காலம்

காலம் பொன் போன்றது; கடமை கண் போன்றது, காலத்தை வெல்ல யாராலும் முடியாது... எனக் காலத்தைப் பற்றிய பழமொழிகள் பலவற்றை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியடைந்த இந்த இருபத்தியோராம் ந
காலம்
Updated on
3 min read

காலம் பொன் போன்றது; கடமை கண் போன்றது, காலத்தை வெல்ல யாராலும் முடியாது... எனக் காலத்தைப் பற்றிய பழமொழிகள் பலவற்றை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.

அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியடைந்த இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் காலம், நேரம் போன்றவற்றை எளிமையாக நாம் தெரிந்துகொள்வதற்கு கைகடிகாரம், சுவர்கடிகாரம், காலண்டர், கைபேசி, கணினி போன்றவற்றை உபயோகிக்கிறோம்.

ஆனால் பலநூறு ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த மனிதர்கள் காலத்தையும் நேரத்தையும் எப்படிக் கணக்கிட்டார்கள்? இயற்கை அன்னை அளித்த கருவிகளையே எப்படிக் காலத்தை கணக்கிடப் பயன்படுத்தினார்கள் என்பதை அரிய, காலச்சக்கரத்தில் சற்று பின்னோக்கிப் பயணிப்போமா?

சூரியனின் சக்தியைப் போற்றி வணங்கி வந்தனர் ஆதிகால மக்கள். சூரியக் கடவுளின் சக்தியால்தான் இந்த பூமி இயங்கி வருகிறதென்றும் பல உயிர்களுக்கு ஆதாரமாக விளங்கியது என்றும் நம்பினர். சூரியனின் உபயத்தால்தான் தாவரங்கள், விலங்குகள் சக்தி பெற்று வாழ்கின்றன என்பதை உணர்ந்து சூரியனை வழிபட்டனர்.

சாந்தசொரூபியாய் இருக்கும் சூரியன், வெளிச்சத்தையும் தாவரங்கள் வளர சக்தியையும் தருகிறான். அதே சூரியனுக்குக் கோபம் வந்தால் தகிக்கும் வெப்பத்தால் வறட்சியையும் பஞ்சத்தையும் தருகிறான் என்பதை உணர்ந்து சூரிய வழிபாட்டையும் ஒரு விழாவாகவே சிறப்போடு செய்துவந்தார்கள்.

அந்த மனிதர்களின் அறிவுக்கு எட்டியவரை காலையில் சூரியன் உதித்து மாலையில் பூமியின் மறுபுறம் எங்கோ மறைந்து விடுகிறது என்று தெரிந்து வைத்திருந்தனர்.

காலை, மாலை, பகல், இரவு, வெளிச்சம், இருட்டு என்று திரும்பத் திரும்ப மாறி வருவதை வைத்து இது ஒரு சுழற்சி என்பதை அறிந்தனர். எதனால் இப்படி ஒரு சுழற்சி வருகிறது? என்ற புதிருக்கான விடையைத் தந்தவர்தான் கோபர்நிக்கஸ்.

பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த போலந்து நாட்டு வானவியல் வல்லுனரான கோபர்நிக்கஸ் சூரிய கோட்பாட்டினைக் கண்டுபிடித்தார். இந்த பிரபஞ்சத்தின் நடுவே சூரியன் இருக்கிறது. இதைச் சுற்றிதான் பிற கோள்கள் வருகின்றன என்பதுதான் அந்தக் கோட்பாடு.

இந்தக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு மற்ற பிரபல வானவியல் வல்லுனர்களான கலிலியோ, ஐசக் நியூட்டன் மற்றும் ஹேர்சல் ஆகியோர் சூரியன், சந்திரனைப் பற்றியும் அதைச் சுற்றி வரும் கோள்களைப் பற்றியும் ஆராய்ந்தனர்.

பூமிப் பந்தானது தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது. இவ்வாறு தன்னைத்தானே சுற்றி வர ஒருநாளும் (24 மணிநேரங்கள்), பூமி, சூரியனைச் சுற்றி வர 365 1/4 நாட்களும் எடுத்துக் கொள்கின்றது. பூமியைப் போலவே கிரகங்களும் சூரியனைச் சுற்றிவருகின்றன. ஆனால் சூரியனிலிருந்து அவை இருக்கும் தூரங்களுக்கேற்ப சுழற்சியின் காலம் ஒவ்வொன்றுக்கும் மாறுபடும்.

அதேசமயம் பூமியின் துணைக் கோளாக கருதப்படும் நிலாவானது பூமியைச் சுற்றி வருகிறது. நிலா, பூமியை முழுவதும் சுற்றிவர 29 1/2 நாள்கள் ஆகிறது. பூமியின் சுழற்சியையும் நிலாவின் சுழற்சியையும் வைத்து நாள்கள், மாதங்கள் போன்றவற்றைக் கணக்கிட்டார்கள்.

கற்காலம் (stone age) என்று அழைக்கப்பட்ட நாலாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்த ஐரோப்பியர்கள் பூமியின் சுழற்சியையும் அது சூரியனைச் சுற்றி வருவதையும் அறிந்திருக்கவில்லை. அவர்கள் காலத்தை கணக்கிட பின்பற்றிய முறை சுவாரஸ்யமானது.

மிகப் பெரிய கற்கள் இரண்டை ஒன்றன்மேல் ஒன்றைப் படுக்கவைத்து இதேபோல பல கற்களைக் கொண்டு சூரியனின் வட்டத்தைப் போல் அடுக்கி வைத்து அதைச் சுற்றி வட்டப்பாதையில் பல கற்களை நட்டுவைத்தனர். சூரியன் உதித்ததும் அதன் வெளிச்சம் கற்களில் பட்டு நிழல் எதிர் திசையில் தோன்றும். சூரியனின் வெளிச்சம் ஏறஏற நிழலின் நீளம் அதிகரிக்கும். சூரியனின் வெளிச்சம் மறையும்போது, நிழலும் மறைந்துவிடும்.

இந்தக் கற்களின் நிழலை வைத்துக் கொண்டு அவர்கள் எந்தக் காலத்தில் விதைக்கப் போடலாம், எப்போது அறுவடை செய்யலாம் என்று கணக்கிட்டு அதன்படி பயிர் வளர்த்தார்கள். அக்கால ஐரோப்பியர்கள் பயன்படுத்திய அந்தக் கற்கள் இன்றும் நினைவுச் சின்னமாய் பிரான்ஸில் உள்ள "கார்னெக்' என்ற இடத்திலும் இங்கிலாந்தின் "ஸ்டோன்ஹென்ஞ்' என்ற இடத்திலும் காட்சியாய் இருக்கின்றது.

ஆப்ரிக்க கண்டத்தின் நைல் நதியோரம் வாழ்ந்த எகிப்தியர்கள் வருடத்தின் எந்த மாதத்தில் மழை வருகிறது? எப்போது நதியில் நீர் நிரம்பி வெள்ளம் வருகிறது? பயிர் செய்வதற்கு எந்த மாதம் சிறந்தது? என்பதை முடிவு செய்யும் வகையில் ஓர் அட்டவணையை தயார் செய்வது அவசியம் என்று உணர்ந்தனர். அதற்கேற்ப ஓர் அட்டவணையை தயார் செய்தனர்.

பூமியின் 365 நாள் சுழற்சியை வைத்து வருடத்திற்கு 365 நாள்களும் அதை பன்னிரண்டால் வகுத்து வரும் 30 நாள்களை, ஒருமாதத்திற்கு 30 நாள்கள் என்றும் பன்னிரண்டு மாதங்களாகப் பிரித்தனர். மீதம் மிஞ்சியிருந்த ஐந்து நாள்களை விருந்து விழா நாள்களாக மாற்றினர். இதுதான் சுமார் இரண்டாயிரத்து ஐநூறு வருடங்களுக்கு முன் கண்டுபிடித்த முதல் காலண்டர்!

எகிப்தியர்களைப் போலவே மத்திய அமெரிக்காவைச் சேர்ந்த மெக்சிகர்களும் வருடத்தின் 365 நாள்களை வைத்து ஒரு புதிய காலண்டரை உருவாக்கினர். ஆனால் அவர்கள் தயாரித்த காலண்டர் 18 மாதங்களைக் கொண்டிருந்தது. மாதத்திற்கு 20 நாள்களைக் கொண்டிருந்தது. மீதமிருந்த ஐந்து நாள்கள் கெட்ட நாளாகவும் அதிர்ஷ்டமில்லா நாளாகவும் தள்ளிவைக்கப்பட்டது.

சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரே சீனர்களும் காலண்டரை உருவாக்கினர். அவர்கள் உருவாக்கிய காலண்டர் பன்னிரண்டு மாதங்களும் 30 நாள்களும் கொண்டிருந்தன. மீதமிருந்த ஐந்து நாள்களை மறுவருடத்தில் எஞ்சியிருக்கும் ஐந்து நாள்களையும் சேர்த்து, வரும் முப்பது நாள்கள் வந்தவுடன் அதைப் பதிமூன்றாவது மாதமாக கணக்கிட்டார்கள்.

சீனர்கள் வருடம், மாதம், நாள்கள் அனைத்தையும் பன்னிரண்டாக வகுத்து அவற்றிற்கு பன்னிரண்டு பெயர்களையும் சூட்டினார்கள். அப்பெயர்கள் அனைத்தும் மிருகத்தின் பெயர்கள்.

அவை, ச்சூ (எலி), ச்சோவ் (மாடு), இன் (புலி), மாவ் (முயல்), ச்சென் (டிராகன்), ஸ்சு (பாம்பு), வ்வு (குதிரை), வெய் (ஆடு), சேன் (குரங்கு), யூ (சேவல்), இஸ்ஸி (நாய்), ஹாய் (பன்றி) என முறையே பன்னிரண்டு விலங்குகளின் பெயர்களை மாதத்திற்கும் வருடத்திற்கும் சூட்டினார்கள்.

ரோமானியர்கள் பயன்படுத்திய காலண்டர் கி.மு. 750-ஆம் ஆண்டு பண்டைய ரோம் நாட்டு தலைவர் ரோமுலஸ் என்பவரால் உருவாக்கப்பட்டது. இவர் தயாரித்த காலண்டரில் பத்து மாதங்கள் மட்டுமே இருந்தன. வருடத்திற்கு முந்நூறு நாள்கள் என்று கணக்கிட்டு, பத்து மாதங்களாக பிரித்திருந்தார். இவருக்குப் பின் ரோம் நாட்டை ஆண்ட அரசர் நியுமா இரண்டு மாதங்களைச் சேர்த்து பன்னிரண்டு மாதங்களாகக் கொண்டுவந்தார். வருடத்தின் முதல் மாதத்தை மார்சியஸ் என்று குறிப்பிட்டார். இது ரோமானியப் போர்க் கடவுளான மார்சைக் குறிப்பதாகும்.

கி.மு. முதலாம் நூற்றாண்டில் பேரரசர் ஜூலியஸ் சீசர், காலண்டரைச் சீர்திருத்தி "ஜூலியன் காலண்டர்' என்ற பெயருடன் புதிய காலண்டரை அறிமுகப்படுத்தினார். பூமி சூரியனைச் சுற்றி வர சரியாக 365 1/4 நாள்கள் எடுத்துக் கொள்கிறது. இதுவரை வந்த காலண்டர்களில் இந்த கால் நாளை யாரும் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் ஜூலியன் காலண்டரில் ஒவ்வொரு நான்காண்டுகளுக்கு ஒருமுறை கால் நாள்கள் சேர்ந்து ஒரு முழு நாளாக பிப்ரவரி மாதத்தில் இணைக்கப்பட்டது. இதைத்தான் "லீப் நாள்' என்று பெயரிட்டார்கள்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com