பூமி உருண்டையானது என்று முதல் சொன்னது யார்?

இப்போது இந்தக் கேள்விக்குப் பதில் சொல்வது என்பது சிரமமானது. பண்டைக் காலத்தில் நாகரிக வளர்ச்சியடைந்த ஒவ்வொரு நாட்டிலும், அந்த நாட்டைச் சேர்ந்த ஞானிகள் இருந்தார்கள். பூமி உருண்டையானது என்னும் கருத்து அவ
பூமி உருண்டையானது என்று முதல் சொன்னது யார்?
Updated on
2 min read

இப்போது இந்தக் கேள்விக்குப் பதில் சொல்வது என்பது சிரமமானது. பண்டைக் காலத்தில் நாகரிக வளர்ச்சியடைந்த ஒவ்வொரு நாட்டிலும், அந்த நாட்டைச் சேர்ந்த ஞானிகள் இருந்தார்கள். பூமி உருண்டையானது என்னும் கருத்து அவர்களில் பலருக்கும் ஏற்பட்டிருக்கக்கூடும். உதாரணமாக, பண்டைக் கிரேக்க நாட்டின் சிந்தனையாளரான பித்தக்கோரஸ், மற்ற எல்லா ஜியோமிதி வடிவங்களையும்விட பூமிக்கு கோள வடிவமே மிகவும் ஏற்றதாக இருக்க வேண்டும் என்று நம்பினார். ஆக, நமது உலகமானது பிரபஞ்சத்தின் மையத்தில் இருப்பதாக வைத்துக்கொண்டால், இது வேறு எந்த வடிவத்திலேனும் இருக்க முடியுமா?

பல விஞ்ஞானிகள் பித்தகோரஸின் கருத்தை ஏற்றுக்கொண்டனர். பூமி கோளவடிவமானது என்பதை எப்படி நிரூபிப்பது என்பதுதான் விடைகாண வேண்டிய கேள்வியாக இருந்தது.

சொல்லக்கூடிய காரணங்களாலும், எடுத்துக்காட்டுகளாலும் எல்லாச் சந்தேகங்களையும் தீர்த்துவிட முடியாதுதானே?

கிரேக்கத் தத்துவ ஞானி அரிஸ்டாட்டில் இதை நிரூபித்தார். அவர், பல அறிவியல் துறைகளிலும் மிகுந்த அறிவு மிக்கவர். மெத்தப் படித்த பேரறிஞர். அவர் மகா அலெக்சாண்டரின் ஆசிரியராகவும் இருந்தார்.

அரிஸ்டாட்டில் ஏதென்சில் புகழ் மிக்க தத்துவப் பள்ளி ஒன்றை நிறுவியிருந்தார். அவரது புகழ் ஏராளமான மாணவர்களையும், சீடர்களையும் அவருக்குப் பெற்றுத் தந்தது. அலெக்சாண்டர், புகழின் உச்சியில் இருந்தபோதும்கூட தன் ஆசிரியரான அரிஸ்டாட்டிலை ஒருபோதும் மறக்கவே இல்லை. அவர் தன் ஆசிரியருக்குக் கடிதங்கள் எழுதினார். பல நாடுகளின் வழியாகத் தான் கடந்து சென்றபோது பெற்ற அரிய, ஆர்வமூட்டும் பொருட்களை அவருக்கு அனுப்பி வைத்தார்.

உண்மையான விஞ்ஞானிகள் என்ன விரும்புவார்கள்? இன்னும் அதிகமாக அறிந்துகொள்ள வேண்டும் என்றுதான் விரும்புவார்கள். அரிஸ்டாட்டிலும் இவ்வாறுதான் விரும்பினார். சேகரிப்பதற்காக எவரும் வெட்கப்பட வேண்டாத ஒரு செல்வம் அறிவுதானே?

ஆனால், அரிஸ்டாட்டில் காலத்தில்கூட விடுவிக்கப்படாத ஒரு புதிராக இருந்தது சந்திரகிரகணம். ஏன் சந்திரகிரகணம் ஏற்படுகிறது என்று யாருக்கும் தெரியவில்லை. அதன் வெள்ளிபோன்ற ஒளியைத் திருடிக்கொள்வதற்காக, கெடுதல்கார அரக்கர்கள் சந்திரனைத் தூக்கிக்கொண்டு போய்விட்டதாக சிலர் நினைத்தார்கள்.

இன்னும் சிலர், சந்திர கிரகணம் என்பது போர், பஞ்சம், கொள்ளை நோய் ஆகியவற்றிற்கான அறிகுறி என்று நம்பினார்கள். சந்திரகிரகணம் காற்றை நச்சுப்படுத்துகிறது என்றும், அது மக்களை மூச்சுத் திணற வைக்கும் என்றும் சிலர் கதைகள் சொன்னார்கள். எதையும் எளிதில் நம்பிவிடும் மக்கள், சந்திரகிரகணத்தின்போது ரகசிய அறைகளில் ஒளிந்துகொண்டார்கள். சன்னல்களை மூடிக்கொண்டார்கள். ஒளி வரக்கூடிய சின்ன விரிசல் தென்பட்டாலும் அதைக் களிமண்ணாலும், சுண்ணாம்பாலும் பூசி மறைத்தார்கள்.

ஆனால், சந்திரகிரகணத்திற்கு அரிஸ்டாட்டில் அஞ்சவில்லை. அவர் சில முறை சந்திரகிரகணத்தை உற்றுக் கவனித்தார். அவருக்கு எதுவும் ஏற்பட்டுவிடவில்லை. "சூரியனுக்கும் நிலவுக்கும் இடையில் பூமி வருகிறபோது, பூமியின் நிழல் சந்திரனில் படிவதே சந்திரனில் காணக்கூடிய கருப்புப் புள்ளியாகும்'. என்னும் முடிவிற்கு வர அவரது ஆய்வுகள் உதவின. ஆனால், அந்த நிழல் ஏன் எப்போதுமே உருண்டையாக இருக்கிறது?

அரிஸ்டாட்டில், தட்டையான வட்ட ரொட்டியை சூரியனுக்கு நேராகப் பிடித்து அதன் நிழலைப் பார்த்தார். ஒரு நிலையில் அதன் நிழல் வட்டமாக இருந்தது. மற்றொரு நிலையில் அது கழிபோலத் தோன்றியது. எனவே, தட்டையான ரொட்டியைப்போல பூமி இருக்க முடியாது.

பிறகு, பாதி ஆரஞ்சை சூரியனுக்கு நேராக நீட்டினார். தட்டையான அல்லது வளைந்த பாகத்திற்கு நேராகச் சூரியன் வந்தபோது அது உண்மையான நிழலை ஏற்படுத்தியது. ஆனால், அது பக்கவாட்டில் திரும்பிய உடனேயே, நிழல் அரைவட்டமாகியது...

ஒரு முழு ஆரஞ்சால் மட்டுமே எப்போதும் உருண்டையான நிழலை ஏற்படுத்த முடிந்தது.

""இதன்படிப் பார்த்தால் பூமி உருண்டையாகத்தானே இருக்கவேண்டும்?'' என்று அரிஸ்டாட்டில் தன் மாணவர்களிடம் கூறினார். மேலும், தான் இந்த முடிவுக்கு வந்தது எப்படி என்பதையும் விளக்கினார். மாணவர்கள் தங்கள் ஆசிரியரின் அறிவைக் கண்டு வியந்தார்கள்.

ஆனால், ஒரு பிரச்னை மட்டும் தீர்க்கப்படாமல் இருந்தது. உலகத்தின் அடிப் பகுதியில் மக்கள் எப்படி வாழ முடியும்? அவர்கள் கவிழ்ந்து விழுந்துவிடுவார்களே!

ஏற்றுக்கொள்ளத் தக்க ஒரு விடையைக் கண்டுபிடிக்க அரிஸ்டாட்டிலால்கூட முடியவில்லை. ஏனெனில், பூமியின் ஈர்ப்பு விசைதான் பொருட்களைப் பற்றி நிற்கச் செய்கிறது என்பதை அந்த நேரத்தில் யாரும் அறிந்திருக்கவில்லை. புவி ஈர்ப்பு விசையானது, மனிதர்களை மட்டும் அல்லாது, மலைகளையும், வீடுகளையும், ஆறுகளையும், பெருங்கடல்களையும் என்று அனைத்தையும், ஏன் காற்றையும்கூட இழுக்கிறது.

இது அரிஸ்டாட்டிலுக்குத் தெரியவில்லை. எனவே அவரும் அவரது சீடர்களும், தென் கோளார்த்தத்தில் ஆட்கள் இருக்க முடியாது என்று தீர்மானித்தார்கள்...எனினும் அந்தக் காலத்தில்கூட சில விஞ்ஞானிகள் பூமியின் மறுபுறத்தில் ஆன்டிபோடுகள் இருந்திருக்கக்கூடும் என்று கருதினர்.

தொடரும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com