதிசய அனுபவத்தை உலகமே தொலைக்காட்சியில் கண்டு வியந்தது. தன் நாட்டு தேசியக் கொடியை நிலவில் பதித்து ஆம்ஸ்ட்ராங் சொன்னது: "நான் நிலவில் பதித்த இந்த சிறு அடிதான், மனித குலத்தின் பெரிய தாண்டுதல்'!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.